உயர் ஜாதியினரின் கை கால்களை உடைப்போம்: குஜராத்தில் தலித் பேரணி

0

பசுமாட்டை காரணம் காட்டி தலித் மக்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வரும் வேளையில் குஜராத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர் தலித் மக்கள். ஆயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கெடுத்துக்கொண்ட இந்த பேரணியில் அம்மக்களின் கஷ்டங்களும் கோபங்களும் வெளிப்படுத்தப்பட்டன.

30 தலித் இயக்கங்கள் ஒன்று கூடி நடத்திய இந்த பேரணியில் இனி இறந்த விலங்குகளின் உடலை எடுக்கப் போவதில்லை என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. உணா தலித் அத்யாசார் லதாத் சமிதி என்ற பெயரில் இம்மக்கள் திரண்டனர். இந்த தலித் எழுச்சிக்கு ஜூலை மாதம் 12 ஆம் தேதி இறந்த பசுவின் தோலை உரித்த நான்கு தலித்கள் கட்டிவைத்து தாக்கப்பட்டதே காரணம்.

மாநிலத்தின் வெறும் 7% இருக்கும் தலித் மக்களின் குரல் இது வரை அதிகார வர்க்கத்திற்கு கேட்டதில்லை. ஆனால் அதனை தெளிவாக நாடு முழுவதும் கேட்கச் செய்துள்ள இந்த பேரணியில், தங்களது கோபங்களையும் அம்மக்கள் வெளிப்படுத்த தவறவில்லை.

இந்த பேரணியில் பேசிய ஜிக்னேஷ் மேவானி, “அரசிடம் எங்களுக்கு ஆயுதங்கள் தருமாறு கூறுங்கள். எங்களை தர்காப்புக் கலையில் பயிற்றுவிக்க கூறுங்கள். நாங்கள் இதுவரை அனுபவித்த கொடுமைகள் போதும். இனியும் எங்களை உயர்சாதியினர் கொடுமைப் படுத்த நினைத்தால் அவர்களின் கைகளையும் கால்களையும் உடைப்போம்.” என்று கூறியுள்ளார். இவருக்கு அடுத்து பேசிய மற்றொரு தலைவர், தலித் மக்களின் உரிமையை காப்பாற்ற சட்டபூர்வமாகவும் அமைதியாகவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த பேரணிக்கு மாநில பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியதே இது பெரும் தோல்வியை தழுவும் என்று கருதி தான் என்று பெயர் கூற விரும்பாத பா.ஜ.க. தலித் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் அங்கு கூடிய மக்களின் கூட்டம் அவர்களை கலக்கமடைய செய்துள்ளது. பேரணிக்கு மக்கள் செல்ல முடியாமல் காவல்துறையினர் பல இடங்களில் தடுப்புகளை அமைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மாநிலத்தில் பரவலாக பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

தலித் மக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்களும் இந்த பேரணியில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். தலித் முஸ்லிம் இணைந்து போராடுவதை தவிர வேறு வழி இல்லை என்று பேராசிரியர் நசிர் அன்சாரி கூறியுள்ளார். குஜாத்தில் உள்ள முஸ்லிம்களும் தலித்களும் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஒரே படகில் பயனிகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது குஜராத்தில் உள்ள கட்சிகளினால் மக்கள் வெறுப்படைந்து போய் இருக்கின்றார் என்றும் இதிலிருந்து புதிய தலைமை ஒன்று உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த பேரணியில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பாதயாத்திரை ஒன்று நடத்தப் போவதாக திட்டமிட்டுள்ளனர். இந்த பாத யாத்திரைக்கு குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வழக்கறிஞர் ஆன ராகுல் ஷர்மா தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. இவர் நரேந்திர மோடிக்கு மிகவும் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.