உண்ணா விரதத்தை கைவிட்ட, இஸ்ரேல் சிறையில் உள்ள ஃபலஸ்தீனியர்கள்

0

இஸ்ரேல் சிறையில் நிலவி வந்த மோசமான சூழ்நிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஃபலஸ்தீனிய சிறைவாசிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முடிவு எட்டப்பட்டதால் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி இஸ்ரேலிய சிறையில் உள்ள சுமார்  1500 ஃபலஸ்தீன சிறைவாசிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இத்தகைய போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டமாக கருதப்படுகிறது. ஃபலஸ்தீனிய சிறைவாசிகளை தனிமைச் சிறையில் அடைப்பதை கண்டித்தும் 1980 களில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ள விசாரணை எதுவும் இல்லாமல் ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப் படுவதை கண்டித்தும் ஃபதாஹ் அமைப்பின் முக்கிய தலைவரான மர்வான் பர்கவ்தி என்பவரால் இந்த உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்திஃபாதாவில் இவருடைய தொடர்புக்காக 2004ல் கைது செய்யப்பட்டு ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டார்.

இந்த உண்ணாவிரதத்தில் முன்னர் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளுடன் சிறைவாசிகளின் குடும்பத்தினருடனான சந்திப்புகளின் கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் சிறையில் தொலைபேசிகள் அமைத்து தரக் கோரியும் முறையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

40 நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தினால் இஸ்ரேலினுள் பதற்றம் நிலவியது. இஸ்ரேல் காஸா எல்லைகளிலும், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியிலும் மோதல்கள் ஏற்பட்டது.

தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளுடனான பாலஸ்தீனிய அத்தாரிட்டி நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கை தொடர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தங்களது உண்ணாவிரத்தத்தை முடித்துக்கொண்டனர்.

இது குறித்த செய்தியை PLO வின் சிறைவாசிகள் விவகார தலைவர் இஸ்ஸா கரகா தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் ஆணையர் ஜெய்த் ராஅத் அல் ஹுசைன் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஃபாலஸ்தீனியர்களின் நிலையை மேம்படுத்துமாறு கூறியிருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடுகள் குறித்த தகவல்களை கரகாவோ அல்லது இஸ்ரேலிய சிறைத் துறையோ தெரிவிக்கவில்லை. ஆயினும், முன்னர் தடை செய்யபப்ட்ட குடும்பத்தினர் உடனான சந்திப்புகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்படும் என்று இஸ்ரேலிய சிறைத்துறை கூறியுள்ளது.

இந்த உடன்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹ்மூத் அபாஸின் ஃபதாஹ் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஜமால் ம்ஹெய்சென், “தீவிரமான பேச்சுவார்த்தைகளுக்கிடையில் சிறைவாசிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணக்கமான உண்டன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தற்போது உண்ணாவிரதம் முடிவிற்கு வந்துள்ளது.’ என்று கூறியுள்ளார். மேலும் “இன்று ஃபலஸ்தீனிய மக்களுக்கும் ஃபலஸ்தீனிய சிறைவாசிகளுக்கும் அவர்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்திர்கான போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

ஃபலஸ்தீனிய வெளியுறவுத் துறை அமைச்சகதிர்காக சிறைவாசிகள் குறித்த விவகாரங்களை மேற்பார்வையிடும் மஜீத் பம்யா, இந்த உண்ணாவிரதத்தின் முடிவு வெற்றி என்று கூறியுள்ளார். “அடிப்படை வசதிகளுக்கான சிறைவாசிகள் நடத்திய உண்ணாவிரதத்தில் மிகப்பரவலானதும் அதிகநாட்கள் நீடித்ததும் இந்த உண்ணாவிரத போராட்டம் தான்.” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னர் சிறைவாசிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத இஸ்ரேலிய அரசு இந்த உண்ணாவிரத போராட்டத்தை வன்முறை கொண்டு ஒடுக்க நினைத்தது என்றும் பின்னர் அவர்களின் அந்த முயற்ச்சி தொல்வியுரவே பேச்சுவார்த்தைக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.