உள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்!

0

உள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்!

கி. ஸயீத் சாஹிபின் மரணம் உருவாக்கிய துயரத்திலிருந்து அவரது வாழ்க்கையின் நெருங்கிய உறவுகளும் அவருடன் பழகியவர்களும் இதுவரை விடுபடவில்லை. நாட்டின் மூலை, முடுக்குகளிலெல்லாம் படிப்படியாக வேர்களை பதித்து, மிகப்பெரிய வரலாற்று லட்சியத்தை சுமந்து கொண்டு வளர்ந்து வரும் நவீன சமூக இயக்கத்திற்கு தத்துவார்த்த ஒளியை அளிக்கும் அறிவார்ந்த பணியை ஓய்வின்றி கர்ம சிரத்தையுடன் இடைவிடாது அவர் நிறைவேற்றினார். நாடு முழுவதும் பயணித்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் வாழ்க்கை நெருக்கடிகளை மார்க்க அறிஞர்கள், சாதாரண மக்கள், கல்வியாளர்கள் முதலானவர்களிடம் தொடர்ந்து விவாதித்தார். பரந்த வாசிப்பு மற்றும் ஆய்வுகள் மூலம் சமூகம் உயிர்வாழ்வதற்கான மாஸ்டர் பிளானை தயாரித்து ஈமானிய உறுதியுடன் தத்துவார்த்த நிலைப்பாடுகளை உருவாக்குவதற்கு அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார். சித்தாந்த ரீதியான தலைமைத்துவ பண்பும், அமைப்பாக்கமும் அபூர்வமாக ஒருங்கே பெற்ற செயல் திறன் மிக்க தலைவராக ஸயீத் சாஹிப் திகழ்ந்தார்.

மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்களில் ஆளுமைத்திறனும், இதர மேலாண்மை பயிற்சிகளும் கொண்டாட்டத்துடன் குதூகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், அமைதி தவழும் முகபாவனை கொண்ட அந்த மனிதர் வகுப்பிற்குள் நுழைவார். பணிவான குரலில் ஒரு சூஃபியைப் போல பேசும் அவரது வகுப்பு துவங்கியவுடன் அமளியான சூழல் மாறி அமைதி நிலவும். பின்னர் வகுப்பில் ஒரு குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு நிசப்தம். திருக்குர்ஆன் வசனங்களுடன் சமகால பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் எளிமையாக விவரித்து குர்ஆனின் தத்துவார்த்த கண்ணோட்டத்துடன் கூடிய வகுப்பு மிகப்பெரிய பரவசத்தை ஏற்படுத்தும். புதிய உலகை உருவாக்குவதற்கான மனோபலத்தை அந்த வகுப்புகள் மாணவர்களிடம் ஆழப் பதித்திருந்தது.

தீனுல் ஹக்கும் (தமிழில் மதமும் ஜனநாயகமும்), பத்ரின் அரசியலும் போராட்டத்தின் பின்னணிகளும், அகக்கண்ணும் மன்னிப்பு கோரும் மனநிலையோடு மட்டுமே வாழ்ந்து வந்த ஒரு தலைமுறையினருக்கு மேன்மை உணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டியது. செயல்வீரர்களின் வாழ்க்கையை  நுட்பமான பேணுதலுடன் கூடிய இஸ்லாமிய வாழ்வாக மாற்றியதில் வெற்றிக்கான வாழ்வும், அவருடைய தர்பியா வகுப்புகளும் பெரியதொரு பங்கினை வகித்தன.

முகஸ்துதியாக கருதப்படும் சிறிய விஷயத்தை கூட அவர் சிறிதும் விரும்பமாட்டார். பிறர் முன்னால் உயர்ந்து நிற்பதற்கு அவர் ஒரு போதும் நாட்டம் கொள்ளவில்லை. அவர் எப்போதும் ஒரு குர்ஆன், ஹதீஸ் தேடுபொறியாக இருந்தார் என்று கூறலாம். சில முக்கிய வார்த்தைகளை மட்டும் கூறினால், வசன எண்ணும், ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழர்களின் பெயர்கள், பெரும்பாலும் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் பதில் அளிப்பார். எழுதும்போது வரும் தவறுகளை உடனேயே சுட்டிக்காட்டுவார்.

