உலகின் மிகப்பெரிய உளவு எந்திரமாக உருவெடுக்கும் ஆதார்?

0

காங்கிரஸ் கட்சி முன்மொழிந்து பாஜாகவால் முதலில் எதிர்க்கப்பட்டு பின்னர் பாஜக ஆட்சியில் அமர்ந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் குறித்து பலரும் தங்கள் கவலைகளை தெரிவித்து வந்தனர். தற்போது உலகின் மிகப்பெரிய உளவு எந்திரமாக ஆதார் மாறும் அபாயம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் அரசு யாருடைய தகவல்களையும் எந்த ஒரு தடையுமின்றி கையாளவும் அதன் மூலமாக எவரை வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்டிவைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. தனது சொந்த குடிமக்கள் மீதான அரசின் இந்த உளவு நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த ஒரு குடிமகனாலும் இயலாத நிலை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால் ஆதார் திட்டத்தின் பிரிவு 32  இன் கீழ் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அரசு யாருக்கு எந்த ஒரு விளக்கமும் தராமல் எந்த ஒரு தனிநபருடைய எந்த ஒரு தகவலையும் பார்க்க முடியும். ஆனால் இந்த தேசிய பாதுகாப்பு என்பதின் வரையறை என்னவென்று தெளிவாக இதில் குறிப்பிடப்படவில்லை. அப்படியானால் இது யாருடைய தகவலையும் எப்போது வேண்டுமாலும் அரசு கையாள வழிவகை செய்யும்.

முந்தைய நாஜி ஜெர்மெனியில் இது போன்ற ஒரு உளவு நடவடிக்கை தான் யூதர்களையும் இன்ன பிற சிறுபான்மையினரையும் தனிமைப்படுத்த  பயன்படுத்தப்பட்டது. தற்போது இங்கு நடைபெறுவது போலவே அதுவும் ஜெர்மெனியின் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே செயல்படுத்தப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. அந்த உளவு நடவடிக்கைகளை தொடர்ந்த நடைபெற்ற துயரங்களை வரலாறு அறியும்.

எந்த ஒரு ஜனநாயகத்திலும் ஒரு தனிமனித  அந்தரங்கம் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். தனிமனித அந்தரங்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் ஆலன் வெஸ்டின் குறிப்பிடுகையில், தனிமனித அந்தரங்கம் தான் ஒவ்வொருவருக்கும் சுயபுத்தியை வழங்குகிறது. தனிமனித சுயம் இல்லையென்றால் மனிதனின் தனித்துவம் அழிந்துவிடும். அதனை தொடர்ந்து அனைத்து முன்னேற்றங்களும் குறைந்துவிடும். ஃபாசிஸ ஆட்சிகள் தான் தனிமனித சுயத்தை ஒடுக்க நினைத்தன என்று கூறியுள்ளார்.

மேலும் தனிமனித அந்தரங்கம் மக்களுக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அது இல்லையென்றால் குடிமக்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு தங்களை வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற ஒரு நிலை சமூகத்தின் அடிப்படையையே சிதைத்து தொடர்ச்சியான மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார். இன்னும் ஒருவரின் ஒவ்வொரு அசைவுகளும் கண்காணிக்கப்படும் போதும் தனிப்பட்ட சுயமதிப்பீடு செய்வதற்கான உரிமை பரிக்கப்பட்ட போதும் ஒரு சமுதாய கட்டமைப்பு உடைந்துவிடும். அது குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று வெஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் இந்த நிலைப்பாடு எங்கேயும் எதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் ஒரு அரசை நிறுவதற்கான ஒரு முயற்சி, இது தனது அனைத்து குடிமக்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதை தனது இயல்பாகக் கொண்டுள்ளது. பாஜக அரசு தனது குடிமக்களை எப்போதும் தனது கண்காணிப்பதில் வைப்பதன் மூலம் அவர்கள் அரசை கேள்வி எழுப்புவதை விட்டு தவிர்க்க நினைக்கிறது என்ற நினைக்கத் தோன்றுகிறது.

மானியங்களுக்காக ஆதார் என்று தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யபப்டும் மொபைல் போன்களில் ஆதார் ஒருங்கிணைப்பு குறித்தும் அரசு பரிசீலித்து வந்த செய்திகளை நாம் அறிவோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களுக்கு தனி மனித அந்தரங்கத்தின் உரிமையையும் அது மீறப்படாது என்ற நம்பிக்கையும் ப்ரிவசி-க்கென சரியான சட்டங்களை இயற்றுவதன் மூலம் அரசு கொடுக்க வேண்டும். இதனை நிறைவேற்றாமல் ஆதாரின் ஆக்டோபஸ் கைகளை அரசு இன்னும் இன்னும் அதிகப்படுத்தக் கூடாது.

Comments are closed.