உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் தனி குவளை எடுத்துச் செல்லும் தலித் பாஜக வேட்பாளர்

0

உத்திர பிரதேச தேர்தல் பிரச்சார வேலைகள் பரபரப்பாக நடைபெற்று  வரும் வேலையில் பாஜக கட்சியிலும் உத்திர பிரதேச மாநிலத்திலும் நிலவி வரும் ஜாதிய ஒடுக்குமுறைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் பாஜக வின் தேசிய தலைவரான அமித் ஷா உத்திர பிரதேசத்தில் உள்ள தலித்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு தங்கள் கட்சியில் சம உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது பாஜக வின் இக்லாஸ் பகுதி வேட்பாளரான ராஜ்விர் திலெர் என்பவர் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் போது உயர் ஜாதியினர் மத்தியில் இருக்கும் போது தரையில் அமர்வதும் தன்னுடன் எப்போதும் ஸ்டீல் டம்ளர் ஒன்று வைத்திருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத் உட்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தலித் சமூக மக்கள் தங்கள் மீது திணிக்கப்படும் ஜாதிய ஒடுக்குமுறைகளை உடைத்தெறிந்து வரும் வேலையில் பாஜக வேட்பாளரின் இந்த செயல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ராஜ்வீர் திலெர் போட்டியிடும் தொகுதி ரிசர்வ் தொகுதியாகும். ஆனால் இந்த தொகுதியில் சுமார் 90,000 ஓட்டுக்கள் உயர் சாதியினரான சாட் சமூகத்து மக்களுக்கான ஓட்டாகும். ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இந்த ஓடுக்களை தங்கள் கட்சி பெறுவதற்காகவே ராஜீவ் திலெர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த வேறு பலரும் போட்டியிட்டாலும் அவர்கள் உயர் ஜாதியினரின் ஓட்டுக்களை பெறுவது கடினம் என்று கூறப்படுகிறது.

தனது இந்த நடவடிக்கைகளை குறித்து கருத்து தெரிவித்த ராஜீவ் திலெர், அது தங்கள் குடும்பத்தின் வழக்கம் என்று கூறியுள்ளார். மேலும் 40 வயதுடைய திலேர் தன்னை விட வயது குறைந்த அப்பகுதி ஜாட் தலைவரான மோகன் சிங்கின் கால்களை பலமுறை தொட்டு வணங்குகிறார். இன்னும் அவரிடம்,”நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னுடைய குறை என்னவென்று கூறுங்கள். நீங்கள் என் மீது கோபமாக இருந்தால் நான் உங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ வாக இருப்பதை விட உங்கள் வீட்டுக் காவலானாக இருக்கிறேன்” என்று அவர் மோகன் சிங்கிடம் கூறுவது அங்கு நிலவி வரும் ஜாதிய பாகுபாட்டின் உச்சத்தை காட்டுகின்றது.

இம்முறை ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் சார்பில் ஒரு தலித் வேட்பாளரை கலமிரக்குகின்றனர். இந்நிலையில் தான் அவர்களின் அபிமானத்தை பெற திலெர் இப்படி செய்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் பதிவிக்காக தான் என்றென்றும் ஜாதிய கட்டுப்பாட்டிற்குள் ஒடுங்கி கிடக்க விரும்புவதை எந்த வித கூச்சமும் இல்லாமல் திலெர் கூறுவதையும் அறிய முடிகிறது. ஜாட் சமூகத்தினரிடம் தான் ஒரு வால்மீகியின் மகன் (தாழ்த்தப்பட்டவன்) என்றும், தான் என்றும் சம்பிரதாயத்தை மீறமாட்டேன் என்றும் இந்த உலகமே மாறினாலும் தான் மாறப்போவதில்லை என்றும் அவர் கூறுவது இதனை உறுதி செய்கிறது.

பதவிக்காக தன்மானத்தை இழப்பதும், சாதிய பாகுபாடுகள் நிறைந்த பகுதிகளில் அந்த பாகுபாடுகளுக்கு தீனி போடும் வகையில் வேட்பாளர்களை நிறுத்துவதும் பாஜகவின் கொள்கைகளையும் சாதி பாகுபாட்டு விஷயத்தில் அவர்களின் நிலைபாட்டையும் தெளிவு படுத்துகிறது.

Comments are closed.