இஸ்ரேல் ஃபேஸ்புக் கூட்டு உடன்பாடு: ஃபலஸ்தீன பக்கங்கள் முடக்கம்

0

இஸ்ரேலிய அமைச்சகர்கள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் உடனான சந்திப்பு கடந்த செப்டெம்பர் 11  ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஃபேஸ்புக்கில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை நீக்குவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஃபேஸ்புக் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேலின் இந்த முடிவு இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலைதளகளினால் உலக மக்களிடையே பரவி வரும் BDS எனப்படும் இஸ்ரேலிய புறக்கணிப்பு போராட்டத்தின் வெற்றி என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஃபேஸ்புக் மற்றும் இஸ்ரேல் இதற்கு கூறும் காரணங்கள், இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகளால் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்பது.

இஸ்ரேல் ஃபேஸ்புக் உடனான கூட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இது பல மாதங்களாக திரைமறைவில் நடந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
(புதிய விடியல் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட கார்லோஸ் லாடுஃப் வரைந்த இஸ்ரேல் – ஃபேஸ்புக் குறித்த கேலிச்சித்திரம் ஒன்றை ஃபேஸ்புக் பிறர் பார்வையிட முடியாமல் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. )

கடந்த ஜூன் மாதம் ஃபேசஸ்புக்கின் இஸ்ரேலிய அலுவலகம் ஜோர்டானா கட்லர் என்பவரை கொள்கை மற்றும் தொடர்பு பிரிவு தலைவராக நியமித்திருந்தது. இவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் நீண்டகால ஆலோசகர் ஆவார். மேலும் இவர் ஃபேஸ்புக்கால் பணியமர்த்தபடுவதற்கு முன்னர் வாசிங்டன் இஸ்ரேலிய தூதரகத்தின் தலைமை பணியாளராக பணியாற்றி வந்தார்.

மேலும் ஜூன் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தன் தொடர்பான பதிவுகளை உன்னிப்பாக கவனித்து வந்தது. மேலும் பல ஃபலஸ்தீனியர்களை அவர்களது ஃபேஸ்புக் பதிவிற்காக கைதும் செய்தது. அவர்களின் பதிவுகளை அகற்ற ஃபேஸ்புக் நிறுவனத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதில் 95% வேண்டுகோள்களை ஃபேஸ்புக் நிறைவேற்றியுள்ளது.

தற்போது இணையதளத்தில் மிகப் பரவலாக வாசிக்கபப்டும் ஃபலஸ்தீனிய பதிப்பகங்களான குத்ஸ் மற்றும் ஷேஹாப் நியுஸ் ஏஜென்சி என்ற இரண்டின் பக்கத்தினை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் அதிகாரிகள் கூறுகையில், அந்த பக்கங்கள் தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டன என்றும் தங்களுக்கு அது குறித்து தெரிந்ததும் அது மீண்டும் சரி செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளனர்.

இது குறித்து குத்ஸ் இல் மேற்பார்வையாலராக பணியாற்றும் எஸ் அல் தின் அல் அஃராஸ் கூறுகையில், மதியம் 2 மணியளவில் குத்ஸ் பதிப்பகத்தின் ஆசிரியர்கள் மூன்று பேரின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதே போன்று ஷேஹாப் பதிப்பகத்தின் ஐந்து ஆசிரியர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தது தெரியவந்தது  என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு பதிப்பகத்தின் ஆசிரியர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும் இஸ்ரேல் ஃபேஸ்புக் ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

இஸ்ரேலியர்களுக்கு எதிரான வன்முறைகளை காரணம் காட்டி இஸ்ரேலிய எதிர்ப்பு பதிவுகளை நீக்கும் ஃபேஸ்புக், ஃபலஸ்தீனியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் மிகவும் சாதாரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்ற பதிவுகளை தடுக்கவோ அல்லது நீக்கவோ துளியும் அக்கறை கொண்டதில்லை என்பது எதார்த்தம்.

Comments are closed.