இஸ்லாத்தை ஏற்று திருமணம் முடித்த பெண் அவரது விருப்பப்படி கணவனுடன் சேர்ந்து வாழலாம்: நீதிமன்றம் உத்தரவு

0

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பாயல் சிங்வி, இவர் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை ஆரிஃபா என்று மாற்றிக்கொண்டார். மேலும் அவர் ஃபைஸ் மோடி என்கிற முஸ்லிம் ஒருவரையும் திருமணம் முடித்தார். இந்நிலையில் ஹாதியா வழக்கை போல இவரது வழக்கிலும் இவர் கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுவிட்டார் என்று அவர் மீது ஆட்கொணர்வு மனுவை அப்பெண்ணின் சகோதரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் தனது சகோதரி பல மாதங்கள் ஃபைஸ் மோடியால் பின்தொடரப்பட்டு அச்சுறுத்தப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுவை தொடர்ந்து நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே அந்தப்பெண் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது அவரது மதமாற்றம் குறித்தும் திருமணம் குறித்தும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தான் விருப்பப்பட்டே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகவும் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணமும் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபால் கிருஷ்ண வியாஸ் தலைமையிலான டிவிஷன் பென்ச், ஆரிஃபா வயது முதிர்ந்த ஒரு மேஜர் என்றும் அவருக்கு அவரது விருப்பத்தின் அடிப்படையில் எவரையும் திருமணம் செய்ய அவருக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் அதிகளவிலான வலது சாரி இந்து அமைப்பினர் கூடி ஆரிஃபாவை அவரது கணவருடன் அனுப்பி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர்.

Comments are closed.