உ.பி.:கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் பலி!

0

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதியில் இருந்து இதுவரை 30 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி கோரக்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தைகளின் மரணத்திற்கு போதிய ஆக்ஸிஜன் இல்லாமையே காரணம் என்று மருத்துவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தெரிவித்துள்ளனர்.இதனை மாநில அரசாங்கம் மறுத்துள்ள போதும் அதுதான் உண்மை என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள எதிர்கட்சிகள் மாநில சுகாதார துறை அமைச்சர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
30 குழந்தைகள் இறந்திருப்பது சோகம் அல்ல, இது ஒரு படுகொலை என்று குழந்தைகள் நல ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்தி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கோரக்பூருக்கு தேவை ஆக்ஸிஜனும் மருந்துகள் அன்றி வந்தே மாதரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார் பத்திரிகையாளர் நிகில் வாக்லே.
அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியான ஆக்ஸிஜன் இன்றி 30 குழந்தைகள் மரணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அதனை மறைக்க முயலும் மாநில பா.ஜ.க. அரசாங்கத்தின் செயல் கடும் கண்டனத்தையும் பெற்றுள்ளது.

(புகைப்படம்: இந்துஸ்தான் டைம்ஸ்)

Comments are closed.