உத்திர பிரதேச காவல் கொலைகள்(என்கெளண்டர்கள்): அதித்யநாத் அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

0

உத்திர பிரதேச காவல் கொலைகள்( என்கெளண்டர்கள்): அதித்யநாத் அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

உத்திர பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக நடத்தப்பட்டதாக கூறப்படும் காவல்துறை என்கெளண்டர்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழான விசாரணை ஒன்றை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையானது சிபிஐ மூலமாகவோ அல்லது சிறப்பு புலனாய்வு குழு மூலமாகவோ நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் பல போலி என்கெளண்டர்கள் நடைபெறுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது கருத்தை தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், என்கெளண்டர்கள் மிக மோசமானவை என்றும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான அடுத்தக் கட்ட விசாரணை வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற சுமார் 17 என்கெளண்டர்களை மனித உரிமை ஆணையம் விசாரித்து வருகிறது என்றும் அதன் கள அறிக்கை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிமன்றம் அடுத்த அமர்வில் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, என்கெளண்டர்கள் விஷயத்தில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் உத்தர பிரதேச அரசு விசாரணைகளை மேற்கொள்கிறது என்று தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி, நான்கு மனித உரிமை நிபுணர்கள் உத்தர பிரதேசத்தில் நடைபெறும் என்கெளண்டர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு சுமார் 59 சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியானது. சுமார் 15 தனிப்பட்ட வழக்குகள் குறித்து தங்களுக்கு விரிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த வழக்குகளில் ஏழை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் தெரிவித்தது.

ஜூலை 2018 இல் உத்தர பிரதேசத்தில் பல போலி என்கெளண்டர்கள் நடைபெறுகிறது என்ற புகாரின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசிற்கு நோட்டீஸ் வழங்கியது. தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் ஆதித்யநாத் அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

Comments are closed.