உயர் சாதி மாணவர்களின் சாதி வெறியால் தாக்கப்பட்ட டில்லி பல்கலைகழக தலித் மாணவர்

0

டில்லி பல்கலைகழகத்தின் தயாள் சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு BA பயின்று வரும் ஆஷிஷ் பெனிவால் என்ற தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது நண்பர்களான அமான் பீதுரி மற்றும் அன்கித் ஷர்மா ஆகியோரை அவரது கல்லூரியின் மூத்த மாணவர்கள் நான்கைந்து பேர் கூர்மையான பொருட்களாலும் கண்ணாடி பாட்டல்களாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்குக் காரணம் ஆஷிஷ் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அன்கித் தஹியா, சன்னி குஜ்ஜார் மற்றும் சுனில் ஷியோரன் என்ற மூன்று பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் தாக்குதல் நடைபெற்ற அதே நாளில் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை கூடுதல் துணை ஆணையர் விஜயந்தா ஆர்யா தெரிவித்துள்ளார்.

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஆசிஷ் தெரிவிக்கையில், “நான் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவன். எங்களை தாக்கியவர்களில் சிலர் ஜாட் பிரிவை சேர்ந்தவர்கள். கடந்த மூன்று நான்கு மாதங்களாக “நீ தாழ்த்தப்பட்டவன், உனக்கு எங்களுடன் கல்வி கற்க வேண்டுமா?” என்று கூறி என்னை அவர்கள் துன்புறுத்தி வந்தனர். “ என்று தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாலை மூன்று மணியளவில் தங்கள் மூத்த மாணவர்களை குறித்து ஆஷிஷ் மோசமாக பேசியதாக கூறி அன்கித் தஹியாவின் கும்பல் தங்களிடம் வம்புக்கு வந்ததாக ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.

“என்னிடம் அன்கித் தஹியா வந்து, நான் அவரை குறித்து மோசமாக பேசியதாக கூறினார். அதனை நான் மறுத்தும் எனது கூற்றை அவர் கேட்பதாக இல்லை. அவர் என்னை தாக்கத் தொடங்கினார். பின்னர் அவர் அவரது பையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான பொருளினால் என்னை குத்தினார். அதன்பின் கண்ணாடி பாட்டல் ஒன்றை உடைத்து அதனை என் முகத்தில் எறிந்தார்.” என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலினால் ஆஷிஷ்ற்கு முகத்தில் மட்டும் 14 தையல்கள் போடப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக அவரது கண்ணில் காயங்கள் ஏற்பட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தடுக்க முனைந்த ஆஷிஷின் நண்பர்கள் அமான் மற்றும் அன்கித் ஷர்மா ஆகியோரும் தாக்கப்பட்டுள்ளனர்.

தனது சாதியால் தன் மீது வெறுப்பு கொண்ட அந்த மாணவர்கள் தன்னை அடிக்கடி தொந்தரவு செய்ததாக ஆஷிஷ் தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கல்லூரி தேர்தலில் அமான் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் குற்றவாளி ஆதரித்த நபரை அமான் தேர்தலில் தோற்கடித்ததால் டிசம்பரில் அவரை தாக்கினார்கள் என்றும் இது தொடர்பாக அவரது நண்பர் காவல்துறையை அணுகி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போதும் குற்றவாளி வெளியில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் லோதி காலனி காவல்நிலையம் சென்று அதிகாரிகளிடம் நடந்தவற்றை குறித்து புகாரளித்துள்ளனர். “காவல்துறையிடம், எனது சாதியின் காரணத்தால் தான் நான் தாக்கப்பட்டேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் அதனை புகாரில் குறிப்பிடவில்லை. எனது வாக்குமூலம் பின்னர் பெறப்படும் என்று கூறினார்கள். ஆனால் பின்னர் எதுவுமே நடக்கவில்லை.” என்று ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.

காவல்துறையோ பாதிக்கப்பட்டவர்கள் சாதி குறித்து தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்துடன் தன்னை தாக்கியவர்கள் மது போதையில் இருந்ததாகவும் அவர்கள் தங்களுடன் கூர்மையான ஆயுதங்கள் வைத்து தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாகவும் ஆஷிஷ் கூறிய போதும் காவல்துறை குற்றவாளிகள் மீது கடுமையான சட்டங்கள் எதிலும் வழக்கு பதிவு செய்யவில்லை.

“குற்றவாளிகள் மீது பிரிவு 341, 323, 506,  ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை கொலை முயற்சி பிரிவிலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யவில்லை.” என்று ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.

டில்லி மாநகராட்சித் துறையில் துப்பரவு பணியாளராக பணியாற்றும் ஆஷிஷின் தந்தை ஹரிஷ் பெனிவால், இது குறித்து டில்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். “காவல்துறை போதுமான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் சமர்பிக்க கடிதம் ஒன்று எழுதியுள்ளோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் மாவட்ட அளவிலான மூத்த அதிகாரிகளிடத்திலும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி முதல்வரிடமும் புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் மேல் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாகவும் ஆஷிஷின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற ஒரு சம்பவம் நாட்டின் தலைநகரில் நடைபெற்றிருப்பது என்பது வெட்கக்கேடானது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கல்லூரி முதல்வர், “நான் ஆஷிஷின் பெற்றோரை சந்தித்தேன். அவர்கள் கடுமையான பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அது தொடர்பாக காவல்துறைக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். மேலும் கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்தும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.