உயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்?

0

உயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்?

காசையும் காட்டையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்வார்கள். ஆனால், படிப்பை மட்டும் திருட முடியாது’’ சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் வசனம். ‘‘ஆர்.எஸ்.எஸ்.காரனா நம்மை படிக்க வேண்டாம் என்று தடுக்கிறான். நாம் படிக்காமல் இருந்துவிட்டு அவன் மீது பழியை போடக்கூடாது.’’ முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அறிவுஜீவிகள் சிலர் அடிக்கடி கூறும் கருத்து இது. ஆனால், உண்மையில் முஸ்லிம்களையும் தலித்களையும் படிப்பதில் இருந்து தடுப்பதற்கு ஏராளமான நேரடியான, மறைமுகமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. சென்னை ஐஐடியில் சமீபத்தில் நடைபெற்ற நிறுவனப் படுகொலை இதற்கான சமீபத்திய சான்று.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீஃப் (19). சென்னை ஐஐடியில் வி.கி. பிuனீணீஸீவீtவீமீs முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த அவர், நவம்பர் 9 அன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முஸ்லிம் மற்றும் தலித் மாணவர்களுக்கு எதிராக உயர்கல்வி நிறுவனங்களில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் காரணமான மனஅழுத்தத்தின் காரணமாகவே இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதால் இதனை நாம் நிறுவனப் படுகொலை என்று அழைக்கிறோம். தனது மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்புகிறார் பாத்திமாவின் தந்தை.

தனது துறையின் இணை பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன், பேராசிரியர்கள் மிலிந்த் பிராமே மற்றும் ஹேமசந்திரன் காரா ஆகியோர்தான் தனது மரணத்திற்கு காரணம் என்பதை தனது செல்போனில் குறிப்பிட்டுள்ளார் பாத்திமா. இது போன்ற நிறுவனப்படுகொலைகள் நடைபெறும் போது, ‘இந்த மாணவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றனர், அவர்களால் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க இயலவில்லை’ என்று அவர்களின் மீதே குற்றத்தை திருப்புவது இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்சாதி என்று இறுமாப்பு கொள்பவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. பாத்திமாவின் மரணத்தை தொடர்ந்தும் இதே காரணத்தை முதலில் கூறினார்கள். ஆனால் மாணவி பாத்திமா, ஐஐடி நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பெற்றவர், சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் கூட நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார். எனவே, படிக்க இயலாத காரணத்தினால், அல்லது மதிப்பெண் குறைவாக பெற்ற காரணத்தினால் அவர் மரணத்தை தேர்ந்தெடுக்கவில்லை.

முஸ்லிம் என்ற காரணத்தினால் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் தனது பெயரே தனக்கு பிரச்சனையாக இருக்கிறது என்றும் தனது தந்தையிடம் பாத்திமா முறையிட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் உயர்கல்வி வளாகத்தில் காலடி எடுத்து, அதில் முதல் மதிப்பெண் பெற்றதையும் சகிக்க இயலாத உயர்சாதி மனப்பான்மை கொண்டவர்களே அவரின் மரணத்திற்கு காரணம் என்பதை அவரின் முறையிடலும் மரண குறிப்பும் உறுதிப்படுத்துகின்றன.

தமிழகம் தனது மகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அனுப்பிய பெற்றோர், மகளின் மரணத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கேரள முதல்வரின் உதவியை நாடினர். தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் ஐஐடியில் நிலவி வரும் போக்கை வன்மையாக கண்டித்ததுடன் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். தற்போது கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முத்துகிருஷ்ணன், மும்பையை சேர்ந்த டாக்டர் பாயல் தட்வி, தற்போது ஐஐடியின் பாத்திமா ஆகியோரின் நிறுவனப்படுகொலைகள், உயர் கல்வி நிறுவனங்களில் தலித்கள் ஆதிவாசியினர் மற்றும் சிறுபான்மையினர் படிக்கக் கூடாது, வாழ்வில் முன்னேறக் கூடாது என்ற சிந்தனை உயர்சாதியினரிடம் ஆழமாக வேரூன்றியுள்ளதை காட்டுகிறது. இத்தகைய கேவலமான, முறைகேடான செயல்களில் ஈடுபடும் இவர்கள், ஐஐடியிலும் எய்ம்ஸிலும் படிக்கும் அறிவு எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று வெட்கமின்றி கூறுகின்றனர். ‘‘நீங்கள் எல்லாம் இங்கே வந்துவிட்டீர்களா?’’ என்று இந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்களை நோக்கி பேராசிரியர்களே கேள்வி கேட்கும் நிலையும் இருக்கிறது. உயர்கல்வி நிறுவன ஆசிரியர் பணியிடங்களை ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் ஆக்கிரமித்திருப்பதும் இதற்கு காரணமாகும். உதாரணமாக, சென்னை ஐஐடியில் பேராசிரியர்களில் 97 சதவிகிதத்தினர்  உயர்சாதியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறதே அல்லாமல், அவர்களுக்கு திறமையில்லை என்பது இதன் அர்த்தமல்ல. சிறுபான்மை மற்றும் தலித் மாணவர்களுக்கான அனுமதியை மறுப்பதுடன் இத்தகைய கல்வி வளாகங்களில் மாற்று சிந்தனைகளையும் இத்தகையவர்கள் அனுமதிப்பதில்லை. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தை பயன்படுத்துகின்றனர். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதும் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதும் இதே சென்னை ஐஐடி வளாகத்தில்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

பாத்திமா லத்தீபின் நிறுவனப் படுகொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அனைத்து சமூகத்தினரும் சுதந்திரமாக கல்வி கற்கும் வளாகங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் மாற வேண்டும், கல்வி நிறுவன பணியிடங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். இவையே நிறுவனப்படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வரும்.

(உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் உயர்சாதி போக்கு குறித்து விடியலில் வெளிவந்த கட்டுரைகள்

  1. கல்வி வளாகங்களை பாழாக்கும் இந்துத்துவ பாசிசம் (பிப்ரவரி 2016)
  2. பாஜக ஆட்சியில் தொடரும் தாக்குதல்கள் விழிக்குமா மாணவர் சமுதாயம்? (ஏப்ரல் 1–15, 2017)
  3. ஐஐடி நிகழ்வும் மாணவ சமூகம் பெற வேண்டிய படிப்பினையும் (ஜூன் 16–30, 2017)

Comments are closed.