உத்திர பிரதேசம்: அதித்யநாத் தொகுதியில் 48 மணி நேரத்திற்குள் 30  குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணம்

0

உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாதின் தொகுதியான கோரக்பூரில் உள்ள BRD மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் 48 மணி நேரத்தில் ஆக்சிஜன்தட்டுப்பாட்டால்மரணமடைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜீவ் ரவ்டேலா கருத்து தெரிவிக்கையில், “கடந்த 48 மணி நேரத்தில் 30 மரணங்கள். கட்டண பாக்கி செலுத்தாத காரணத்தால் திரவ ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் விநியோகஸ்தர்களிடம் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்த வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த மருத்தவமனை ஆக்சிஜன் விநியோகிஸ்தர்களுக்கு தர வேண்டிய 69 லட்ச ரூபாய் கட்டண பாக்கியை செலுத்தவில்லை என்றும் இதனை தொடர்ந்தே அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் RS.சுக்லா இந்த தகவலை மறுத்துள்ளார். “நாங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆக்சிஜன் வழங்கப்படுமாறு பார்த்துக் கொண்டோம்” என்றும் “எந்த மரணமும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நிகழவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது இந்தக் கருத்தையே மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாதும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “ஊடகங்கள் கூறுவது போன்று எங்களுக்கு அறிக்கை வரவில்லை. இது குறித்த முழு அறிக்கை வெளியானதும் மரணத்தின் காரணம் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.

கடந்த வியாழன் இரவில் இருந்து திங்கள் மதியம் வரையிலான இந்த மரணங்கள் நிகழ்ந்த மருத்துவமனை உத்திர பிரேதேச முதல்வர் அதித்யாநாத்தின் சொந்த தொகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்த துக்க நிகழ்விற்குப் பிறகு இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மரணங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்று கூறிய உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பார், “இது அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது” என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், இந்த மரணங்களுக்கு மாநில அரசு தான் காரணம் என்றும் இங்கு எப்படி ஆக்சிஜன் தட்டுப்பாடு இறுக்க முடியும் என்றும் அருகில் உள்ள மகாராஜ்கஞ்ச் இற்கு முதல்வர் முந்தைய நாள் தான் வருகை புரிந்துள்ளார் என்றும் அவர் கோரக்பூர் மருத்துவ கல்லூரிக்கு சென்று அங்குள்ள  கள  நிலவரத்தை அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் இன்னும் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.