உத்திர பிரதேச அரசு விடுமுறை நாள்களில் ரமழான் விடுமுறை குறைப்பு

0

2018 ஆண்டிற்கான அரசு விடுமுறை நாள் பட்டியல் உத்திர பிரதேச அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 92 இல் இருந்து 86 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து மக்களின் பண்டிகை காலத்தில் மதரஸாக்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று யோகி அரசு உத்தரவிட்டுள்ளது. யோகி அரசின் இந்த புதிய உத்தரவு பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

யோகி அரசின் இந்த முடிவை பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றபோதிலும் மதரசஸாக்களைப் போன்று ஆர்எஸ்எஸ் நடத்தும் பள்ளிகளிலும் முஸ்லிம் பண்டிகளைகளை குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனை அடுத்து உத்திர பிரதேச மதரஸா வாரியம் 16461 மதரஸாக்களுக்கு 2018 ஆண்டிற்கான புதிய காலாண்டரை வழங்கியுள்ளது. அதில் மகாநவமி, தசரா, தீபாவளி, ரக்ஷா பந்தன், புத்த பூர்ணிமா மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களிலும் மதரஸாக்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மிலாதுன் நபிக்கு வழங்கப்பட்ட விடுறை நாள் ஒன்றில் இருந்து இரண்டாக அதிகரிக்கப்பட்டு ரமழான் மாத விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதரஸா வாரியத்தின் செயலாளர் ராகுல் குப்தா பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “மாணவர்கள் முக்கிய ஆளுமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த புதிய விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. “ என்று கூறியுள்ளார். மேலும் மதரஸாக்களின் குளிர்கால விடுமுறை டிசம்பர் 26 இல் இருந்து ஜனவரி 5 வரையில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இத்துடன் மதரஸாக்களின் நேரங்கள் ஏப்ரல் ஒன்று முதல் செப்டெம்பர் 30 வரை காலை 8:30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இருக்கும் என்றும் அக்டோபர் ஒன்று முதல் மார்ச் 31 வரை இந்த நேரம் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரமழான் மாத விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் முஸ்லிம்களின் புனித மாதம் என்பதால் இந்த மாத்தத்தின் விடுமுறைகள் குறித்து முடிவெடுக்கும் போது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து இருக்கலாம் என்று பலர் தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் இந்த முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர், தாஹிரா ஹசன், “நாம் ஒரு ஜனநாயக நாடு, அதித்யநாத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஆர்எஸ்எஸ் பள்ளிகள், சிசு மந்திர்கள் போன்றவையும் ஈத் மற்றும் முஸ்லிம் பண்டிகைகளின் போது விடுமுறை விடப்பட வேண்டும். இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் ஈத் மற்றும் இன்ன பிற இஸ்லாமிய பண்டிகைகள் குறித்து கற்றுத்தரப்பட வேண்டும். ரமழான் விடுமுறைகள் குறைக்கப்பட்டதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். “ என்று தெரிவித்துள்ளார்.

பிரபல மார்க்க அறிஞரான சுபியான் நிசாமி, “மதராக்களின் விடுமுறை காலண்டரை மாற்றியமைத்து ரமழான் மாத விடுமுறை குறைப்பை சரி செய்யுமாறு அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அரசுடன் இணைக்கப்பட்டுள்ள மதரசாக்கள் இந்த உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும். ஆனால் அரசுடன் இணைக்கப்படாத பல மதரஸாக்கள் உள்ளன. அவை இந்த விடுமுறைக் குறைப்பை ஏற்றுக்கொள்ளாது. மேலும் ஆர்எஸ்எஸ் பள்ளிகளிலும் ஈத் பெருநாட்கள் குறித்து கற்றுத்தரப்பட்டு அவை மீதான தவறான கருத்துக்களை களைய வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply