உத்திர பிரதேசம்: கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை படுக்கைக்கு அழைத்த காவல்துறை அதிகாரி

0

பாஜக ஆளும்  உத்திர பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் உள்ள கஞ்ச் காவல் நிலையத்திற்கு கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை காவல்துறை அதிகாரியே படுக்கைக்கு அழைத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வருடம் 12 ஆம் தேதி தன் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்புகையில் இரண்டு நபர்களால் கற்பழிக்கப்பட்ட 37 வயது பெண் ஒருவர் அது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். முதலில் இந்த கற்பழிப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல்துறை மறுத்ததாகவும் இதில் நீதிமன்ற உதவியை நாடிய பின்னரே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

தன்னை கற்பழித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றும் அவர்களால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் அஞ்சிய அந்தப் பெண் இந்த புகாரை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரியிடம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவிட்டனரா என்று கேட்கும் போதெல்லாம் தன்னுடன் படுக்கைக்கு வந்தால் மட்டுமே இந்த வழக்கின் மீது தான் நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த அதிகாரி அப்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது அறைக்கு தனிமையில் வருமாறு அழைத்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் விசாரணை என்கிற பெயரில் அந்தப்பெண் கற்பழிக்கப்பட்டது குறித்தும் அது எவ்வாறு நடைபெற்றது என்ற நுணுக்கங்கள் குறித்தும் துணை ஆய்வாளர் ஜெய் பிரகாஷ் மீண்டும் மீண்டும் தன்னிடம் கேட்டதாகவும் அப்போது ஆட்சேபனைக்குரிய கேள்விகளையும் அவரிடம் கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரியின் விருப்பத்திற்கு அப்பெண் உடன்படாததால் இந்த வழக்கு முடிவுற்றதாக அவர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனால் செய்வதறியாது நின்ற அந்தப் பெண் மீண்டும் குறிப்பிட்ட காவலதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த காவல் அதிகாரியின் உரையாடலை அவர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் கொண்டு அவர் தனக்கு நீதி கேட்டு SP அலுவலகம் சென்று புகாரளித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுதா சிங், கஞ்ச் காவல்நிலைய அதிகாரியை இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது காவல்துறை ஆய்வாளர் மீதான இந்த குற்றச்சாட்டு போலியானது என்றும் அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் உத்திர பிரதேச காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.