உயர் அதிகாரிகள் பற்றி குறை கூறிய இராணுவ வீரர் மர்மமான முறையில் மரணம்

0

கேரளாவை சேர்ந்த இராணுவ வீரரான ராய் மேத்திவ் தொலைகாட்சி ஒன்றிற்கு இராணுவத்தில் உள்ள மோசமான நிலை குறித்தும் தனது உயரதிகாரிகள் குறித்தும் புகாரளித்தார். இதனை அடுத்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது உடல் கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் உள்ள அவரது முகாமிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தை இராணுவம் தற்கொலை என்று கூறுகிறது. ஆனால் ராயின் குடும்பத்தினரோ அதில் சந்தேகம் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் ராயின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ராய் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து தான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டாதாக (தொலைக்காட்சியுடனான தனது உரையாடலை குறித்து அவர்) கூறியுள்ளார். ராய் தனது மனைவியிடம் பேசிய மறுநாளான திங்கள் கிழமையில் இருந்து மாயமாகியுள்ளார். அந்த தினத்தில் தான் அவரது பேட்டி ஒரு மராத்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அந்த தொலைகாட்சி அவரை குறித்த தகவல்களை மறைமுகமாக வைத்துக்கொள்வதாக கூறினாலும் தன்னை குறித்த தகவல்கள் தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டது என்று தனது மனைவியிடம் அவர் கூறியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ராய் மேதிவை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

பின்னர் ராயை போன்று இருப்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராயின் குடும்பத்தினருக்கு அவரது உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். அதைத் தவிர வேறு எந்த ஒரு தகவலும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் நாஷிக் மாவட்ட நிர்வாகத்தை அணுகியதாகவும், அப்போது ராயின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இராணுவத்திடம் இருந்து தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

ராயின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, தனது மனிவியிடம் ராய் பேசும்போது, தங்களது படைப்பிரிவில் தங்களை அடிமைகளைப் போல நடத்துவதாகவும் கடைநிலை வீரர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய ஏவப்படுவதாகவும் கூறியுள்ளார். உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வது, தோட்ட வேலைகளை செய்வது, அவர்களது நாயை பார்த்துகொள்வது முதல் அனைத்து வேலைகளையும் சில வீரர் ஆட்சேபனை எதுவும் இன்றி செய்வதாகவும் ஆனால் தனக்கு அது பிடிக்கவில்லை என்று அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் ராயின் மர்ம மரணத்திற்கு காரணம் இராணுவ உயர் அதிகாரிகளாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் தலையிடுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ராயின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

13 வருடங்களாக இராணுவத்தில் பணிபுரிந்த ராய் மேத்திவ், 214 ராக்கட் ரெஜிமென்ட்டில் துப்பாக்கி வீரராக கடந்த ஒரு வருடம் நாஷிக்கில் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.