உத்தராகண்ட்: மத மோதலில் 32 பேர் காயம்

0

உத்தராகண்ட் ஹரித்வார் மாவட்டத்தில் குப்பை வியாபாரி ஒருவரின் கடையை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறு மத மோதலாக வெடித்துள்ளது. இதில் 12 காவல்துறையினர் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் இரு குழுக்களிடையே கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குழுக்களை சேர்ந்த 20 பேர்களுக்கும் 12 காவல்துறையினருக்கும் மோதலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறை அதிகாரி பிரதாப் சிங் கூறியுள்ளார். மோதலை கலைக்க காவல்துறை வானை நோக்கி சுட்டும், தடியடியும் நடத்தியுள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரது கடையை முன்னாள் எம்.எல்.ஏ.குன்வர் பிரணாவ் சிங் இன் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக காலி செய்துள்ளனர். இந்த நிகழ்வின் போது குன்வர் பிரணவின் ஆட்கள் புனித நூல்களை சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து சிறுபான்மை சமூகத்தினர் குன்வரின் வீட்டின் முன்பு ஆர்பாட்டம் செய்தனர். இந்த ஆர்பாட்டத்தில் மோதல் வெடித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்பொழுது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்ப்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த குன்வர் சிங் என்பவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க வில் சேர்ந்த 9 எம்.எல்.ஏ க்களில் ஒருவராவார்.

Comments are closed.