எனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்

0

எனது மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் பரசுராம் வாக்மோர்

கெளரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழு அவரின் கொலைக்கு காரணமான பரசுராம் வாக்மோர் என்பவனை கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்தது.

தன்னை கைது செய்த அதிகாரிகளிடத்தில் தான் கெளரி லங்கேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பரசுராம், தான் கொலை செய்வது யார் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளான். கெளரி லங்கேஷ் கொலை குறித்து பரசுராம் கூறுகையில், “எனக்கு 2017 மே மாதம் எனது மதத்தை பாதுகாக்க ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அப்போது நான் யாரை கொலை செய்யப்போகிறேன் என்று எனக்கு தெரியாது. தற்போது நான் அந்தப் பெண்ணை கொலை செய்திருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்.” என்று தெரிவித்துள்ளான்.

மேலும் தான் கடந்த செப்டெம்பர் 3 ஆம் தேதி பெங்களூருவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் முன்னதாக பேலகவியில் வைத்து ஏர்கன் துப்பாக்கி பயிற்சி தனக்கு அளிக்கப்பட்டதாகவும் பரசுராம் தெரிவித்துள்ளான்.

முதலில் நான் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அதன் பின் இரண்டு மணிநேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நான் கொலை செய்ய வேண்டிய நபரின் வீட்டை அடையாளம் காட்ட என்னை அழைத்துச் சென்றார். மறுநாள் அந்த நபர் என்னை பெங்களூருவில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மற்றொரு நபர் என்னை RR நகர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பின்னர் என்னை மீண்டும் அறையில் விட்டார். பின்னர் மாலையில் மீண்டும் கெளரி லங்கேஷின் வீட்டிற்கு நான் அதே நபரால் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்த நாளில் நான் எனது வேலையை முடிக்க வேண்டும் என்று எனக்கு கூறப்பட்டது. ஆனால் அப்போது கெளரி லங்கேஷ் அவரது பணி முடிந்து ஏற்கனவை அவரது வீட்டினுள் இருந்தார்.” என்று பரசுராம் தெரிவித்துள்ளான்.

பின்னர் செப்டெம்பர் 5ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் தனக்கு துப்பாகக்கி கொடுக்கப்பட்டது என்றும் இரு சக்கர வாகனத்தில் மற்றொரு நபருடன் கெளரி லங்கேஷின் வீட்டிற்கு சரியான நேரத்தில் சென்றதாக அவர் தெரிவித்துள்ளான். “கெளரி அவரது வாகனத்தை வீட்டு வாசலின் முன் நிறுத்திவிட்டு உள்ளிருந்து அதன் கதவை திறந்தார். அப்போது அவர் அருகில் நான் சென்று லேசாக இருமினேன். என்னை நோக்கி அவர் திரும்பியதும் அவரை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டேன். பின்னர் அங்கிருந்து நாங்கள் எங்கள் அறைக்கு சென்று அன்றிரவே நகரத்தை விட்டும் வெளியேறிவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளான்.

சிறப்பு புலனாய்வு குழுவின் கூற்றுப்படி பரசுராமுடன் குறைந்தபட்சம் மேலும் மூன்று பேராவது இருந்திருக்கக் கூடும் என்றும் அதில் ஒருவன் பரசுராமை பெங்களூரு அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் இரண்டாம் நபர் பரசுராமை மூன்று நாள் மாலை கெளரி லங்கேஷின் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் என்றும் மூன்றாம் நபர் செப்டெம்பர் 4 ஆம் தேதி கெளரி லங்கேஷின் வீட்டிற்கு பரசுராமை அழைத்துச் சென்றவன் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணையின் போது அந்த மூன்று நபர்கள் யார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர்கள் யார் என்று கேள்வி எழுப்புவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளான். ஆனால் கொலை நடந்த அன்று பரசுராமை சம்பவ இடதிற்கு அழைத்துச் சென்றவன் ஆமோல் காலே என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கருத்தை அதிகாரிகள் ஏர்க்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது. புனேவை சேர்ந்த இவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Comments are closed.