உத்திர பிரதேச மாநிலத்தில் மூத்த IPS அதிகாரி ராமர் கோவில் கட்ட உறுதிமொழி: வெளியான வீடியோ

0

உத்திர பிரதேச மாநிலத்தில் மூத்த IPS அதிகாரியான சூர்யா குமார் சுக்லா என்பவர் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட உறுதிமொழி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அரசு பதவியில் இருக்கும் ஒருவர் மத சார்பற்று பணியாற்ற வேண்டும் என்ற நிலையில் இவரது வீடியோ பல எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் “ராம பக்தர்களாகிய நாம், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கூடிய விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று உறுதிமொழி அளிக்கின்றோம். ஜெய் ஸ்ரீ ராம்.” என்று தங்களது ஒரு கையை உயர்த்தி உறுதிமொழி எடுப்பது பதிவாகியுள்ளது.

1982 ஆம் ஆண்டுப் பிரிவு IPS அதிகாரியான திரு.சுக்லா, தற்போது டைரெக்டர் ஜெனெரல் பதவியில் உள்ளவர். உத்திர பிரதேச காவல்துறை இணையதள பக்கத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், இவர் அம்மாநிலத்தின் இரண்டாவது மூத்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி, தங்களை சமூக இயக்கம் என்று கூறிக்கொள்ளும் அகில பாரதிய சமக்ர விசார் மன்ச் என்ற அமைப்பு லக்னோ பல்கலைகழகத்தின் பொது நிர்வாகத்துறை அறையில் வைத்து நடத்திய தனியார் நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த உறுதி மொழி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், IPS அதிகாரி சுக்லாவை தவிர்த்து, பல இந்துத்வா இயக்கத்தை சேந்தவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவு தலைவர்களும் பங்கெடுத்துள்ளனர். இவர்களுடன் வழக்கறிஞர் ஹரி ஷங்கர் ஜெயின்னும் பங்கெடுத்துள்ளார். இவர் அயோத்யா பிரச்சனையில் இந்து மகாசபையின் வழக்கறிஞர் ஆவார்.

இந்த நிகழ்வு குறித்து விளக்கமளிக்க கோரி மாநில அரசு சுக்லாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. இது குறித்து தனது கருத்தை தெரிவித்த சுக்லா, தன்னை குறித்து வெளியான அந்த வீடியோவில் தான் கூறியது திரித்துக் கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “ஒரு பொறுப்பான அதிகாரியாக நாங்கள் இது போன்ற எதையும் கூறவோ, செய்யவோ கூடாது. அந்த வீடியோவில் நாங்கள் ராமர் கோவிலை பலவந்தமாக கட்டப்போவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது திரிக்கப்பட்ட செய்தியாகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரது உறுதிமொழி குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, அந்த உறுதிமொழி சமூக அமைதிக்காக எடுக்கப்பட்டது என்றும் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த கூட்டம் ராமர் கோவிலை அமைதியான முறையில் கட்டுவது குறித்து விவாதிக்க நடத்தப்பட்ட கூட்டம் என்று அவர் தெரிவித்துள்ளார். தான் அந்த கூட்டத்தில், “இந்த விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது, அதனால் இது குறித்து பேசவோ அல்லது விரிவான விளக்கம் தரவோ என்னால் முடியாது. அதனால் நான் இங்கு பேசவில்லை.” என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படி கூறிய அவர், பின்னர் கூடிய விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற IPS அதிகாரி S.R.தாராபுரி கூறுகையில், “இது IPS இன் நடத்தை விதிகளுக்கு நேர் எதிரானது.” என்று கூறியுள்ளார். மேலும் அவர் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்து தனது அரசியல் சார்பை வெளிப்படுத்துவாராயின் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், நரேந்திர மோடி மற்றும் யோகி அதித்யநாத் அரசில் குற்றவாளிகள் மற்றும் அதிகாரிகள் இருவருமே பாஜக வால் ஆதிக்கம் செழுத்தப்பட்டுள்ளனர். “இவர்கள் மூவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த குற்றவாளிகள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்ட பாஜக நபர்கள் தங்களை சட்டத்திற்கு மேலாக எண்ணிக்கொண்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை IPS சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் இது தங்களின் நடுநிலை கொள்கைகளுக்கும் நியாயத்திற்கும் எதிரானது என்று அது தெரிவித்துள்ளது.

Comments are closed.