உ.பி.யில் சிறுநீர் குடிக்க வைக்கப்பட்ட தலித்: நடப்பது எங்களது ஆட்சி என்ற சாதி வெறியர்கள்

0

உ.பி.யில் சிறுநீர் குடிக்க வைக்கப்பட்ட தலித்: நடப்பது எங்களது ஆட்சி என்ற சாதி வெறியர்கள்

உத்திர பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியை சேர்ந்த உயர் சாதி தாக்கூர் இனத்தவர்கள் விவசாய கூலித்தொழிலாளியான சீதாராம் வால்மீகி என்பவரை கடுமையாக தாக்கி அவரை சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி மாலை ஐந்து மணியளவில் தனது நிலத்தில் அறுவடை செய்ய சென்ற சீதாராமிடம் தாக்கூர் கிராமத்தை சேர்ந்த விஜய் சிங், பிங்கு சிங், சைலேந்திர சிங் மற்றும் விக்ரம் சிங் ஆகியோர் முதலில் தங்களது நிலத்தின் பயிர்களை அறுவடை செய்து தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு தன்னுடைய குடும்ப நிலத்தில் முதலில் அறுவடை செய்ய வேண்டிய பணிகள் உள்ளதாகவும் அதனை தான் முடிக்க வேண்டும் என்று சீதாராம் கூறியுள்ளார். மேலும் தனக்கு உடல் நிலை சரி இல்லை எனவும் அதனால் அவர்களது நிலத்தில் அறுவடை பணிகளை தன்னால் செய்யமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் மோசமான சாத்திய வசவுகளை கூறியவாறு சீதாரமை கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன் அவரை ஒரு வேப்ப மரத்தில் கட்டி வைத்து அவரது மீசையை பிடுங்கியுள்ளனர். மேலும் சிறுநீரையும் குடிக்க வைத்துள்ளனர்.

சீதாராமிற்கு நடத்த கொடுமைகளை நேரில் கண்ட அவரது குடம்பத்தினர் அவரை விட்டுவிடுமாறு அந்த சாதி வெறியர்களிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்களோ, “யாருடைய ஆதரவு இவனுக்கு உள்ளது. நடப்பது எங்களது ஆட்சி.” என்று மீண்டும் மீண்டும் கூறி சீதாராமை தாக்கியுள்ளனர்.

வேறு வழி தெரியாத சீதாரம் குடும்பத்தினர் காவல்துறை உதவி எண்ணான 100ற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து சீதாராமின் சகோதரர் அன்பிர் வால்மீகி தெரிவிக்கையில், “காவல்துறையின் ஒரு குழு வந்து தாகூர்களை களைந்து போகச் சொல்லி சீதாராமை அவர்களிடம் இருந்து விடுவித்தது. பின்னர் அன்று இரவு எங்களது வீடு மீண்டும் தாக்கப்பட்டது. மீண்டும் நாங்கள் காவல்துறை உதவி எண்ணை அழைத்தோம். ஆனால் இந்த முறை காவல்துறை சீதாரம் மற்றும் விஜய் சிங் ஆகியோரை CrPC பிரிவு 151 இன் கீழ் கைது செய்தது.” என்று தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்த சீதாரம் மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனது மகன் காவல் நிலையத்தில் இருக்கும் போது காவலர்களாலும் தாக்கப்பட்டுள்ளார் என்று சீதாராமின் தந்தை ராம் குலாம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பதாவுன் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் ஷர்மா, குற்றவாளிகள் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் நடைபெற்ற ஹசரத்பூர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கடந்த ஏப்ரல் 29 தேதி இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சீதாரம் குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட தாக்கூர்களிடம் இருந்து சீதாராம் 6000ரூபாயை முன்பணமாக பெற்று பின்னர் பணிசெய்ய மறுத்ததாக அசோக் குமார் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றசாட்டை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட முன்வைக்கவில்லை என்று தெரிகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரது சகோதரரான விகாஸ் குமார் சிங், “எப்போதும், கிராம அறுவடை காலங்களில் ஒரு நிலத்திற்கு நாற்பது கிலோ கோதுமையை கூலியாக கொடுப்பது தான் வழக்கம். ஆனால் சீதாரம் அதனை பெற மறுத்து ஆணவமாக நடந்துகொண்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

தனது மகனிற்கு நடந்தவை பற்றி கூறிய சீதாராமின் தாயார் கந்தி தேவி, “அவனை அவர்கள் மிகவும் இழிவாக நடத்தியுள்ளனர். நாங்கள் குற்றவாளிகள் என்றால் எங்களை இயற்கை தண்டிக்கட்டும். அவர்கள் குற்றவாளிகள் என்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறிய அப்பகுதியின் தலித் சமூக மக்கள், தங்கள் சமூகம் மீது இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றும் ஆனால் இன்றைய இளைஞர்கள் இதனை பொறுத்துக்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சாதிய கொடுமைகள் நடக்கும் பொழுதில் தான் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

Comments are closed.