இஸ்ரேல் படையினரால் சுட்டுகொல்லப்பட்ட அப்பாவி ஃபலஸ்தீனியர்கள்

0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் கடந்த புதன்கிழமை இரண்டு ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேலிய படைகள் சுட்டுக்கொன்றனர்.
கர்பிணியான 23 வயது மரம் ஸாலிஹ் அபு இஸ்மாயில் மற்றும் அவரது 16 வயது சகோதரரை இஸ்ரேலியரை கத்தியால் குத்த முயன்றனர் என்று கூறி சுட்டுக் கொலை செய்துள்ளது இஸ்ரேலியப் படை. ஆனால் இவர்கள் இருவரும் அப்பாவிகள் என்றும் ஜெருசலேம் செல்லும் இவர்கள் வாகனங்களுக்கான பாதையில் சென்றதாகவும் இவர்களை நோக்கி இஸ்ரேலிய அதிகாரிகள் ஹீப்ரூ மொழியில் கத்தியது புரியாமல் அங்கேயே நின்றுவிட்டனர் என்றும் இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இன்னும் இப்ராஹீம் தனது சகோதரியின் கையை பிடித்துகொண்டு இஸ்ரேலிய அதிகாரிகளை விட்டு விலகியதாகவும் இஸ்ரேலிய படை இவர்களை நோக்கி சுட்டதும் மரம் ஸாலிஹ் கீழே சரிந்துவிட்டார் என்றும் இதனை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். தனது சகோதரிக்கு உதவ சென்ற இப்ராஹீமையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சுட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை பார்த்த ஃபலஸ்தீன பேருந்து ஓட்டுனர் இது குறித்து கூறுகையில் இவர்களை நோக்கி சுட்ட இஸ்ரேலிய அதிகாரி இவர்களிடம் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள சிமென்ட் தடுப்புக்கு பின்னால் இருந்தார் என்று கூறியுள்ளார். இன்னும் கொல்லப்பட்ட இருவரும் அங்கிருந்த இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எந்த வித அச்சுறுத்தலாகவும் இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இன்னும் இந்த படுகொலையை நேரில் பார்த்த மற்றொரு சாட்சியான தாஹா கூறுகையில் சுடப்பட்ட மரம் ஸாலிஹ் மற்றும் இப்ராஹீம் தரையில் வீழ்ந்ததும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் வந்து அவர்களை நோக்கி மீண்டும் சுட்டு அவர்கள் இறந்துவிட்டத்தை உறுதி செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இருவர் அருகிலும் கத்தியை வைத்து அவர்கள் கத்தியால் தாக்க முயன்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என்று கூறியுள்ளார்.
ஐந்து மாத கர்ப்பிணியும் 6 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கு தாயுமான மரம் ஸாலிஹ் மற்றும் இப்ராஹீம் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 200 பேர்களில் சேர்ந்துள்ளனர்.

 

Comments are closed.