இயக்கத்திற்கு எதிராக கேரளாவில் தீவிரமான எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடந்த காலக்கட்டத்தில் இயக்க தலைவர்களுடன் பொதுமக்கள் கலந்துரையாடுவதற்கான திறந்த மன்றங்கள் (ளிஜீமீஸீ திஷீக்ஷீuனீ) பல இடங்களிலும் நடத்தப்பட்டன. நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (என்.டி.எஃப்.) அமைப்பை (கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு முந்தைய பெயர்) வீழ்த்துவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக கருதி தர்க்க வாதங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பல்வேறு கிதாபுகளுடன் கேள்வி கேட்க தயாராக வந்தனர். உணர்ச்சிகள் மேலிட கேள்விகளை எழுப்பி ஒரு சண்டைக்கு தயாராக வந்தவர்கள், எதிர் தரப்பிடமிருந்து ஆக்ரோஷமான பதிலையும், கேலி, கிண்டல், சவால்களையுமே எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாற்றமாக தெளிந்த நீரோடையப்போல ஸயீத் சாஹிபின் பணிவுடன் கூடிய உரை அமைந்திருந்தது. எதிர்தரப்பின் கேள்விகளோ அனுபவரீதியான சில கவலைகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் சுருங்கிவிட்டது.

தாராளவாத, பெண்ணிய, பகுத்தறிவு கொள்கைகள் முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் குறித்தும், அதனை தூண்டும் காரணிகளைக் குறித்தும் தனது மகளின் புது வீடு புகும் நிகழ்ச்சியில் வைத்து ஸயீத் சாஹிப் பகிர்ந்துகொண்டார். அவரின் மரணத்திற்கு சில நாட்கள் முன் நடைபெற்ற நிகழ்ச்சி இது. நவீன கொள்கைகள் குறித்து எவ்வளவு ஆழமாக அவர் பகுப்பாய்வு செய்கிறார் என்பதை இதன் மூலம் அறிய முடிந்தது. எதிரியை குறித்த பயமே பலருக்கும் மார்க்கத்தை குறித்த தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது. எதிரியின் விருப்பங்களுக்கு ஏற்ப இஸ்லாத்திற்கு விளக்கமளித்து முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் காப்பாற்றி விடலாம் என்ற சிந்தனைகளிலிருந்துதான் பெரும்பாலும் தாராளவாத பார்வையும், சர்வ மத கலந்துரையாடல்கள் போன்றவையும் உருவாகின்றன. விஷயத்தின் ஆணிவேரை புரியாமல் அவர்களின் வாதங்களை மேலோட்டமாக கண்டு ஆதாரங்களையும், பகுத்தறிவையும் மட்டும் எடுத்து வைத்து பதிலளிப்பது வீண் வேலை என்றே அவர் கருதினார்.

கடந்த சில மாதங்களாக உடல் ரீதியான சில கஷ்டங்களை ஸயீத் சாஹிப் அனுபவித்ததாக அவருடன் பயணித்த சக உறுப்பினர்கள் தற்போது நினைவுகூர்கின்றனர். உடல் ரீதியான பாதிப்புகள் கடுமையாக இருந்தால் மட்டுமே அவருடைய முகத்தில் அதன் பிரதிபலிப்பை காணமுடியும். மிக குறுகிய இவ்வுலக வாழ்வில் ஓரு நிமிடத்தைக் கூட வீணாக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் ஸயீத் சாஹிப். நோயும், முதுமையும் விழுங்கத் துவங்கிய உடலை  பிடித்து இழுத்துக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த தடங்கல் இல்லாத அவரது பயணத்திற்கு தற்காலிக ஓய்வு ஜெய்ப்பூரிலிருந்து திரும்பும்போது ஏற்பட்டது.

ஈரல் முழுவதும் பெரும்பாலும் புற்றுநோய் பரவியிருந்தது தெரிய வந்தது. பாதியில் நின்ற புத்தகமும், இயக்கம் ஒப்படைத்த முக்கியமான சில ஆய்வுகளுக்கான பொறுப்புகளும் பூர்த்தியடையாததால் பல்லாயிரக் கணக்கானவர்களின் பிரார்த்தனைகளின் சிறகுகளில் ஏறி அந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு தற்காலிக மீள் வரவிற்கு நோயால் ஏற்பட்ட பலவீனங்களுக்கு மத்தியிலும் அவர் விரும்பினார். ஆனால், உடல் ஆரோக்கியம் அன்றாடம் பின்னோக்கி செல்வதை புரிந்துகொண்ட கடைசிக் கட்டத்திலும் உறவினர்கள், நண்பர்களோடு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள, இறுதி நிமிடங்களை செலவழிக்க அவர் விரும்பவில்லை. இறுதி தினங்களில் வீட்டிலிருந்து லேப்டாப்பை கொண்டு வந்து மகளின் உதவியுடன் புத்தகத்தை எழுதி முடிக்க முயற்சித்ததும் அதனால்தான்.

