உச்ச நீதிமன்றத்தில் பாபரி மசூதியை தாரை வார்க்கும் ஷியா வக்ஃப் வாரியம்

0

பாபரி மசூதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஷியா வக்ஃப் போர்ட் தாக்கல் செய்த அபிடவிட்டில் பாபர் மசூதி இருந்த இடத்தை ராமர் கோவில் கட்ட வழங்கிவிட்டு மசூதியை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் கட்டிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

மேலும், இந்த இரு இடங்களுக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க முடியுமோ அவ்வளவு இருப்பது சிறந்தது என்றும் ஏனென்றால் இரண்டு வழிபாட்டுத் தளங்களும் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் ஒரு வழிபாட்டை மற்றொன்று கெடுக்க நேரிடும் என்றும் இது பல நேரத்தில் மோதல்களில் முடியலாம் என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“இந்த பிரச்சனைக்குத் தீர்வாக மசூதியை மரியாதைக்குறிய புருஷோத்தமன் ஸ்ரீ ராமின் பிறப்பிடத்தில் இருந்து போதுமான தொலைவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் கட்டிக்கொள்ளலாம்” என்று ஷியா வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

இன்னும் இந்த பள்ளிவாசல் இடம் ஷியாக்களுக்கு சொந்தமானது என்பதால் இதில் சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“பாபரி மசூதி ஷியா வக்ஃப்பிற்கு சொந்தமானது என்பதனால் உத்தர பிரதேச ஷியா மத்திய வக்ஃப் வாரியத்திற்கே பாபரி மசூதி குறித்த அமைதி பேச்சு வார்த்தையில் தலையிட உரிமை உள்ளது” என்று நீதிமன்றத்தில் அது தெரிவித்துள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவிற்கு வர வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் உத்தர பிரதேச முதல்வர் அலுவலக பிரதிநிதிகளும் இந்த பிரச்சனையின் தீர்வுக்கு தங்களது அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று ஷியா வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்யா பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த பெட்டிஷனை விசாரிக்க நீதிபதி மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதி பென்ச் ஒன்றை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நியமித்துள்ளது.

முன்னதாக அலஹாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பென்ச் கடந்த 2010 ஆம் ஆண்டு பாபரி மசூதி இடத்தை சுன்னி வக்ஃப் வாரியம், நிர்மொஹி அகரா மற்றும் ராம் லல்லா ஆகிய மூன்று பிரிவினருக்கு சரி சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.