எங்கே செல்கிறது நமது தேசம்?

0

 

ஏ.எஸ்.இஸ்மாயில்

தேசிய செயற்குழு உறுப்பினர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

இன்றைய உலகில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புதிய வடிவில் பிரச்சனை உருவெடுத்துள்ளது. எனினும் விமர்சனங்களையும், தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இஸ்லாத்திற்கு உண்டு. முஸ்லிம்கள் தங்களது நிலையில் சரியாக செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி அடையலாம்.

ஃபிரான்ஸ் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என முடிவு செய்யாத நிலையில், முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி வரைந்த சித்திரம் தான் காரணம். ஆகவே, இத்தாக்குதலை முஸ்லிம் தீவிரவாதிகள்தான் செய்திருப்பார்கள் என்ற மாயை தோற்றுவித்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அவப்பெயர் ஈட்டுத்தர முயற்சிக்கிறார்கள். அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட நேரத்தில் இருந்த அதே மனநிலை தற்பொழுதும் இருக்கிறது.

யூதப் பின்னணியில் செயல்படும் இப்பத்திரிகை கருத்து சுதந்திரம் என்ற வாதத்துடன் விஷமக்கருத்துக்களை தூவி வருகிறது. இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நடக்கும் அனைத்து விதமான தாக்குதல்களின் பின்னணியிலும் இஸ்ரேல், அமெரிக்காவின் கரங்கள் இருப்பதை பார்க்க முடியும். இந்தியாவில் தற்பொழுது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு அமெரிக்கா வளர்த்திய கள்ளக்குழந்தை.

ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் மோடி என்ற வளர்ப்பு பிள்ளைதான். ஆர்.எஸ்.எஸ்.ன் இந்துத்துவ கோட்பாட்டிற்கும் இஸ்ரேலின் சியோனிச கோட்பாட்டிற்கம் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் இரண்டு கோட்பாட்டாளர்களின் பொது எதிரி முஸ்லிம்கள்.

1999 முதல் 2004 வரையிலான பா.ஜ.க. ஆட்சி காலத்தில்தான் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்தார். அதேப்போன்று, அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஷ்வந்த் சிங் 2000ம் ஆண்டில் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் செய்தார். பலமுறை ஆர்.எஸ்.எஸ்.ன் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பல்வேறு கலாச்சார நிகழ்வுகளிலும் ரகசிய ஆலோசனைகளிலும் கலந்து கொண்டனர்.

1967ம் ஆண்டு ஆர்கனைசர் பத்திரிகையில் சித்திரகுப்தர் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய கட்டுரையில் ‘இஸ்ரேலும் இந்துக்களும் இணைந்து ஏன் அரபுக்களையும் அவர்களின் கூட்டாளியான பாகிஸ்தானையும் எதிர்கொள்ளக் கூடாது?’ என்று எழுதியிருந்தார். அந்த அளவிற்கு யூத மேலாதிக்கத்திற்காகப் போராடும் சியோனிசவாதிகளுக்கும் பார்ப்பன மேலாதிக்கத்திற்காகப் போராடும் இந்துத்துவவாதிகளுக்கும் மிக ஆழமான கருத்தொற்றுமை இருந்து வருகிறது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இஸ்ரேலிய ஆதரவு இதழான டேப்லட் மேகசின் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் மொஸாத் உளவுப்பிரிவின் ஒரு அமைப்பான இன்ஸ்டியூட் பார் நேஷனல் செக்யூரிட்டி ஸ்டடிஸ் என்ற பிரிவு நடத்திய பாதுகாப்பு துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கான முகாமில் மோடியின் வெற்றி குறித்து மிகவும் அங்கலாய்த்து பேசப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மோடிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் உள்ள ஒற்றுமை குறித்தும் சிலாகித்து பேசப்பட்டுள்ளது. modi and netanyahu

இஸ்ரேலியர்களுக்கு மிகவும் சாதகமான அரசு இந்தியாவில் அமைந்துள்ளதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். “மோடியின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய போது அவர் தனது காலக்கட்டத்திற்குள் இஸ்ரேலுடனான இந்தியாவின் நட்பையும் பொருளாதார உறவுகளையும் மேலும் ஆழப்படுத்த விரும்புவதாக கூறினார்” என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறியதாகவும் அந்த பத்திரிகை எழுதியுள்ளது.

