உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: பாஜக எம்எல்ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க கூடாது என்று கிராமத்தாரை மிரட்டும் பாஜகவினர்

0

உண்ணா கற்பழிப்பு வழக்கு: பாஜக எம்எல்ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க கூடாது என்று கிராமத்தாரை மிரட்டும் பாஜகவினர்

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரின் நண்பர்கள் தன்னை கற்பழித்ததாக குற்றம் சுமத்திய சிறுமியின் உறவினர் ஒருவர், எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் தங்கள் கிராம மக்களை எம்.எல்.ஏ விற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கக் கூடாது என்று மிரட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கிராமத்தில் உள்ள எனது உறவினர்கள் மூலம், எம்.எல்.ஏ வின் ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமையன்று இரண்டு வாகனங்களில் எங்கள் கிராமத்திற்கு வந்து அந்த மக்களில் எவரும் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக வாக்குமூலம் எதுவும் தரக்கூடாது என்று மிரட்டியதாக அறிந்துகொண்டேன்.” என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் கிராம மக்களை வீடியோ எடுத்துள்ளனர். அந்த கும்பலில் ஒருவர் சிறை வார்டன் என்றும் அவர் எம்.எல்.ஏ வை சந்திக்க அடிக்கடி அவரது இல்லம் செல்பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து மக்கி காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு தனது உறவினர் ஒருவரிடம் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி எந்த ஒரு புகாரும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அக்கிராமம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பில் உள்ளனர் என்றும் அதனால் இப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என்றும் மக்கி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உண்ணா கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்கார் மீது மேலும் ஒரு கற்பழிப்பு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், தனது மகளை ஷாஷி சிங் என்பவன் ஏமாற்றி கற்பழித்துவிட்டு பின்னர் அவரை எம்.எல்.ஏ வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் 2017 ஜூன் 4 ஆம் தேதி எம்.எல்.ஏ தனது மகளை அவரது வீட்டில் வைத்து கற்பழிக்க ஷாஷி சிங் அவரது அறைக்கு வெளியே பாதுகாப்பிற்கு நின்றதாகவும் தெயவித்துள்ளார். மேலும் இது குறித்து தாங்கள் வெளியே கூறினால் தங்களது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக எம்.எல்.ஏ மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ. செங்காரை இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்ட கற்பழிப்பில் அவருக்கு உதவி புரிந்ததாக கூறப்பட்ட சிங்குடன் உண்ணாவிற்கு சிபிஐ அழைத்துச் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.