எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்: மோகன் பகாவத்திடம் லிங்காயத் தலைவர்கள்

0

கர்நாடக மாநிலத்தின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 17% உள்ள லிங்காயத் இனத்தவர்கள் தங்கள் கொள்கையை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டுமென்று கடந்த செவ்வாய் கிழமை பெலாகவியில் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் தங்களது விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது சமீபத்தில் மோகன் பகாவத்தின் தனது ஹுப்பாலி பயணத்தின் போது லிங்காயத் மடாதிபதிகள் அவர்களின் சமுதாய தலைவர்களை லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்கும் முயற்ச்சியை கைவிட வற்புறுத்த வேண்டும் என்று கூறியிருந்த கருத்துக்கு பதிலாக கூறப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் பேசிய பெண் மடாதிபதியான மாதே மகாதேவி, தங்களிடம் பகாவத் இவ்வாறு கூறுவதற்கு பதிலாக மோடியிடம் தங்கள் கோரிக்கை குறித்து அவர் வலியுறத்தட்டும் என்று தெரிவித்துள்ளார். “மோடி மீதான அவரது செல்வாக்கை பயன்படுத்தி லிங்காயத் கொள்கையை தனி மதமாக மாற்றும் வேலைகளை அவர் துரிதப்படுத்தட்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், “நாங்கள் நவீன ஜனநாயகத்தின் கொள்கைகளின்படி வாழ்கின்றோம், மோகன் பகாவத் போன்று வேதகால கொள்கையின்படி அல்ல. இது போன்ற தலைவர்களின் அறிவுரைகளுக்கு நாங்கள் செவி சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறியுள்ளார். மற்றுமொரு மடாதிபதியான பாசவா ஜெயா ம்ருத்யுஞ்சை சுவாமி, லிங்காயத் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் கட்சிகளின் அடிமைகளைப் போல நடக்கக் கூடாது என்றும் 12 ஆம் நூற்றாண்டு ஞானியும் லிங்காயத் சமூகத்தை நிறுவியவருமான பசவேஸ்வராவை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

லிங்காயத் தலைவரும் எம்.எல்.ஏ வுமான பசவராஜ் ஹோராட்டி, தங்களது சமூக விவகாரகளை வெளி தலையீடு எதுவும் இல்லாமல் லிங்காயத் சமூகத்தினரே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு மடாதிபதியான சித்தலிங்க சுவாமி, பகாவத்தைப் போன்று வலதுசாரி தலைவர்கள் தங்களது இயக்கத்தை திசை திருப்பப் பார்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்து மதத்தின் கொள்கைகளும், லிங்காயத்தின் கொள்கைகளும் குறுக்கு நெடுக்காக உள்ளன என்றும் லிங்காயத் சமூகத்தில் பாலின, சாதி, வர்க்க வேற்பாடுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

“நாங்கள் எப்போதுமே இந்துமதத்தின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அதனால் நாங்கள் அதனை விட்டு வெளியேறுகின்றோம் என்ற பேச்சுக்கு இடமில்லை.நாங்கள் கடந்த 900 ஆண்டுகளாக தனி மதமாக இருந்து வந்துள்ளோம். எங்களை தனி மதத்தினராக அரசு அங்கீகரிப்பதற்கு அதிக காலம் பிடிக்காது என்று முன்னாள் IAS aaஅதிகாரி S.M.ஜம்தர் தெரிவித்துள்ளார். “இன்னும் லிங்காயத்கள் இந்து மதத்தின் ஒரு அங்கத்தினராக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் சூத்திரர்களாகவே கருதப்படுவார்கள் என்றும் அதனால் லிங்காயத் கொள்கையை தனி மதமாக அங்கீகரிக்கக் வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த லிங்காயத் சமூகத்தினர் கர்நாடகாவில் பாஜகவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தனி மத கோரிக்கையை எழுந்ததை அடுத்து இந்த கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரித்து அவர்களின் பல கூட்டங்களிலும் பங்கு பெற்று வருகிறது. லிங்காயத் அமைப்பினரின் இந்த கோரிக்கையை மத்திய அரசிற்கு தான் பரிந்துரைப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.