எகிப்து அதிபர் மூர்ஸி அல்-ஜசீரா தொலைகாட்சி நிருபர்கள் உட்பட 11 பேர்களுக்கு சிறை

0

எகிப்து நீதிமன்றம் ஒன்று ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து அதிபர் மூர்ஸி உட்பட 11 பேர்கள் மீது கத்தார் அரசிற்காக உளவு பார்த்த வழக்கின் இறுதி தீர்ப்பை அறிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மே மாதம் 7 ஆம் தேதி வெளியான தீர்ப்பை இந்த நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கின் முதற்கட்ட தீர்பிற்குப் பின் எகிப்து முஃப்தியிடம் தீர்ப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் அந்த தீர்ப்புக்கு தனது ஒப்புதலை அளித்திருந்தார்.

அதிபர் மூர்ஸி மற்றும் அவரின் உதவியாளர் இருவருக்கு 25 ஆண்டுகாலம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. வேறு பல குற்றங்களுக்காக அதிபர் மூர்ஸிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மூர்ஸி மற்றும் அவரது உதவியாளர் அமின் எல்-சிராஃபி ஆகியோருக்கு தலா 15 ஆண்டு காலம் கூடுதல் சிறையும் எல்-சிராஃபியின் மகளுக்கு 15 ஆண்டு காலம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் ஒருவரான அல்-ஜசீரா அரபி தொலைகாட்சி சானலின் இயக்குனர் இப்ராஹீம் ஹிலால் எகிப்தில் இல்லாத போதும் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் மீது எகிப்து குறித்த ரகசியங்களை உளவு பார்த்து கத்தார் நாட்டிற்கு வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்துள்ளதோடு இது வெறும் அரசியல் பழிவாங்கும் முயற்சி என்று கூறியுள்ளனர்.

இது குறித்து ஹிலால் கருத்து தெரிவிக்கையில், “இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்றும் தன்னை ஆதிரப்படுத்திய தீர்ப்பு அது என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் ஆதாரமாக கூறப்படுவது எகிப்து ரகசிய போலீசின் விசாரணை அறிக்கைகளும், கைது செய்து சித்தரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலங்களும் தான் என்று கூறியுள்ளார். இது வெறும் அரசியல் வழக்கு என்றும், இந்த வழக்கு மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை எகிப்து அரசு அச்சுறுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹிலாலுடன் அல்- ஜசீரா பத்திரிகையாளர்கள் ஆலா சப்லன் மற்றும் அஸ்மா அல்காதிப் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை வன்மையாக கண்டித்துள்ள கத்தார் அரசு இது அரபு நாடுகளிடையேயான உறவின் மோசமான முன் உதாரணமாக திகழும் என்று கூறியுள்ளார். இது குறித்து கத்தார் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், கைரோ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆதாரமற்றது என்றும் இயல்புக்கும் நீதிக்கும் எதிரானது என்றும் கூறியுள்ளது. மேலும் கத்தார் அரசின் சகோதரத்துவ நாடுகளுக்கிடையே கடைபிடிக்கப்படும் கொள்கைகளை குறித்த தவறான கருத்தை பரப்புகிறது என்றும் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து வீயன்னாவை மையமாக கொண்ட சர்வதேச பத்திரிக்கை நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீவன் எல்லிஸ், அல்-ஜசீராவிடம் இந்த தீர்ப்பு குறித்து தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் ஆனால் எகிப்தின் நடப்பு பத்திரிக்கை சுதந்திரத்தை கருத்தில் கொள்ளும்போது இதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இன்டர்போல் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் குற்றம் சாட்டபப்ட்டவர்கள் மீது எகிப்து அரசு பிடியாணை பிறப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ள கூடாது என்றும் ஏனென்றால் இது அரசியல் ஆதாயம் கொண்ட போலியான வழக்கு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டபப்ட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிராக எந்த வித ஆதாரங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Comments are closed.