இந்தியாவிலும் இந்துத்துவவாதிகளின் மூலம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்குமான எதிர்ப்பு சர்வதேச வலையில் பின்னப்பட்டது. தனியார், பன்னாட்டு முதலாளி, ஊடகம் ஆகியவற்றின்  ஆதரவு, கடந்த கால காங்கிரஸ் அரசின் ஆட்சி போன்றவை இந்துத்துவம் அரியணை ஏறுவதற்கு சாதகமான சூழ்நிலையை வகுத்துக் கொடுத்தன.

இந்நிலையில் இந்தியா போன்ற மிகப்பெரிய  மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டிலே யாரும் அறியாத நிலையில் இறையாண்மையை தகர்க்கும் விதமாக சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் செயல்பாடுகளும், அறிக்கைகளும், செயல்திட்டங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மோடி அரசு சர்வாதிகார போக்கை மேற்கொள்கிறது. 225 நாட்களில் 10 சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. சில சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை பதிய வைக்கும் பொழுது எமர்ஜென்சி வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது என்பதாகவே சொல்கிறார்கள். இந்திரா காந்தி அம்மையாரின் 15 ஆண்டுகால ஆட்சியில், அதாவது 5825 நாட்களில் 208 சட்டத்திருத்தங்களை செய்தார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் கீழ் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து 300 நாட்களில் 600 மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அதில் 49 பேர் மரணமடைந்துள்ளனர். இவை திட்டமிடப்பட்டு சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்டவையாகும். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன. மீதம் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவை.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 72 வயது கன்னியாஸ்திரி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் திட்டமிட்ட சிறுபான்மையினர் மீதான வன்முறையின் ஒரு பகுதியாகும். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான கலவரங்கள் முஸஃபர் நகர் முதல் கன்னியாகுமரி வரை தொடர்கின்றன. கலவரத்திற்கு காரணங்கள் பல இருந்தாலும் அரசியல் பின்னணியும் இல்லாமல் இல்லை.

பா.ஜ.க. ஆட்சி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டது என்பது தினமும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் கொலைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் நடக்கின்றன?

* பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான உக்திகள்!

* கட்டாய மதமாற்ற நாடகங்கள்  இதன்வழி கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சி!

* சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை தடுக்கும் முயற்சி!

* இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு!

* இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என்ற கருத்து!

* கோட்சேவை தேச பக்தனாக்கும் முயற்சி!  நாடு முழுவதும் கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சி!

* கல்வி மற்றும் வரலாற்றை காவிமயப்படுத்துதல்!

* கலவரங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தும் மதவெறி ஆவேச பேச்சுகள்! என தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

* மஹாராஷ்டிராவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆளும் பா.ஜ.க. அரசு! இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் முக்கியத்துவம் கொடுக்காத விஷயத்திற்காக ஒரு சட்டத்தை பா.ஜ.க. அரசு நிறைவேற்றி இருக்கிறது. இச்சட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மதவாத பா.ஜ.க. அரசு தீர்மானிக்கிறது. இது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முன்மாதிரி சட்டமாகும்.

* குடிமக்களின் அந்தரங்கம் வரை நீளும் கண்காணிப்பு கட்டமைப்புகள் அபாயகரமான வகையில் அதிகரித்து வருகின்றன. பல்வேறு அரசு மானியங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது கண்காணிப்புகளை அதிகப்படுத்துவதற்கே. (தற்போது இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது).

* மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பலரின் கருத்துகள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.ன் பினாமி ஆட்சியே நடைபெறுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

* சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு சுதந்திர இறையாண்மை மிக்க தேசம் என்ற கொள்கையிலிருந்து ஒரு அமெரிக்க தோழமை தேசமாகவும், நலன் அரசு என்ற நிலையில் இருந்து மாறி முதலாளித்துவ தேசமாகவும், வெகுஜன ஜனநாயக குடியரசு என்ற நிலையில் இருந்து குடிமக்களை கடுமையான கண்காணிப்புகளுக்கு உட்படுத்தும் இராணுவ தேசமாகவும் நமது நாடு மாறி வருகிறது.

சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் வேகமான செயல்பாடுகள் இந்திய மக்களுக்கு விடுக்கப்படும் பகிரங்க அறைகூவலாக தெரிகிறது. எனினும் அரசியல் ரீதியாக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க.வை எதிர்கொள்ள திட்டம் வடிவமைக்கப்பட்டு  ஒன்றிணைந்து போராட வேண்டும். ஜனநாயகமும், இறையாண்மையும் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு திட்டமிடலும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும் அவசியப்படுகிறது.

கைகோர்ப்போம், தேசத்தை பாதுகாப்போம்.

(ஏப்ரல் 2015 புதிய விடியல் இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.