ஊழல் எனக்கு சொந்தம்

0

 – ரியாஸ்

 ‘ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழல் மயமாவதற்கு பத்து ஆண்டுகள் ஆனது. ஆனால், நமது மக்கள் இந்த இலக்கை ஒரே ஆண்டில் அடைந்து விடுவார்கள் போல் தெரிகிறது.’

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு (19982004) இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது சுவதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் அமைப்பாளர் தத்தோபாத் தெங்காடி தெரிவித்த கருத்துகள் இவை. சுவதேசி ஜாக்ரன் மஞ்ச் சங்பரிவார் அமைப்புகளில் ஓர் அமைப்புதான். தெங்காடியின் கருத்துகளை மெய்ப்பிக்கும் விதமாக தற்போதைய மோடி அரசும் செயல்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டில் எதையும் சாதிக்காத மோடி தலைமையிலான அரசு, கடந்த ஓராண்டில் நாங்கள் ஊழலற்ற நிர்வாகம் வழங்கினோம் என்று பிரமாதமாக விளம்படுத்தினார்கள். ஆனால், இந்த விளம்பரங்களை கழட்டுவதற்கு முன்னரே பா.ஜ.க.வின் உண்மை முகம் வெளியே வந்தது. பெட்ரோல் பங்க் ஊழலையும் சவப்பெட்டி ஊழலையும் சுரங்க ஊழலையும் செய்தவர்கள் எப்படி பரிசுத்தவான்களாக மாறினார்கள் என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்தது.

சந்தேகமே வேண்டாம், நாங்கள் என்றுமே மாறவில்லை என்று மக்களுக்கு உணர்த்தினார்கள் சுஷ்மா சுவராஜூம் வசுந்தரா ராஜேவும் பங்கஜா முண்÷டிவும். ஊழல ஊழல் என்று பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த ஓராண்டில் செய்த ஊழலை பார்த்து மக்கள் ஆடிப்போய் நிற்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது இரண்டாவது ஐந்தாண்டில்தான் ஊழல் செய்தார்கள். இவர்கள் முதல் வருடத்திலேயே ஆரம்பித்து விட்டார்களே என்று மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.

இங்கிலாந்தில் வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழில ஜூன் 7ம் தேதி வெளியான ஒரு செய்தி தங்களுக்கு இவ்வளவு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க.வினர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஐ.பி.எல். போட்டிகளின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் லலித் மோடி, போர்ச்சுகல் நாட்டிற்கு செல்வதற்கான விசா வழங்க வேண்டும் என்று அதீத முயற்சிகளை மேற்கொண்டர் பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ். இதனை குறித்து செய்தி வெளியிட்ட தி சண்டே டைம்ஸ், இதற்காக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கீத் வாஸிடம் கோரிக்கை வைத்தார் என்றும் செய்தி வெளியிட்டது.

லலித் மோடி குறித்து பெரிய அளவில் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரிக்கெட் போட்டிகளை சந்தைப் பொருளாக மாற்றி இளம் விளையாட்டு வீரர்களின் ஒழுக்கத்தை பாதாளத்தில் விழச் செய்தவர். ஐ.பி.எல். போட்டிகளின் ஜாம்பவானாக இருந்தவர் கிரிக்கெட் வாரியத்தின் உட்கட்சி அரசியலால் மதிப்பை இழந்தார். தொடர்ந்து சூதாட்டம் மற்றும் பண மோசடிகள் வழக்கும் அவர் மீது சுமத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2010ல் இங்கிலாந்திற்கு சென்றவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை. இவரின் பாஸ்போர்ட்டை இந்திய அரசாங்கம் முடக்கி வைத்தது.

இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான் லலித் மோடியின் விசாவுக்குதான் சுஷ்மா அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். விஷயம் வெளியே வந்தவுடன் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் லலித் மோடிக்கு தான் உதவியதை மறுக்கவில்லை. மறுக்காதவர் கொடுத்த விளக்கம்தான் அனைவரையும் இன்னும் ஆசசரியத்தில் ஆழ்த்தியது. ‘லலித் மோடியின் மனைவி கேன்சருக்கான சிகிச்சையை போர்ச்சுகல் நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியை சென்று சந்திப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டேன்” என்று கூறினார்.

சாதாரண போஸ்டர் வழக்குகள் தொடங்கி பொய் வழக்குகள் என ஏராளமான மக்கள் இந்தியாவில் பாஸ்போர்ட் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய அமைச்சர் முன் வருவாராடு? லலித் மோடிக்கு இவர் உதவி செய்ததில் மனிதாபிமானத்தையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. லலித் மோடி மீது அமைச்சருக்கு ஏன் இந்த அதீத அக்கறை?

