உத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை

0

உத்திர பிரதேசம்: பசு பயங்கரவாதிகளால் ஒருவர் அடித்துக்கொலை

உத்திர பிரதேச மாநிலம் ஹாபுரில் உள்ள பேஜாரா குர்த் கிராமத்தில் பசுவதை செய்தார் என்று கூறி 45 வயது காசிம் என்பவர் பசு பயங்கரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தங்கள் நிலத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த மாடுகளை காசிம் மற்றும் அவரது நண்பர் சமாயிதின் ஆகியோர் விரட்டியுள்ளனர். இதனை சிலர் அந்த மாடுகளை அறுப்பதாற்காக அவர்கள் எடுத்துச் செல்கின்றார்கள் என்று வதந்தி பரப்பியுள்ளனர். இதனால் சற்று நேரத்திலேய அங்கு ஆயுதங்களுடன் கூடிய கும்பல் ஒன்று இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் காசிம் உயிரிழந்துள்ளார். சமாயிதின் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

இவர்கள் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்தக் காட்சியில், கடுமையாக காயமுற்று கீழே கிடக்கும் காசிமின் மீதான தாக்குதலை சுற்றியிருப்பவர்கள் நியாயப்படுத்துவது பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், தாக்குதலின் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுக்க தேவையில்லைஎன்று கூறுவது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 25 நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த கொலையை அடுத்து அப்பகுதியில் ஏற்ப்பட்ட பதற்றத்தை தடுக்க அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் வன்முறை கும்பல் கூறுவது போல் அப்பகுதியில் பசுவதை எதுவும் செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜார்கண்ட் மாநிலத்தின் கோத்தா மாவட்டத்தில் இரண்டு முஸ்லீம்கள் இதே போன்ற காரணம் கூறி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.