இஸ்லாமியர்களை சமமாக கருதவில்லை! காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம்- இம்ரான் கான்!

0

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் செல்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது இந்தியா. பிறகு, நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பாஜக அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், “காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை அடிபணிய வைக்க வேண்டும் என்று இந்தியா அரசு விரும்புகிறது. மக்கள் தொகை மாற்றத்தின் மூலம் காஷ்மீரில் இன அழிப்பு செய்வதற்கு இந்தியா விரும்புகிறது.

அவர்கள், இன்றும் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைக்கிறார்கள். தற்போதைய சூழலில், இந்தியாவில் அனைவரும் சமம் இல்லை. இந்தியா, இந்து நாடாக இருக்க விரும்புகிறது. அவர்கள், இஸ்லாமியர்களை சமமாக கருதவில்லை. காஷ்மீர் மக்கள் தொகையில் மாற்றம் கொண்ட வரவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தின்படியும் தவறு. மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக, பா.ஜ.க அரசு கும்பல் கொலையில் ஈடுபட்டுள்ளது. இது அவர்களது இனவாத கொள்கையின் ஒரு பகுதி. தற்போது, அந்த கருத்தியலை, காஷ்மீர் மீதும் திணித்துள்ளது.

காஷ்மீரில் அவர்கள் தற்போது இன அழிப்பை மேற்கொள்ளப் போகிறார்கள் என்று எனக்கு அச்சமாக உள்ளது. பா.ஜ.கவின் இனவாத கருத்தியலால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் விதத்தை  ஐ.நாவுக்கும் சர்வதேசங்கள் முன்பும் எடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

Comments are closed.