இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கிறோம்: பஜ்ரங்தள் பாணியில் ஹிந்து சேனா ஆயுத பயிற்சியளிக்கத் திட்டம்

0

சமீபத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பஜ்ரங்தள் நடத்திய ஆயுதப் பயிற்சியை அடுத்து பஜ்ரங்தள் தலைவர் மகேஷ் மிஷ்ரா கைது செய்யப்பட்டார். தற்பொழுது டில்லியில் ஹிந்து சேனா என்கிற அமைப்பு பாராளுமன்றத்திற்கு மிக அருகில் இதே போன்றதொரு பயிற்சியை செய்யப் போகிறோம் என்று கூறியுள்ளது.

இந்த அமைப்பின் தேசிய தலைவரான விஷ்ணு குப்தா என்பவர், தங்கள் பயிற்சி முகாம் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து போராட இளம் தலைவர்களை பயிற்றுவிக்கும் என்று கூறியுள்ளார். இந்த முகாம் ஜூன் மாதம் 1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் எங்கு நடைபெறும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு நபரும் போராளியாக இருக்க வேண்டும் என்றும் இந்த பயிற்சி யாரையும் தாக்க வேண்டும் என்பதற்காக அல்ல, தங்களை தற்காத்துக் கொள்வதற்காக என்றும் இதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த முகாமில் 20 முதல் 30 வயதுடைய 100 இளம் தலைவர்களை பயிற்ருவிக்கப் போவதாகவும் இந்த பயிற்சிக்காக 100 துப்பாக்கிகளை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். துப்பாக்கி சூடு பயிற்சிக்காக பல ஐ.எஸ்.ஐ.எஸ். உருவ பொம்மைகளை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற பயிற்சிகள் ஒன்றும் தங்களுக்கு புதிதல்ல என்று கூறிய குப்தா, இந்த முறை துப்பாக்கிகளும் சேர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் பங்கு பெறுபவர்களை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பயிற்ருவிப்பார் என்று கூறியுள்ளார்.

இந்த பயிற்சிக்கு அனுமதி அளிக்க வேண்டி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் விண்ணப்பித்துள்ளதாக கூறிய குப்தா உத்திர பிரதேசத்தில் பஜ்ரங்தள் அமைப்பினர் மீது கைது நடவடிக்கை எடுத்தது சரியல்ல என்று கூறியுள்ளார். மேலும் டில்லியில் அதிகாரம் பா.ஜ.க வின் கைகளில் இருக்கிறது என்றும் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்.

மே மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று பூஜை செய்தது, கடந்த வருடம் கேரளா ஹவுஸில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது என்று போலி புகாரளித்தது என்று பல சாதனைகளுக்கு உரிமையானவர்கள் இந்த ஹிந்து சேனா அமைப்பினர்.

Comments are closed.