உத்திரபிரதேசத்தில் பாஜக வெற்றி: முஸ்லிம்கள் வெளியேறக் கூறி போஸ்டர்கள்

0

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜியானக்லா என்ற பகுதியில் பாஜக வின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து தங்கள் பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டர்களில்,”உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தமையால் அமெரிக்காவில் ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு என்ன செய்தாரோ அதையே முஸ்லிம்களுக்கு இந்த கிராம இந்துக்கள் செய்வார்கள்” என்று இந்தி மொழியில் அச்சிடப்பட்டுள்ளது.

பாஜக வெற்றிபெற்ற சில நாட்களில் ஓட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் இந்த வருட இறுதிவரை முஸ்லிம்களுக்கு கெடு வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் இறுதியில் கிராம இந்துக்கள் என்றும் அப்பகுதி பாஜக எம்.பி.யின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களில் பெரும்பான்மையானவை காவல்துறையினரால் அகற்றப்பட்டாலும் இன்னும் சில இடங்களில் அவை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஜியானக்லா பகுதி மக்கள், இது எவ்வாறு நடந்தது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் ஒரே இரவில் இந்த போஸ்டர்கள் அனைத்தும் ஒட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த கிராமத்தின் தலைவர் ரேவா ராம், நாங்கள் அன்று நள்ளிரவை தாண்டித்தான் உறங்கச் சென்றோம், மறுநாள் காலையில் தான் இவற்றை நாங்கள் கண்டோம். இது குறித்து ஊர் மக்களில் சிலர் ஆட்சேபனை தெரிவிக்க நாங்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம் என்று அவர் கூறியுள்ளார். இந்த கிராமத்தில் உள்ள 2500 நபர்களில் சுமார் 200 பேர் முஸ்லிம்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் நிலைமை மோசமடையாமல் தவிர்க்க அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் பகுதியில் ஓட்டப்பட்ட போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்த ரஃபிக் என்பவர், “ஹோலி தினத்தன்று மதிய நேரம் தான் நான் இந்த போஸ்டர்களில் சிலவற்றை கண்டேன். இதனையடுத்து இது குறித்து கிராம தலைவருக்கு தகவலளித்தேன். நாங்கள் நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். அப்படியிருக்க இது போன்ற போஸ்டர்களை இங்கு யார் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மற்றொருவரோ தங்கள் கிராமத்தில் முன் எப்போதும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை என்றும், காவல்துறை இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும் தாங்கள் அனைத்து வழிகளை குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அதில் இந்த கிராமத்தை விட்டு வெளியேறுவதும் அடக்கம் என்றும் தெரிவித்துள்ளார்

காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட இந்த கிராமத்தில் காவல்துறையினர் இந்த கிராமத்தில் ரோந்து வருகின்றனர். ஆனால் இது வரை இந்த செயலை செய்தது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இது குறித்து பரேலி காவல்துறை கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் கூறுகையில்,”இந்த கிராமத்தில் சிறு சிறு அச்சு வேலைகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை எதையும் உறுதி படுத்த இயலவில்லை என்று கூறியுள்ளார்.”

Comments are closed.