இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் மூத்த தலைவர் தலாத் செனாவி (85) கெய்ரோவில் காலமானார்

0

எகிப்தின் பிரசித்திப் பெற்ற அமைப்பான அல்இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் மூத்த தலைவர் தலாத் செனாவி (85) உடல்நலக் குறைவு காரணமாக கெய்ரோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 18 வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ள தலாத் செனாவி, கடைசிவரை தன்னுடைய இலட்சியப் பயணத்தில் இருந்து பின்வாங்கவில்லை. 1935ம் ஆண்டு பிறந்தார் தலாத் செனாவி. அவருடன் சகோதர, சகோதரிகள் 14 பேர் ஆவர். தந்தை பள்ளி தலைமையாசிரியர் ஆவார்.

பள்ளிப்படிப்பை தொடங்கிய போதே இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு வகையான மாணவர் பிரச்சனைகளில் முன்னணியில் நின்றார். இதனால், சிறு வயதிலிருந்தே அவருடைய போராட்ட குணமும்,தலைமைத்துவ பண்புகளும் முன்னேற்றம் அடைந்தது. பள்ளிக் காலங்களிலும், கல்லூரி காலங்களிலும் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் தலாத் செனாவி.

அவர் வசிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உறுப்பினர்களுடன் அதிகமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இதனால்,தன்னுடைய கிராமம் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களிலும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தீர்த்து வைக்கும் வேலைகளையும் முழு ஆர்வத்துடன் செய்து வந்தார் தலாத் செனாவி. இஹ்வானுல் முஸ்லிமீன் நடத்தக்கூடிய அறிவு, விளையாட்டு,கலாச்சார நிகழ்வுகள், ஆன்மீக வகுப்புகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு, தன்னை ஒரு சமூகத்துக்கு பயன்படும் நபராக மாற்றிக் கொண்டார்.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை பற்றி தலாத் செனாவி கூறும்பொழுது, “இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் முஸ்லிம்களை சிந்தனை ரீதியாகவும், போராட்டக் குணமுள்ளவராகவும் உருவாக்கியது. முஸ்லிம்களை ஜிஹாது செய்ய தூண்டிக் கொண்டே இருந்தது. 1948ல் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுக்கும்பொழுது நடைபெற்ற போரில் இஹ்வான்கள் பெருமளவு பங்கெடுத்தனர்.

அப்பொழுது, என்னுடைய வயது வெறும் 13தான் ஆகும். வாராவாரம் நடைபெறக்கூடிய இஸ்லாமிய வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டேன். இமாம் ஹஸனுல் பன்னா இந்த அமர்வை ஒழுங்கப்படுத்துவார். அவருடைய வகுப்பு நாட்டை இஸ்லாமிய வழியில் கட்டமைப்பதற்கான பொறுப்பை உணர்த்துவதாக இருக்கும்” என்றார்.

மேலும் கூறுகையில், “அல் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு 1928ம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருவர் கவனிப்பாரானால், ஷரீயாவை பாதுகாப்பதில் அது செய்துவரும் தொடர்ச்சியான தியாகங்களையும், சமூக ரீதியான மேம்பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் தெரிந்து கொள்வார்” என்றார்.

1955ல் கமால் அப்துல் நாசரை ஆட்சியில் இருந்து கவிழ்க்க இஹ்வான்கள் முயற்சி செய்கின்றனர் என்று கூறி, இஹ்வான்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைகளை மேற்ககொண்டனர் காவல்துறையினர். முக்கியமானவர்களை வலுக்கட்டாயமாக கைதும் செய்தனர். இதில், செனாவியும் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நீதிமன்றம் பத்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. அதன் பிறகு சிறைத்தண்டனை முடித்து வெளிவந்த தலாத் செனாவிக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு திரும்பவும் கைது செய்யப்பட்டார் தலாத் செனாவி. இந்த முறை ஐந்து வருடம் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது. சிறைத்தண்டனை வாழ்க்கையை தனக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாகும் என்று எண்ணிக் கொண்டார் தலாத் செனாவி.

சிறைத் தண்டனை முடித்து சிறிது காலம் இயக்கப்பணிகளில் இருந்த தலாத் செனாவி,மீண்டும் எகிப்து அரசை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று கூறி மறுபடியும் கைது செய்யப்படுகிறார் தலாத் செனாவி. இது, 1995ம் ஆண்டு. இப்பொழுது தலாத் செனாவி கைது செய்யப்பட்டு 1998ம் ஆண்டு வரை சிறைத்தண்டனையை அனுபவிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. இப்படி மொத்தம் 18ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் தலாத் செனாவி. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கியப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.