இந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் செயல்பட்டது.
பின்பு அது பரிணாம வளர்ச்சியடைந்து, சமூக அரசியல் மாற்றத்திற்கான ஒரு மாத இதழாக மட்டும் இல்லாமல் ‘விடியல்’ ஒரு சமூக இயக்கம் என்பதாகத்தான் மக்கள் மன்றத்தில் இன்றுவரை அங்கீகரிக்கப்பட்டு வருகின்றது.
விடியலின் வாசகர்கள் ஒவ்வொருவரும் அந்த சமூக மாற்ற இயக்கத்தின் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஒவ்வொரு வாசகரையும் தனது குடும்ப உறுப்பினராக பாவித்து சமூகத்தை சக்திப்படுத்தக்கூடிய பயணத்தில் முன்னோடியாக இருக்கும் விடியல், நவீன உலகின் வளர்ச்சியை உள்வாங்கி அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டது.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்றால், மக்கள் ஐந்தாவது தூணாக இருந்து ஊடகங்களில் கோலோச்சும் காலம் வந்துவிட்டது. சமூக வலைதளங்கள் அந்த சுதந்திரத்தை தற்போது மக்களுக்கு வழங்கியுள்ளது.
அந்த வகையில் வலைத்தளம் மற்றும் இணையதளம் மூலம் பரந்து விரிந்த அளவில் சமூக மாற்றத்திற்கு வித்திட விடியலும் தயாராகிவிட்டது.
இதனிடையே விடியலின் வளர்ச்சியின் பயனை ஒரு சில தனி நபர்கள் தங்கள் சுயநலனுக்கு பயன்படுத்திக் கொள்ளும் போக்கை விடியல் வாசகர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், வாசகர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் புத்தம் புது வடிவில் தற்போது ‘புதிய விடியலாக’ பரிணமித்து 20ம் ஆண்டில் கால் பதிக்கிறது நமது விடியல்.
நீதிக்கான போராட்டத்திலும் சமூகத்தை சக்திப்படுத்தக்கூடிய இந்த பயணத்திலும் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக்கூடாது என்ற உறுதியுடன், விடியலின் சமூக மாற்றத்திற்கான இந்தப் பயணம் கால் நூற்றாண்டை நோக்கி வீறு நடை போட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன், வாசகர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் அனைவரும் தங்களின் ஆதரவினை தொடர்ந்து நல்கிட வேண்டும் என்று விடியல் குடும்பம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.