உத்திர பிரதேசத்தில் தாக்கப்பட்ட ஜெர்மானியர்

0

உத்திர பிரதேச மாநிலத்தில் வெளிநாட்டவர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதிகள் ஆக்ராவில் தாக்கப்பட்டது செய்திகளில் வெளியானது ( பார்க்க செய்தி). இந்நிலையில் தற்போது ஜெர்மானியர் ஒருவரும் உத்திர பிரதேசத்தில் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திர பிரதேசத்தின் ராபட்கஞ் ரயில் நிலையத்தில் சிகிச்சைக்காக மிர்ஜாபூர் மருத்துவமனைக்கு வந்த ஹோல்கர் எரிக் என்ற ஜெர்மானியர் நின்றுள்ளார். ரயிலில் இருந்து இறங்கிய அவர் தான் போகும் இடத்திற்கான வழி தேடி நிற்கையில் அமன் குமார் என்பவர் அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கு எரிக் பதிலளிக்காததால் அமன் குமார் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமுற்ற அமன் குமார் எரிக்கை தரையில் தள்ளி அவரை பலமுறை கன்னத்தில் பலமாக அறைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை அருகில் இருந்து பார்த்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உள்ளான எரிக் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே காவல்துறை துணை ஆய்வாளர் ஹரிகேஷ் ராம் ஆசாத் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி அதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்தப் பின் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதாக நடத்தப்பட்டு வந்த வன்முறை தற்போது வெளிநாட்டவர் மீதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் தாக்கப்படுவது குறித்து வெளியுறவுத்துறை கவலை தெரிவித்து வரும் வேலையில் உள்நாட்டில் நடக்கும் இது போன்ற காட்டுமிராண்டி செயல்களையும் தடுக்க முன்வர வேண்டும். இல்லையெனில் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.

Comments are closed.