உச்ச நீதிமன்றத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறிய மத்திய அரசு

0

மியான்மரில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுவரும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து தப்பி இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு அடைக்கலம் தேடி வருகின்றனர் ரோஹிங்கிய முஸ்லிம்கள். இப்படியிருக்க கடும் எதிர்ப்புகளையும் ஐநாவின் அறிவுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களை வெளியேற்றப்போவதாக மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தங்களின் பதிலை அளித்த மத்திய பாஜக அரசு, ரோஹிங்கிய முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த அரசு, தற்போதைய நாட்டின் நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களை இந்தியாவின் வைத்திருப்பதால் இந்திய வளங்கள் சுரண்டப்படலாம் என்றும் அவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சட்ட விரோத குடியேறிகளை எவ்வாறு சட்டப்படி கையாள வேண்டுமோ அந்த முறைப்படியே ரோஹிங்கிய முஸ்லிம்களும் கையாளப்படுகிறார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்னும், இந்திய உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் பாகிஸ்தானின் ISI  உடன் தொடர்பு வைத்திருபவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. ரோஹிங்கிய முஸ்லிம்களை இங்கு தங்க வைக்க மியான்மார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா பகுதிகளில் வாடகைதாரர்கள் இயங்கி வருகிறர்கள் என்பதும் இந்த அகதிகள் வருகைக்கு ஒரு காரணம் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய அரசு தற்போது சுமார் 40000 ரோஹிங்கிய முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ரோஹிங்கிய முஸ்லிம்களில் இருந்து உள்ள தீவிரவாதிகள் டில்லி, ஹைதராபாத், மேவார் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளில் ஊடுருவி விட்டனர் என்றும் இவர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என்றும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறித்த மத்திய அரசின் இந்த கொள்கையில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் தங்களது பதிலில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி ரோஹிங்கிய முஸ்லிம்கள் எப்படி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதற்கான ஆதாரங்களை சீல் வைக்கப்பட்ட கடிதம் மூலம் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு சமர்பிக்க இருப்பதாகவும் மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஐநாவின் மனித உரிமை அமைப்பு தலைவர் ரோஹிங்கிய முஸ்லிம்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற எடுத்திருக்கும் இந்தியாவின் முடிவை கடுமையாக கண்டித்ததும் மோடியின் மியான்மார் பயணமும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Comments are closed.