மரணத்திற்கு முந்தைய தினம் இரவில் தூக்கமில்லாமல் கிடக்கும்போது திடீரென மகளிடமிருந்து ஃபோனை வாங்கி அதில் திருக்குர்ஆன் மென்பொருளை திறந்து சூரா ஸாதில் ஏதோ தேடி விட்டு ஃபோனை திரும்ப கொடுத்தார். யாஸீன் சூரா, ஆயத்துல் குர்ஸியை தொடர்ச்சியாக ஓதியும், ஓதக்கேட்டும், வாழ்க்கையைப் போலவே அவரது இறுதி பயணமும் திருக்குர்ஆனின் ஒளியால் நிரம்பியிருந்தது. இதனிடையே நினைவு இழக்க ஆரம்பித்தது. முகத்தில் புன்சிரிப்பும், யாருடனோ ஸலாம் கூறி பேசவும் செய்தார்.  குர்ஆன் வசனங்களை ஓதியும், இறுதியாக தெளிவாக கேட்குமளவுக்கு கலிமாவையும் உச்சரித்துக்கொண்டு அமைதியாகவே அவர் ஏப்ரல் 2 அன்று மாலையில் கண்களை மூடினார்.

இயக்கத்தின் செய்தி கிடைத்தவுடனேயே தான் மனனம் செய்து ஏற்கனவே தனது சிந்தனையில் பதிந்துவிட்ட கொள்கையின் செயல் களம் தன் கண் முன்னால் இருப்பதை புரிந்துகொண்டார். பின்னர் அவர் சற்றும் தாமதிக்கவில்லை.செயலூக்கமிக்க அந்த வாழ்க்கை, தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டது என்ற மனநிறைவுடனும் திருப்தியுடனும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். அல்லாஹ் ஸயீத் சாஹிபின் பிழைகளை மன்னித்து சுவனத்தின் உயர்ந்த ஃபிர்தவ்ஸில் பிரவேசிக்க செய்வானாக!

அறிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், சொற்பொழிவாளர் என பல நிலைகளில் பிரபலமான கி. ஸயீத் 1955 ஜூன் 1-ஆம் தேதி மலப்புரம் மாவட்டம் எடவண்ணா என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை அலவி மௌலவி. அவர் திருக்குர்ஆனை கற்றறிந்த மார்க்க அறிஞரும், முஜாஹித் இயக்கத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவருமாவார். சயீத் சாஹிபின் சகோதரர் அப்துல் ஸலாம் சுல்லமி ஹதீஸ் கலை அறிஞரும், முஜாஹித் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமாவார். அவர் கடந்த ஆண்டு மரணித்தார். ஸயீத் சாஹிபுக்கு மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும்  உள்ளனர்.

ஜி.எம்.யு.பி ஸ்கூல் எடவண்ணா, ஐ.ஓ.ஹெச்.எஸ். எடவண்ணா, எம்.இ.எஸ். மம்பாடு கல்லூரி ஆகிய இடங்களில் கல்வி பயின்ற ஸயீத் சாஹிப், மஞ்சேரி தலைமை தபால் நிலையத்தில் மக்கள் தொடர்பு ஆய்வாளராக பணியாற்றி இயக்க பணிகளுக்காக விருப்ப ஓய்வு பெற்றார். 2002&-2006 காலக்கட்டத்தில் கேரள என்.டி.எஃப் சேர்மன், என்.டி.எஃப். மாநில செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர், முஸ்லிம் ரிலீஃப் நெட்வர்க் தலைவர், சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர், இண்டர் மீடியா பப்ளிஷிங் லிமிடட் இயக்குநர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். ஸஃபல ஜீவிதம் (வெற்றிகரமான வாழ்க்கை), அகக்கண், பத்ரின் அரசியல், குர்ஆன் அன்ஃபால் அத்தியாயம் விளக்கவுரை, போராட்டத்தின் பின்னணிகள் ஆகியன அவர் எழுதிய முக்கிய நூற்களாகும்.

-செய்யது அலி

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.