சுஷ்மாவின் கணவரான சுவராஜ் கௌசல் 22 ஆண்டுகளாக லலித் மோடிக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றியவர். சுஷ்மாவின் மகள் பன்சாரி லலித் மோடியின் சட்ட அணியில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். கணவரும் மகளும் லலித் மோடிக்கு சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து கொண்டிருக்க அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு விசா கிடைக்க உதவி செய்துள்ளார் சுஷ்மா.

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள தயாரில்லாமல் வெளிநாட்டில் இருக்கும் ஒருவருக்கும் மத்திய அமைச்சர் எப்படி உதவி செய்ய முடியும் என்ற நியாயமான கேள்விக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. சுஷ்மாவும் கீத் வாஸூம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக லலித் மோடிக்கு 24 மணி நேரத்தில் விசா வழங்கப்பட்டது.

மனிதாபிமான உதவிகளை பெற்ற லலித் மோடி அடுத்து என்ன செய்தார். ஆகஸ்ட் 1,2014 அன்று போர்ச்சுகல் சென்றவர் அடுத்த மூன்றாவது நாளில் இபிசா என்ற இடத்திற்கு சென்றார். மனைவிக்கு சிகிச்சை நல்ல முறையில் முடிந்ததை தொடர்ந்து அதனை கொண்டாட அங்கு சென்றதாக தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். இதற்கு பின் சுஷ்மாவின் மனிதாபிமான உதவியை பெற்ற லலித் மோடி பத்து மாதங்களில் 25 இடங்களுக்கு பயணம் சென்றார். விசாரணைக்காக லலித் மோடியை இந்தியா கொண்டு வர விருப்பம் இல்லாத மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர் நாடுநாடாக சுற்றுவதற்கு மனிதாபிமான உதவி வழங்கியுள்ளார்.

சுஷ்மாவின் பிரச்சனை தீர்வதற்குள், பா.ஜ.க.விற்கு அடுத்த தலைவலி ஆரம்பமானது. ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேயும் தனக்கு உதவிகளை செய்துள்ளதாக லலித் மோடி தெரிவிக்க பிரச்சனை இன்னும் பூதாகரமானது. மோடிக்கு விசா வழங்குமாறு சுஷ்மா கோரிக்கை வைத்தார் என்றால், அவருக்கு இங்கிலாந்தில் குடியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில எதிர்கட்சி தலைவராக வசுந்தரா இருக்கும்போது இச்சம்பவம் நடைபெற்றது. லலித் மோடியை காங்கிரஸ் அரசாங்கம் பழி வாங்குவதாகவும் கூறினார் வசுந்தரா. தான் கையெழுத்திட்ட சாட்சி ஆவணத்தை ரகசியமாக வைக்குமாறும் அவர் மோடியிடம் கூறியுள்ளார்.

லலித் மோடி குடும்பத்துடன் தனக்கு தொடர்புள்ளதை வசுந்தராவும் மறுக்கவில்லை. 2003ல் வசுந்தரா ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்ற லலித் மோடி தனது ஆட்டத்தை வேகமாக ஆட ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரிய தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வசுந்தராவின் மகனும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங்கின் ஹோட்டல் நிறுவனமான நியாந்த் ஹெரிடேஜில் லலித் மோடி அதிகளவில் முதலீடு செய்துள்ளார்.

மோடி குடும்பத்துடனான தொடர்பை ஏற்றுக் கொண்டபோதும் ஆவணத்தில் கையெழுத்திட்டது தனக்கு ஞாபகம் இல்லை என்று முதலில் கூறினார் வசுந்தரா. பின்னர் சில பத்திரிகைகள் வெளியிட்ட அந்த ஆவணத்தில் வசுந்தராவின் கையெழுத்தில்லை என்று சமாதானம் கூறியது பா.ஜ.க. தலைமை. வசுந்தரா கையெழுத்திட்ட தெளிவான ஆவணத்தை பத்திரிகைகள் வெளியிட்ட போது மூத்த தலைவர்கள் வாய்மூடிக் கொண்டனர்.

ஒரு மத்திய அமைச்சரும் மாநில முதல்வரும் ஊழல் புகாரில் சிக்கியிருக்க அவர்கள் பதவி விலக வேண்டும என்று எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தாங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது எதற்கெடுத்தாலும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூப்பாடு போட்டவர்கள் தற்போது வாய்மூடி மௌனமாக உள்ளனர். கடந்த ஒரு வருடமாக மௌன விரதம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி தற்போதும் வாயை திறக்கவில்லை.

