உத்திர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான போஸ்டர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது வழக்கு

0

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்நோரில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டப்பட்டது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் அடங்கிய பாபரி மசூதி இடிப்பு தொடர்பான கருத்துக்களை கொண்ட சுவரொட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிஜ்னோர் மாவட்டத்தில் ஒட்டப்பட்டிருந்தன.

காவல்துறை குறிப்பிடும் போஸ்டர்கள் தங்களுடையதா என்று  கூற முடியாது என்று கூறிய அவ்வமைப்பு தாங்கள் ஒட்டிய போஸ்டர்களில் ஆட்சேபனைக்குரிய எந்த கருத்துக்களும் இல்லை என்று கூறியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் ஒட்டியதாக கூறப்படும் சுவரொட்டிகள் இரண்டு தங்களிடம் உள்ளதாகவும் காவல்துறை துணை ஆய்வாளர் சிமர்ஜீத் அளித்த புகாரின் அடிப்படையில் சாந்த்பூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153B இன் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துணை ஆய்வாளர் சிமர்ஜீத் கூறுகையில், “அந்த சுவரொட்டிகளின் அடியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் “கஹி ஹம் பூல் நா ஜாயே” என்றும் “தோகி கே பச்சிஸ் சால்” என்றும் “பாபரி மஸ்ஜித் கி தோபாரா தமீர் கரோ” என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பிஜ்னோர் நகர காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ததினேஷ் சிங் கூறுகையில், “இந்த சுவரொட்டிகளின் நோக்கம் என்ன என்பது இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்.” என்றும் இந்த சுவரொட்டிகள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புடையது தானா என்றும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். “விசாரனயின் போது இந்த சுவரொட்டிகள் புது டில்லியில் இருந்து பிஜ்னோரில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஒட்டியவர்கள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.” என்று காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் சவுத்திரி கூறியுள்ளார்.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உத்திர பிரதேச செயலாளர் அனீஸ் அன்சாரி, எங்களது சுவரொட்டிகளில் ஆட்சேபனைக்குரிய எதுவும் எழுதப்படவில்லை. எங்கள் சுவரொட்டிகள் எங்களது அரசியல் சாசன உரிமையை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டவை. பிஜ்னோரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் முதல் தகவல் அறிக்கை குறித்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Comments are closed.