உண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள்

0

உண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள்

தெஹ்லான் பாகவி எஸ்.டி.பி.ஐ.,

மத்திய சென்னை வேட்பாளர்

அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கூட்டணி, தொகுதி நிலவரம், தேர்தல் வியூகம் குறித்து புதிய விடியலுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து…

கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் ஒரு சீட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் எஸ்டிபிஐ கட்சி ஓரு சீட்டை பெற்றுக் கொண்ட காரணம் என்ன?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம் பெற்ற சமயத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் என்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பெரிய அளவில் நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் போதும் என்ற எங்கள் கட்சியின் நிர்வாகக் குழுவின் முடிவை ஏற்றுக் கொண்டோம். காரணம், நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல். ஆறு சட்டன்ற தொகுதிகளின் பரப்பளவை கொண்ட ஒரு தொகுதியில் பணியாற்றுவது என்பது எங்களை பொறுத்தவரை மிகப் பெரிய சவாலாக இருக்கும். பல தொகுதிகளில் போட்டியிட்டால் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். பிரச்சாரங்கள் மேற்கொள்வது, பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு தொகுதியில் வலிமையாக போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தோம். அந்த முடிவு மிகச் சரியானது என்றே நினைக்கிறோம்.

கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ள நிலையில் ஒரே தொகுதியில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.  நமக்கு பலம் அதிகரிக்கும் சமயத்தில், அதற்கான வலிமையை பெறும் போது அதற்கு தகுந்தாற் போல் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் ஆரோக்கியமான முடிவாகும்.

மத்திய சென்னை தொகுதி தமிழ்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மையப்பகுதி. இங்கு நாம் களப்பணியாற்றுவது தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரல் எதிரொலிக்கின்ற ஒரு சூழலை உருவாக்கும்; முழுவதுமாக மக்களுடைய கவனத்தை பெறும். இது மட்டுமன்றி, மத்திய சென்னை பகுதியை பொறுத்தவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கட்டமைப்பு மிகவும் பலமாக உள்ளது. கட்சி தொடங்கி கடந்த 10 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு மக்களுக்காக, சிறுபான்மை சமூக மக்களின் உரிமைக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுப்பதில் அனுதினமும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்திய முக்கியமான களம் மத்திய சென்னை. இங்கு வசிக்கும் சிறுபான்மை சமூக மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் அதனுடைய கட்டமைப்பையும் போராடுகின்ற குணத்தையும் நன்கு அறிந்து இருக்கிறார்கள்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்ட போது எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆற்றிய பணிகள் அனைத்தையும் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள், தெரிந்து இருக்கிறார்கள் என்ற காரணத்தால் இங்கு நம்மால் ஒரு வலிமையான தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு மத்திய சென்னை தொகுதியை நாங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

இரண்டாவது இந்த தொகுதியில் திமுகவின் வேட்பாளர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதுதான் எங்களின் பலம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு பக்கம் பணபலத்தை மட்டுமே நம்பி களத்தில் இருக்கின்ற ஒரு வேட்பாளர், மற்றோரு பக்கம் மக்களுக்காக செய்த பணிகளை, போராட்டங்களை நம்பி நாங்கள் களம் இறங்குகிறோம் ஒரு சவாலாகக் கொண்டு இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிதான் என்பதை மறுக்க முடியாது. பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கு நம்பிக்கையான தேர்வு திமுக அல்ல என்பதையும் இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். திமுக தனது 20 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. அவர்களின் கூட்டணி கட்சியில் உள்ள முஸ்லிம் கட்சிகளும் புறக்கணிப்பட்டு இருப்பதையும் கவனிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் நலன் சார்ந்த இடஒதுக்கீடு, சிறைவாசிகள் விடுதலை, முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் திமுக வெளியிடவில்லை. காலம் காலமாக திமுகவை நம்புவது என்ற நிலையில் இருந்து நம்மை மாற்றி நமக்கான ஒரு வலிமையை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எதிர்கின்ற வலிமையான அணி அமமுக & எஸ்.டி.பி.ஐ. அணிதான். பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு திமுக வை விட அமமுக & எஸ்.டி.பி.ஐ. கூட்டணிதான் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க.வின் நெருக்கடிகளை இந்த கூட்டணி தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சிதான் வலிமையாக களமாடி வருகிறது. ஆகையால் நாங்கள் வலிமையான பா.ஜ.க.வின் எதிர்ப்பாளர்கள் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தேர்தலில் கூட்டணி பெறும் வெற்றியும் வாக்குகளும் அதனை நிரூபிக்கும்.

காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள அணிதான் பா.ஜ.க.வுக்கு எதிரான அணி என்பது ஒரு தவறான பார்வை. அப்படியென்றால் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆகியோர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடுகின்றனர். அவர்கள் மதச் சார்பற்ற சக்தி இல்லையா? இதுபோன்று பல மாநிலங்களில் காங்கிரஸ் அணியை எதிர்த்து போட்டியிடுகின்ற சூழல் இருக்கிறது. காங்கிரஸ் மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து இருக்க வேண்டும். அந்த செயலை முன்னெடுக்க தவறியது காங்கிரஸ் கட்சியின் தோல்வியாக, மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளின் தோல்வியாக கருதுகிறேன். அதற்காக மதச் சார்பற்ற கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்க முடியாது.

