உ.பி: கால்நடை திருட்டு குற்றம் சுமத்தி 20 வயது முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

0

உ.பி: கால்நடை திருட்டு குற்றம் சுமத்தி 20 வயது முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

உத்திர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்திலுள்ள போலாபூர் ஹிந்தோலியா கிராமத்தில் கால்நடைகளை திருக்கிறார் என்று குற்றம் சுமத்தி 20 வயது முஸ்லிம் இளைஞரை 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி தாக்கப்பட்ட இளைஞர் ஷாருக்கான்-ஐ காவல்துறையினர் வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கும் போது அவர் உயிருடனேயே இருந்துள்ளார். ஆயினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து பரேலி காவல்துறை கண்காணிப்பாளர் அபினந்தன் சிங் தெரிவிக்கையில், “ஷாருக் கான் மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதியில் உள்ள கஜேந்திர பால் என்பவரது எருமை ஒன்றை நள்ளிரவு 3 மணியளவில் திருட முயற்சித்துள்ளனர். இவர்களை கஜேந்திர பால் கண்டதும் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். சுமார் ஒரு 50 பேர் அங்கு திரண்டு வர கானுடன் இருந்த மூன்று பேர் அங்கிருந்து தப்பி விட்டனர். அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்ட கானை அதிகாலை 6 மணி வரை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை மீட்டு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் அந்த கும்பலை அமைதிப்படுத்த முயற்சித்ததாகவும் ஆனால் அந்த கும்பல் தனது பேச்சை கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 30 நபர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இத்துடன் கால்நடைகள் திருடியதாக கொல்லப்பட்ட இளைஞர் ஷாருக் கானுடன் இருந்த மூன்று பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கொலை செய்யப்பட்ட கானின் சகோதரர் வாசிம் கான் தனது சகோதரர் குறித்து கூறுகையில், “செவ்வாய் கிழமை இரவு 10 மணியளவில் தனது உறவைனர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஷாருக் கான் விரும்பினார். வெளியே பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அவரை வெளியில் விட எங்கள் பெற்றோர் மறுத்தனர். சில நேரம் கழித்து கானின் நண்பர்கள் வரவே கான் வெளியே சென்றார். அதிக தூரம் செல்லப்போவதில்லை என்று எங்களிடம் உறுதியளித்து விட்டு சென்றார்.” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.