உஸாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்: அமெரிக்க புலனாய்வு செய்தியாளர் ஷிமோர் ஹெர்ஷ்

0

வாஷிங்டன்:பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் இடையே உருவான உடன்படிக்கையின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டு மே மாத துவக்கத்தில் உஸாமா பின் லேடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க புலனாய்வு செய்தியாளர் ஷிமோர் ஹெர்ஷ் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘லண்டன் ரிவியூ ஆஃப் புக்ஸ்’ என்ற பத்திரிகையில் ஹெர்ஷின் நீண்ட கட்டுரை இடம் பெற்றுள்ளது.அதில் அவர் கூறியுள்ள முக்கிய கருத்துக்கள்:
உஸாமாவின் உடல் ஆப்கானிஸ்தானில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பலரும் பரப்புரை செய்வதுபோல கடலில் புதைக்கப்படவில்லை. உஸாமாவின் மரணம் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பொய்க்கதைகளை புனைந்தார். ஒபாமா பரப்புரை செய்ததுபோல, அமெரிக்க உளவுப்பிரிவும், சிறப்பு கடல்படையினரும் இணைந்து நடத்திய ஆபரேசன் மூலம் உஸாமா கொல்லப்படவில்லை. மாறாக, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினர் இடையே உருவான உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அவர் கொல்லப்பட்டார். உஸாமா பின் லேடன் கொலை செய்யப்பட்ட அபோடாபாத்தில் உள்ள வீட்டில் பல வருடங்களாக பாகிஸ்தான் உளவுத்துறையின் காவலில் இருந்தார்.(இதற்கு ஹெர்ஷ் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்)
பாகிஸ்தான் உளவுத்துறையினர் உஸாமா காவலில் வைக்கப்பட்டிருந்த பகுதியின் மின்சாரத்தை துண்டித்ததோடு, அப்பகுதியில் வரும் அமெரிக்க ஹெலிகாப்டர்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் தடை ஏதும் ஏற்படுத்தாத அளவுக்கு ஏற்பாடுகளையும் செய்தனர். நோயாளியும், நிராயுதபானியாக இருந்தவருமான உஸாமாவை கொலை செய்ய ஒரேயொரு தோட்டாவை மட்டுமே பயன்படுத்தினர். அவருடைய உடலை கடலில் புதைக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடக்கம் செய்துள்ளனர். மிகவும் மதிப்புமிக்க ஆதாரங்களின் அடிப்படையிலேயே இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க ஊடகங்கள் உஸாமா படுகொலையில் வெள்ளை மாளிகையையே சார்ந்திருந்தன. அமெரிக்க சிறப்பு படையினர் உஸாமா தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்தபோது அவர் ஆயுதம் வைத்திருந்தார், ஒரு பெண் உஸாமாவை காப்பாற்ற முயற்சித்தார் என்பதெல்லாம் பொய்.
இவ்வாறு ஹெர்ஷ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.