உத்திர பிரதேச அரசின் போலி என்கெளண்டர்? ஒரே மாதிரியான FIR பதிவுகள்

0

உத்திர பிரதேச மாநிலத்தில் குற்றங்களை ஒழிக்கின்றோம் என்கிற பெயரில் அம்மாநில காவல்துறை நடத்தி வரும் என்கெளண்டர்கள் பல சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இந்த என்கெளண்டர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட 34 முதல் தகவல் அறிக்கைகளில் 14 முதல் தகவல் அறிக்கைகள் ஒரே மாதிரியாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி உத்திர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் சிங்கின் சகோதரர் சுமித் குர்ஜார் காவல்துறையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. இதன் மீது காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் சுமித் மற்றும் அவரது உதவியாளர் வங்கி ஒன்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர் என்றும் இவர்களை மறுநாள் காவல்துறை கண்டுபிடித்ததாகவும் அப்போது இவர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுமித் கொல்லபட்டார் என்றும் காவல்துறை கூறியது. காவல்துறையின் ஆவணங்களின் அடிப்படியில் சுமித் மீது பல வழிப்பறி வழக்குகள் உள்ளன, மேலும் அவரது தலைக்கு 50000 ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்த வேறு மாதிரியான தகவலை சுமித்தின் சகோதரர் பிரவீன் தெரிவித்துள்ளார். சுமித் செப்டெம்பர் மாதம் 30 ஆம் தேதி பலவ்னி காவல்துறையை சேர்ந்த நான்கு காவலர்கள் அழைத்துச் சென்றதாகவும் அதில் இருவர் சீருடையிலும் மேலும் இருவர் சாதாரண உடுப்பிலும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுமித்தின் உடலில் சித்திரைவதை செய்யப்பட்டதர்கான அடையாளங்கள் காணப்பட்டதாக சுமித்தின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.

“அவரது விலா எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளன. அவரது கை உடைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மார்பிலும் காயங்கள் உள்ளன.” என்று சுமித்தின் தந்தை கரம் சிங் தெரிவித்துள்ளார். இந்த காயங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுமித்தின் குடும்பம் தேசிய மனித உரிமை கமிஷணிற்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். “எங்கள் மீது 8 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. மேலும் அவர்கள் எங்களை தினமும் தொந்தரவு செய்து வருகின்றனர். நாங்கள் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்றும் இந்த விசாரணையை தொடரக்கூடாது என்றும் காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.” என்று பிரவீன் தெரிவித்துள்ளார்.

குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று அதித்யநாத் அரசு கடந்த மார்ச் மாதம் பதவியேற்றது முதல் தொடங்கிய இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 1142 என்கெளண்டர் நடத்தப்பட்டுள்ளது. இதில் 34 கொலைகளும், 265  காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த என்கெளண்டர்களில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், தவிர சமூக ஆர்வலர்களும், எதிர்கட்சியினரும் இந்த என்கெளண்டர்களின் நம்பகத்தமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் மீதான விசாரணையில் இந்த என்கெளண்டர்களில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 34 முதல் தகவல் அறிக்கைகளில் 14 ஒரே மாதிரியாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த அனைத்து முதல் தகவல் அறிக்கைகளிலும், “குற்றவாளி தனது உதவியாளருடன் கார் / இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர்களை தடுத்து நிறுத்த காவல்துறை முற்பட்டது. ஆனால் அவர்கள் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் தற்காப்புக்காக காவல்துறை அவர்களை சுட்டது.” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பத்தில் ஒன்பது வழக்குகளில் காவல்துறை கூறிய குற்றவாளியின் உதவியாளர் அடையாளப்படுத்த முடியாதவராகவும் கண்டுபிடிக்க இயலாதவராகவும் உள்ளனர். மேலும் சுமார் ஒன்பது வழக்குகளில் கொல்லப்பட்டவர்கள் தனது உறவினர் வீட்டில் இருந்து காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்களால் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கிழக்கு உ.பி.யில் உள்ள அசாம்கார்க் பகுதியில் வைத்து ஜெய்ஹிந்த் யாதவ் என்பவர் காவல்துறையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் இவருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயஹிந்த் யாதவை தனது கண் முன்னால் தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். “எனக்கு உடல் நிலை மோசமாக இருந்தது. அதனால் அவர் என்னை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். என்னால் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலை. நாங்கள் மருந்துகள் பெற காத்துக் கொண்டிருந்த போது சிலர் வந்து ஜெயஹிந்த் யாதவை அழைத்துச் சென்றனர். அவர்கள் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. பின்னர் சிலர் என்னிடம் வந்து அவர்கள் சிறப்பு பிரிவு காவல்துறை என்று கூறினார்கள்.” என்று ஷிவ்பூஜன் யாதவ் தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் ஜெயஹிந்த் யாதவ் மீது கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளன. அவரது தலைக்கு 15000  ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. யாதவின் உடலில் 21 முறை சுடப்பட்டிருப்பதும் அதில் பல அவரது கால்களிலும் ஒன்று மார்பிலும் சுடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த மன்சூர் என்ற மூச் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இங்கும், “சாதாரண உடுப்பில் இருந்த இரண்டு காவல்துறையினர் இங்கு வந்தனர். அவர்கள் உண்பதற்கு பலகாரங்களை நான் கொடுத்தேன். பின்னர் அவர்கள் அவர்களுடன் மன்சூரை அழைத்துச் சென்றனர்.” என்று மைசூரின் தாயார் சுபேதா தெரிவித்துள்ளார். ஆனால் மன்சூரின் குடும்பத்தினருக்கு கிடைத்த அடுத்த செய்தி அவர் என்கெளண்டரில் கொல்லப்பட்டார் என்பது. அதுவும் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்ததாக சுபேதா தெரிவித்துள்ளார்.

குறைந்த பட்சம் ஒன்பது வழக்குகளிலாவது கொல்லப்பட்டவரின் தலை மற்றும் மார்பு பகுதிகளில் சுடப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை குறித்தும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 30 ஆம் தேதி கொல்லப்பட்ட ஷமீம், தலையில் மட்டுமே சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அதில் இரண்டு குண்டுகள் மிகவும் அருகில் வைத்து சுடப்பட்டவை என்று ஷமிமின் உறவினர் கம்ருதின் அன்சாரி தெரிவித்துள்ளார். இவரது பிரேத பரிசோதனை அறிக்கையும் இந்த காயங்களை பதிவு செய்துள்ளது. ஷமீம் மீது மொத்தம்  27 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கொலை முயற்சி வழக்கும் ஒன்று. இவரது தலைக்கு 1லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் கொல்லப்பட்டவர்களின் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டதும் கூட இந்த என்கெளண்டர்களுக்கு பின்னால் தான் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த என்கெளண்டர்களில் கொல்லப்பட்டவர்களில் ஏழு வழக்குகளிலாவது கொல்லப்பட்டவர்களின் உடல்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு பேரின் குடும்பத்தினர், காவல்துறையினர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வற்புறுத்தி தங்கள் மீது காவல்துறை போலியான வழக்குகளை பதிவு செய்துள்ளது என்று கூறியுள்ளனர்.

காவல்துறை தரப்பு கூற்றில் இந்த என்கெளண்டர்களில் நான்கு காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டபப்டி ஒரு என்கெளண்டர் நிகழும் பட்சத்தில் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும். ஆனால் இந்த என்கெளண்டர்களில் கொல்லப்பட்ட 12  நபர்களின் குடும்பத்திடம் பத்திரிகையாளர்கள் விசாரித்ததில் சுமித் குர்ஜார் என்பவரது குடும்பத்தின் வாக்குமூலம் மட்டுமே இதுவரை பெறப்பட்டுள்ளது. காவல்துறை மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு உத்திர பிரதேச காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்கையில் அவர்கள் அதற்கு பதிலிக மறுத்துவிட்டனர்.

Comments are closed.