எங்கள் பெயரில் வேண்டாம்: கூட்டுக் கொலைகளுக்கு எதிராக பிரச்சாரம்

0

நாட்டில் கூட்டுக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அக்லாக்கில் தொடங்கி அன்சாரி வரை வெறும் வதந்திகளை நம்பி அப்பாவிகலை வன்முறை கும்பல்கள் கடுமையாக தாக்கியும், அடித்துக் கொலை செய்வதும் அதனை தடுப்பதற்கு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் நாட்டின் நல்ல குடிமக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

இந்நிலையில் 16 வயது ஹாஃபிழ் ஜுனைத் வன்முறை கும்பலால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இத்தகைய கூட்டுக் கொலைகளுக்கு எதிரான பிரச்சாரம் துவங்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் கீழ் நாட்டில் உள்ள 11 முக்கிய நகரங்களில் எங்கள் பெயரால் அல்ல “NotInMyName” என்ற பெயரில் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இன்று நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பேரணியில் கொலை செய்யப்பட்ட ஜுனைதின் குடும்பத்தினரையும் அழைக்க திட்டமிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பேரணியை ஒருங்கிணைக்கும் MS.திவான் இது குறித்து கூறுகையில், இது மக்களின் கோபத்தையும் வருத்தத்தையும் பிரதிபலிகின்றது என்று கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்சாரத்திற்கு இத்தகைய வரவேற்ப்பை எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அவர் நாட்டில் நடைபெறும் இத்தகைய வன்முறைகளுக்கு நடுவிலும் சில நம்பிக்கை நமக்கு இருக்கின்றது என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில், அரசியலமைப்பு சட்டத்தை மீட்கவும், இத்தகைய தாக்குதல்களை எதிர்ப்பதற்கும் வலியுறுத்தப்படும் என்று கூறிய அவர் இன்று மாலை 6 மணியளவில் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் கூட்டுக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறைகளுக்கு எதிரானது எட்று கூறிய அவர், ஒரு உயிர்களை பாதுகாத்து நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பது அரசின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக #NotInMyName  என்கிற ஹாஷ்டாக் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Comments are closed.