ஊழல் புகாரில் கட்சியும் அரசாங்கமும் திணறிக் கொண்டிருக்க கண்களையும் வாயையும் மூடிக்கொண்டு ராஜ்பாத்தில் படுத்துவிட்டார் மோடி. சுஷ்மாவும் வசுந்தராவும் ஒருபோதும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று ராஜ்நாத் சிங் மட்டும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார். ஏதோ எதிர்கட்சிகளுக்கு தான் பதில் கொடுத்துவிட்டதாக நினைத்து கொள்ளும் ராஜ்நாத் சிங், வாக்களித்த மக்களை மதிக்காமல் பேசுவதற்கான விளைவை விரைவில் சந்திப்பார். ஜனநாயகத்தின் வலிமையை அறிந்து கொண்டார்கள் இதனை நிச்சயம் நன்கறிவார்கள்.

சுஷ்மாவிற்கு ஊழல் ஒன்றும் புதிதல்ல. கர்நாடகா மாநிலத்தில் ஊழலையே வேலையாக கொண்டிருந்த ரெட்டி சகோதரர்களின் ஆத்மார்த்த தலைவராக இருந்தவர் சுஷ்மாதான் என்பதை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. மாநில அளவில் இருந்தவர் தற்போது மத்திய அளவிற்கு உயர்ந்துவிட்டார் என்பதை தவிர இதில் மாற்றம் வேறெதுவும் இல்லை.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில்

செõல்ல முடியாமல் பா.ஜ.க. திணறிக் கொண்டிருக்க அடுத்த ஊழல் பூதம் மஹாராஷ்டிராவில் இருந்து வெளியே வந்தது. ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களே ஆன தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு முதல் ஊழல் குற்றச்சõட்டில் சிக்கியுள்ளது.

அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே. இவர் மறைந்து முன்னாள் மத்திய அமைச்சர் கோபினாத் முண்டேயின் மகள். ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஊழலில் ஈடுபட்டு தனது சகாக்களுக்கே ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், உபகரணங்கள், புத்தகங்கள் வாங்கியதில் 206 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இந்த ஊழலில் ஈடுபடும் போது இதுவரை இல்லாத ஒரு சாதனையையும் பங்கஜா ஏற்படுத்தியுள்ளார். ஒரே நாளில் (பிப்ரவரி 13) பொருட்களை வாங்குவதற்கான 24 உத்தரவுகளில் கையெழுத்திட்டு ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இவரின் ஊழல் பட்டியல் மக்களை மயக்கமடைய செய்கிறது. பள்ளி குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் வாங்கியதில் எண்பது கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் குறித்த எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் களிமண் இருப்பதாக அஹமத் நகர் ஜில்லா பரிஷத் தலைவர் புகார் கொடுத்ததை தொடர்ந்துதான் இந்த பூதம் வெளியே வந்தது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் அச்சிடும பணி ஜகத்குரு பிரிண்டிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய காசோலை நிறுவனத்தின் பெயரில் வழங்கப்படாமல் அதன் உரிமையாளர் பானுதாஸ் தெகாவடே பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5.6 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களுககு தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் சாதனம் வழங்கும் பணி நாசிக்சை சேர்ந்த எவரெஸ்ட் என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்திற்கு இந்த சாதனங்களை தயார் செய்யும் தொழிற்சாலையே கிடையாதாம். 4,500 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு சாதனத்தின் விலையை 5,200 ரூபாய் என்று உயர்த்தியுள்ளார் பங்கஜா.

மூன்று இலட்சத்திற்கு அதிகமான தொகையில் பொருட்களை வாங்குவதாக இருந்தால் அதில் இடெண்டர் எனப்படும் மின்னணு டெண்டர் முறையை பயன்படுத்த வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால், அதில் எதையும் பின்பற்றாமல் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஊழலில் ஈடுபட்டுள்ளார் பங்குஜா. தனது அரசாங்கத்தின் முதல் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள பங்கஜாவிற்கு மாநில முதல்வர் பட்னாவிஸ் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் ஊழல் ஆட்டம் தற்போதுதான் ஆரம்பித்துள்ளது. இனி வரும் நாட்களில் இவர்களின் ஊழல் கரம் எங்கெல்லாம் நீளுமோ என்ற அச்சம்தாம் தற்போது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி, வளர்ச்சி என்று பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று எதையுமே செய்யாத நிலையில் உள்ளனர். பா.ஜ.க.விற்கு ஊழல் ஒன்றும் புதிதல்ல. மத்தியில் பிரதமர் மாறியதால் மட்டும் இந்த நிலைமாறி விடும் என்று நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை. ஏனென்றால் எதையும் கண்டும் காணாமல் இருக்கும் ஒரு பிரதமர்தான் மத்தியில் உள்ளார். கார்ப்பரேட்டுகளின் நலன் காப்பதில் பெரு முயற்சி எடுக்கும் அவருக்கு ஊழலை கண்காணிப்பதற்கு நேரம் இல்லை போலும்.

சுஷ்மா, வசுந்தரா, பங்கஜா வரிசையில் அடுத்து யார் வருவார்கள் என்று இப்போதே மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

(ஜூலை 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.