ஈடிஏ நிறுவனர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைவு!

0

சென்னை: கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரும், கல்வியாளருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று  07.01.2015 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் காலமானார்.

சில மாதங்களுக்கு முன் உலகத்தில் சக்தி வாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள்  இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

5

வாழ்க்கைக் குறிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் பிறந்தவரான பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களைப் பற்றி தமிழகத்தில் தொழிற்துறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஈடிஏ குழும நிறவனத்தை உருவாக்கியவர். இன்று தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் துபை, அபூதாபி என்று பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு அவருடைய உழைப்பு மிக முக்கியமானது.

6

கிரசன்ட் பல்கலைக்கழகம், பெண்கள் கல்லுரி, பள்ளிக்கூடங்கள் பலவற்றை நிறுவினார். அவையெல்லாம் இன்று திறம்பட செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பி.எஸ். அப்துர் ரஹ்மான் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பழமையான அண்ணா மேம்பாலம் கூட ஈடிஏ நிறுவனம்தான் கட்டியது. தனது சீதக்காதி டிரஸ்ட் மற்றும் ஜக்காத் நிதிக் கழகம் மூலமாக பல்வேறு தானதர்மங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இளமைக் காலம்

பி.எஸ்.ஏ. என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அப்துர் ரஹ்மான் அவர்கள் தனது பத்தாவது வயதிலேயே தன் இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப் பெரும் கனவு கண்டவர். அக்காலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை வீடு தேடிச் சென்று பள்ளி செல்ல வலியுறுத்தும் இயக்கத்தினை தன் நண்பர்களுடன் இணைந்து தலமையேற்று நடத்தியவர்.

2

தனது ஐந்தாம் வகுப்பு பள்ளிப் படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்த பின், இராமனாதபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ்பெற்ற சுவாட்ஸ் பள்ளியில் இணைந்தார். முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலகட்டத்தில் இவருக்குள் எழுந்த கேள்வி: ஏன் இது போன்ற தரமான பள்ளிகள் கிராமப் பகுதிகளில் குறைவாக அமையப் பெற்றுள்ளன? இதற்கான விடிவுதான் என்ன?

பி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பணத்தின் மதிப்பினையும், பண்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களயும் உணர்ந்தவரானார். தனது சம வயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம் வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பணடங்களே வாங்க பணமில்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்றதாழ்வுகளுக்கு முடிவு கட்ட தன் நண்பர்களுடன் இனைந்து தின்பண்டங்களை குறைந்த விலையில் மொத்த கொள்முதல் செய்து பணக்கார மாணவர்களுக்கு அதிக விலையில் விற்று அதன் மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக வினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முன்னுரை எழுதினார்.

3

எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தணியாத வியாபாரத் தாகம் இவரது பள்ளிப் படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தன் தந்தையார் புஹாரீ ஆலிம் அவர்களின் அனுமதி பெற்று, தனது 20வது வயதில் தனது கையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துணிப் பையுமாக கொழும்பு வந்து சேர்ந்தார்.

சோதனையான காலகட்டம்

முதலில் இவரது அறையில் வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.

வைர வியாபாரியான தன் தந்தையாருடன் முன்பு பலமுறை வைர வியாபாரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர். அதனால் இதே வியாபாரத்தினால் கவரப்பட்டு அதனைப் பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும் அவருடய பொருளாதார சூழ்நிலை தனியாக வியாபாரம் செய்ய அணுமதிக்காத நிலையில் காலம் கனியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதி காத்தார்.

ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லாமல் வளர்த்துக்கொண்டும் இருந்தார். விரைவில் காலம் அவருக்குச் சாதகமாக வந்தது. தனது தொழிலை முதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் என கீழ்த்திசை நாடுகள் முழுவதும் விரிவுபடுத்தினார்.

இதுவே வள்ளல் அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருணமாகக் கொள்ளலாம். வைர வியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.

1950களில் வைரத் தொழில் நிறுவனத்தை ஹாங்காக் மற்றும் பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை.

மதிநுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலு தாம் பி.எஸ்.ஏ. அவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும். எதார்த்தத் தன்மையும், நகைச்சுவை உணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக, நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேயே சொல்லி விடுவதில் வல்லவர்.

ஜனாஸா நல்லடக்கம்

அன்னாரது ஜனாஸா நாளை 08.01.2015 வியாழக்கிழமை ளுஹர் தொழுகைக்குப் பின்னர் 12.30 மணியளவில் வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திடுவோம்.

நன்றி : எம்.எம். முகைதீன், மஹ்மூத் நைனா, கீழக்கரை

Comments are closed.