உறுப்பினர் இல்லாத ஹரியானா மனித உரிமை ஆணையம்: பசு பாதுகாப்பு குழுவில் 16 உறுப்பினர்கள்

0

ஹரியானாவை ஆளும் பாஜக அரசை பொறுத்தவரை மனித உரிமைகளை விட பசு பாதுகாப்பு முக்கியமெனும் அளவில், ஹரியானா மனித உரிமை அமைப்பு உறுப்பினர்கள் அற்ற நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. மனித உரிமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால் ஹரியானா மனித உரிமை ஆணையத்தின் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளன.

ஹரியானா மனித உரிமை ஆணையர் பதவி கடந்த 19  மாதங்களாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. மேலும் இந்த ஆணையத்தின் மேலும் இரண்டு நபர்களின் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் விளைவாக தீர்க்கப்படாத மனித உரிமை புகார்கள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்த புகார்களின் எண்ணிக்கை 2205 ஆக உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

சமல்காவை மையமாக கொண்டு இயங்கும் தகவல் அறியும் உரிமை போராளி P.P.கபூர், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி பெற்ற தகவலில் இது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “ஹரியானா மனித உரிமை ஆணையத்தின் முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதும், பசு சேவை குழுவில் 16  இடங்களும் நிரப்பட்டதை பார்க்கும் போதும், மனோகர் லால் கட்டார் அரசு மனித உரிமைகள் குறித்து கவலையற்று இருப்பதை காட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், மனித உரிமை ஆணையர் பதவி காலியாக இருக்கும் நிலையில், மொத்தம் 2205  வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் அதன் மீது எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 800 புகார்கள் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மனித உரிமை ஆணையர் பதவி மற்றும் உறுப்பினர் பதவிகள் போக, மனித உரிமை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட மொத்தம் 83  பணியிடங்களில் 34  காலியாக உள்ளது என்று கபூர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மனித உரிமை ஆணையம் 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் துவங்கப்பட்ட போது அதன் வருடாந்திர நிதியாக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது படிப்படியாக 6.5 கோடிகள் என்று அதிகரிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் இந்த நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட்டு ஹரியானா மனித உரிமை ஆணையத்தை இயங்கும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த பணியிடங்கள் ஏன் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, ஹரியானா மாநிலத்தில் தலித்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பெரும்பாலான புகார்கள் இந்த தரப்பு மக்களிடம் இருந்துதான் வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்துடன் பாஜக ஆட்சியின் பொது ஏறத்தாழ 90 பேர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இவற்றில் பல ஜாட் இன மக்கள் போராட்டத்தின் போதும், தேரா சச்சா சவ்தா மற்றும் ஆசாரம் பாபு பிரச்சனைகளின் போதும் நடைபெற்றுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜாட் இன மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது அதிகளவிலான கொள்ளை, தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது என்றும் இது அதிகப்படியான மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் மூன்று கோடி மக்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க எந்த ஒரு தளமும் இல்லை என்றும், இது அம்மக்களின் குறைகளை கேட்க எவரும் இல்லாதது போல் உள்ளது என்றும் கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.