மற்றொரு செய்தியையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அமமுக & எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வெற்றி பெறுகின்ற போது இந்த கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதச் சார்பற்ற அரசை மத்தியில் உருவாக்குவதற்கு மிக வலிமையான ஒரு ஆயுதமாக, தோள் கொடுக்கக் கூடியவர்களாக, துணை நிற்கக் கூடியவர்களாக இருப்போம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.டி.பி.ஐ. கட்சி வாக்குகளை பிரிப்பதற்காக இத்தொகுதியில் போட்டியிடவில்லை. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் அணிதான் முதலாவது அணி. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராகிய நான் தான் முதலாவது வேட்பாளர். அனைத்து சமூக மக்களின் வாக்குகளையும் ஒன்று சேர்ப்பதற்காக எஸ்.டி.பி.ஐ.கட்சி போட்டியிடுகிறது.

நிச்சயமாக எங்களால் சந்திக்க முடியும். கடந்த தேர்தல்களில் தனித்து நின்று பல்லாயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். மக்கள் எங்களை நம்பி வாக்களித்தனர். அதனால் நிச்சயமாக பணம் கொடுக்க மாட்டோம். வாக்காளர்களிடமிருந்து பணம் வாங்குவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து தேர்தலை சந்திக்கிறோம். தேர்தல் செலவுக்கு மக்களிடமிருந்தே பணத்தை பெறுவோம். நல்ல வேட்பாளர் யார், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுகிற வேட்பாளர் யார் என்பதை சிந்தித்து நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, தமிழக மக்கள் சிந்திக்க கூடியவர்கள், அரசியல் புரிதல் உள்ளவர்கள். பணபலம் மட்டுமே தேர்தல் முடிவை தீர்மானித்து விட முடியாது. அப்படி சொல்வது தமிழ்நாட்டு மக்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடும். தேர்தலுக்காக யார் எவ்வளவு பணத்தை அள்ளிக் கொடுத்தாலும் மக்கள் சரியாக சிந்திப்பார்கள். மக்களிடம் நடைமுறை எதார்த்தத்தை முன்வைப்போம். கார்ப்பரேட் முதலாளி வெற்றி பெற வேண்டுமா அல்லது உங்களுக்காக பணியாற்றுகின்ற உங்கள் ஊழியன், சேவகன் வெற்றி பெற வேண்டுமா என்பதுதான் இந்த தேர்தலில் எங்களின் மிக முக்கியமான முழக்கமாக இருக்கும்.

உண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள் என்பதையே நாங்கள் முன் வைக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் அதிமுக, திமுகவிற்கு மாற்றத்தை விரும்புகின்றனர். அதேபோன்று பா.ஜ.க.வுக்கு எதிராக மத்தியில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஒருமாற்றத்தை விரும்புகின்ற தமிழக மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டும்தான் ஒரே மாற்று என்பதால் அதை மக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கின்ற இஸ்லாமியர்களுடைய பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைந்து வருகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கூட முஸ்லிம்களுடைய நலனுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலனுக்காக வலிமையாக குரல் எழுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை போல தைரியமுள்ள கட்சியின் உறுப்பினர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்வது இந்த சமூகத்தினுடைய வலிமைக்கும் பாதுகாப்பிற்கும் நிச்சயமாக அவசியம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியை பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியும் அழிப்பதற்கும் ஒழிப்பதற்கும் கடுமையான நெருக்கடிகளை முன்னெடுக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினுடைய வேட்பாளராகிய நான் மத்திய சென்னையில் வெற்றி பெறுவது என்பது இந்த கட்சி மேலும் வலிமை அடைவதற்கு உறுதுணையாக இருக்கும். இது தனி மனிதர்களின் கட்சி அல்ல. சமூகத்தின் பாதுகாப்பிற்கும் வலிமைக்கும் அவசியமான கட்சி என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராகிய நான் வெற்றி பெற்றால், முஸ்லிம்களுக்கும் இதர ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக, உரிமை குரலாக இருப்பேன். அதே சமயத்தில் அனைத்து சமூக மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டின் மத ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதற்கும் முன்னணியில் நிற்பேன். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பது, தமிழர்களுடைய உரிமைகளை பாதுகாப்பது, தமிழ் இனத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நான் வலிமையாக நின்று களமாடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள் காரணமாக அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பில்லை. சிறுபான்மை மற்றும் தலித் சமூக மக்கள் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் கீழ் கடும் இழப்புகளை சந்தித்துள்ளனர். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் தொடர்ந்து போராடி வருகிறோம்.

திமுகவின் வேட்பாளர் தயாநிதி மாறனை பொறுத்தவரை இரண்டு முறை வெற்றி பெற்று மத்திய சென்னை தொகுதிக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இஸ்லாமிய சமூக மக்களுக்கு குரல் கொடுத்தவர் அல்ல. பாரதிய ஜனதாவை எந்த நேரத்திலும் வலிமையாக எதிர்த்தவரும் அல்ல. பாரதிய ஜனதாவோடு கூட்டணியில் இருந்த கட்சி திமுக. பா.ஜ.க.வின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் தயாநிதி மாறன். இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக மக்கள் சிந்திப்பார்கள். இறைவனுடைய அருளால் எனது வெற்றியை உறுதியாகவே நம்புகிறேன்.

பேட்டி: காதர்

Comments are closed.