உத்திர பிரதேசத்தில் ஆதார் இல்லாத பள்ளி குழந்தைகளுக்கு இனி மதிய உணவு இல்லை.

0

உத்திர பிரதேச மாநிலத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவது வருகிற ஜூன் மாதம் 30 ஆம் தேதியில் இருந்து நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று உத்தரவு பிறப்பித்த மூன்று மாதங்களில் உத்திர பிரதேச அரசு இத்தகைய உத்தரவை பிரபித்துள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆதார் அடையாள அட்டை உள்ள மாணவர்களின் பட்டியலை மாநில அரசு தங்களிடம் சமர்பிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.

இது தொடர்பாக அடிப்படை கல்வி இயக்குனர் சர்வேந்திர விக்ரம் பகதூர் சிங் கடிதம் மூலம், “அனைத்து மாவட்டத்தில் உள்ள அடிப்படை கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள மதிய உணவு பெரும் மாணவர்கள் ஆதார் அட்டை வைத்துள்ளனரா என்று உறுதி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டைகள் இல்லாதவர்கள், ஆதார் விபரங்களை மாநில அரசுக்கு வழங்காதவர்கள் இந்த மதிய உணவு திட்டம் போன்ற பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் பயன் பெற முடியாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு.” என்று அடிப்படை கல்வி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மீரட், ஹபூர், மொராதாபாத், சாம்பல், கன்னாஜ், ஃபாருக்காபாத், மற்றும் கான்பூர் ஆகிய பகுதிகளின் அதிகாரிகளிடம் இந்த பட்டியலை அரசிற்கு அனுப்புமாறு சிங் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடக்கப் பள்ளி மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை தற்போது மிகக் குறைவாக உள்ளது. மீரட்டில் மட்டும் மொத்தமுள்ள 1561 பள்ளிகளில் உள்ள 1.73 லட்ச மாணவர்களில் வெறும் 29,000 பேர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை உள்ளது. இது 17% த்துக்கும் குறைவானதாகும்.

தற்போது அரசின் இந்த உத்தரவு மூலம் பள்ளிகளும் அதிகாரிகளும் செய்வதறியாது நிற்கின்றனர். கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூலை 1 ஆம் தேதி தான் திறக்கப்படும் நிலையில் இது எப்படி சாத்தியம் என்ற குழப்பத்தில் அவர்கள் உள்ளனர். இன்னும் பல மாணவர்கள் விடுமுறைகளை கழிக்க வெளியூர்களுக்கு சென்றிருப்பதனால் ஆசிரியர்களால் மாணவர்களின் ஆதார் தகவலை பெறுவது எப்படி என்ற குழப்பமும் நிலவி வருகிறது.

Comments are closed.