என்கெளண்டரில் கொலை செய்யப்பட்டவரின் சகாக்கள் விடுதலை

0

தரீக் கல்பா இ இஸ்லாம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ரியாஸ் கான், முஹம்மத் அப்துல் சயீத் மற்றும் வினோத் குமார் சாஹு ஆகியோர். 2009 இல் வீட்டு காவலாளி ஒருவரை கொலை செய்த வழக்கில் இவர்கள் நிரபராதிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலசாமி என்ற வீட்டுக் காவலாளியை கொலை செய்ததாகவும் மற்றொரு காவலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறி இவர்கள் மூவரையும் தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த மூவரின் சட்ட ஆலோசகரான முஹம்மத் முஸஃபருல்லா கான் இது குறித்து கூறுகையில், இவர்கள் மூன்று பேர் மீதுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார் என்றும் மேலும் வாதிகள் கூறும் குற்றச்சாட்டுகள் எதையும் அவர்களால் நிரூபிக்க இயலவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இம்மூவர் மீது  இந்திய குற்றப்பிரிவு 302, 307, ஆகிய பிரிவுகளிலும் UAPA சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை அடுத்து நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்காக பழிவாங்கும் எண்ணத்தோடு இத்தாக்குதலை இவர்கள்நடத்தினர் என்று Counter Intelligence Cell (CIC) அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இவர்கள் 7.65mm துப்பாக்கி கொண்டு காவலர்களை சுட்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். இவர்கள் மீது முதலில் ஃபலக்னுமா காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது, பின்னர் இது தீவிரவாத தடுப்பு பிரிவான ஆக்டோபஸ் இடம் மாற்றப்பட்டு அவர்களிடம் இருந்து Counter Intelligence Cell (CIC) க்கு மாற்றப்பட்டது. CIC, தரீக் கல்பா இ இஸ்லாம் நிறுவனர் விகாருதின் அஹமத் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று கூறி மொத்தம் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

2015 ஆம் ஆண்டு விகாருதின் மற்றும் இன்னும் நான்கு பேரை தெலுங்கானா காவல்துறை, வாரங்கல் சிறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வழியில் அவர்கள் காவலர்களை தாக்கி தப்பிக்க முனைந்தார்கள் என்று கூறி சுட்டுக் கொன்றது.  இவர்கள் கொலை செய்யப்பட்டாலும் ரியாஸ் கான், சயீத், வினோத் ஆகியோர் மீதான இந்த வழக்கு தொடர்ந்தது. இதில் தற்பொழுது இவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

 

Comments are closed.