உத்தராகண்டில் முஸ்லிம் கடைகளை எரித்த வலதுசாரி இந்து குண்டர்கள்: சமூக வலைதளத்தில் பரவிய போலிச் செய்தியால் வன்முறை

0

உத்தராகண்டில் முஸ்லிம் கடைகளை எரித்த வலதுசாரி இந்து குண்டர்கள்: சமூக வலைதளத்தில் பரவிய போலிச் செய்தியால் வன்முறை

உத்தராகண்டின் அகஸ்தியமுனி பகுதியில், சில வலதுசாரி இந்து அமைப்புகளும் அப்பகுதி வியாபார சங்கத்தினர் சிலரும் சேர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமணா சுமார் 15 கடைகளை சூறையாடி தீவைத்துள்ளனர். இதற்கு காரணம் பத்து வயது இந்து சிறுமி ஒருவரை முஸ்லிம் ஒருவர் கற்பழித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலியான செய்தி என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை அகஸ்தியமுனி காவல்நிலையம் அருகில் சுமார் 2000 பேர் கொண்ட கும்பல் கூடி கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட  சிறுமிக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டுள்ளது. அதே நேரத்தில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 15 கடைகளை அந்த கும்பலில் சிலரும், அப்பகுதி வியாபார சங்கத்தை சேர்ந்தவர்களும், அப்பகுதி மாணவர் அமைப்பான ஜெய் ஹோ என்ற அமைப்பினர் மற்றும் ஏபிவிபியினர் சேர்ந்து சூறையாடியுள்ளனர்.

இந்த வன்முறை கும்பல் முஸ்லிம்களின் கடைகளில் உள்ள மொபைல் ஃபோன்கள், கைக்கடிகாரம், ஆடைகள், காய்கறி முதற்கொண்டு பொருட்கள் அனைத்தையும் சூறையாடி பின்னர் கடைகளுக்கு தீவைத்துள்ளனர் என்றும் ஆனால் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ருத்ரபிரயாக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறை சூறையாடல் சம்பவத்திற்குப் பிறகு மாவட்ட மாஜிஸ்திரேட் மங்கேஷ் கில்டியால் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இந்து சிறுமி கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி போலியானது என்று விளக்கமளித்துள்ளார்

தனது வீடியோவில் அவர், சிறுமி கற்பழிக்கப்பட்டதாக கூறும் அந்த வீடியோவில் உள்ளவர்களின் முகங்கள் தெளிவாக இல்லை, அந்த வீடியோவில் உள்ள ஆண் மற்றும் பெண் யாரென்று தெரியவில்லை. மேலும் இந்த கற்பழிப்பு தொடர்பாக எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இந்த போலியான வீடியோவை பரப்பிவிட்ட நபர்களை நாங்கள் தேடி வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வன்முறை நடைபெற்றுள்ள பகுதி கேதர்நாத் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. அப்பகுதி மக்களின் கருத்துப்படி இத்தகைய மத விரோத வன்முறை சம்பவம் நடைபெறுவது அப்பகுதிக்கு இதுவே முதன்முறை என்று கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறை குறித்து அகஸ்தியமுனி பகுதியில் வசித்து வரும் கஜேந்திர ரவ்டேலா என்பவர் கூறுகையில், “அகஸ்தியமுனியில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். தற்போது தங்கள் கடைகள் சூறையாடப்பட்ட முஸ்லிம்களில் பலர் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். இன்று வரை நான் இது போன்று மத வன்முறை சம்பவங்கள் இங்கு நடைபெற்று கண்டதில்லை. இன்று நடைபெற்றது அதிர்ச்சியளிக்கின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடைகளை சூறையாடியவர்கள் மீதும் போலியான செய்தியினை பரப்பியவர்கள் மீதும் அகஸ்தியமுனி காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவ தொடர்பாக காவல்துறையால் சிலர் கைது செய்யப்பட்டும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.

Comments are closed.