என்கௌண்டரில் புனிதமும் இல்லை நீதியும் இல்லை

0

என்கௌண்டரில் புனிதமும் இல்லை நீதியும் இல்லை

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான இளம் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இதனை முன்வைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. நவம்பர் 29 அன்று இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று நான்கு லாரி ஓட்டுனர்களை காவல்துறை கைது செய்தது.
டிசம்பர் 6 அன்று காலையில் இந்த நால்வரும் என்கௌண்டரில் கொல்லப்பட்ட செய்தி காவல்துறை தனது வழமையான வழிமுறையை பின்பற்றியதை வெளிப்படுத்தியது. அன்றைய தினம் நள்ளிரவிற்கு சற்று பின்னர், நால்வரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது அவர்களில் இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிகளை பறிக்க முயற்சி செய்ததாகவும் காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள சுட்டதில் நால்வரும் இறந்ததாகவும் எப்போதும் சொல்லும் கதையை தெலுங்கானா காவல்துறை இப்போதும் கூறியது. சம்பவ இடத்திற்கு நால்வரையும் காவல்துறை அழைத்துச் சென்ற நேரமும் பத்து நபர்களை கொண்ட காவல்துறையினரின் அணியை நான்கு பேர் தாக்க வந்ததாக காவல்துறை கூறியதும் பல சந்தேகங்களை எழுப்பின. இந்த என்கௌண்டர் நிகழ்வில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் யாருக்கும் காயம் ஏற்பட்ட தகவலும் இல்லை. இதில் சம்பந்தப்பட்ட சைபராபாத் கமிஷ்னர் வி.சி.சஜ்ஜானர் பெயரை தவிர வேறு யாரின் பெயரும் வெளியிடப்படவும் இல்லை.
காவல்துறையினரின் கூற்றில் பல ஓட்டைகளும் சந்தேகங்களும் இருந்த போதும் இந்த என்கௌண்டரை பொது மக்கள் வரவேற்ற விதம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. சம்பவ இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்ற பொதுமக்கள் ‘போலீஸ் ஜிந்தாபாத்’ என்று கோஷங்களை எழுப்பியதும் வெடிகளை வெடித்து ஆரவாரம் செய்ததும் காவல்துறையினரை தோளில் சுமந்து சென்றதும் ரோஜா மலர்களை வீசி வரவேற்றதும் அறியாமையின் உச்சகட்டம் என்றுதான் கூற வேண்டும். இளம் பெண்ணின் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை பொதுமக்களிடம் ஏற்படுத்திய கோபத்தை யாரும் குறைகாண முடியாது. ஆனால் அதற்காக என்கௌண்டரை புகழ்வதும் நீதி நிலைநாட்டப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் இடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுமக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சி தலைவர்களும் இந்த என்கௌண்டரை வரவேற்றனர். காவல்துறையின் இச்செயலை வானளாவ புகழும் இவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் முதலில் வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் சென்ற போது அவர்களுக்கு எவ்வித உதவியும் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நீதியை நிலைநாட்டுவதற்கு உடனடி தண்டனைகள்தான் தீர்வு என்ற பொதுவான சிந்தனை பொது மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளதை இது காட்டுகிறது. ஆனால் பொதுமக்களின் இந்த கோபமும் கூட பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே இருக்கிறது. செலக்டிவ் அம்னீஷியா (ஷிமீறீமீநீtவீஸ்மீ கினீஸீமீsவீணீ) போல் இது ஒருவகையில் செலக்டிவ் ஆக்ரோஷம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும்தான் உண்மையான குற்றவாளிகள் என்பதை காவல்துறை நிரூபிக்கவே இல்லை. இந்த வழக்கில் இவர்களின் பங்களிப்பை நிரூபிக்கத் தவறிய காவல்துறை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வேறு மூன்று வழக்குகளையும் இவர்கள் மீது சுமத்தி அவற்றையும் இழுத்து மூடியுள்ளது. இவர்கள்தான் உண்மை குற்றவாளிகளா அல்லது உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற இவர்களின் கதை உடனடியாக முடிக்கப்பட்டதா என்ற கேள்வியை என்கௌண்டரை வரவேற்றவர்கள் யாரும் எழுப்பவில்லை.
இந்த சம்பவம் கொடூரமானது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தியாவில் இது ஒற்றை நிகழ்வல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை இந்தியாவில் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் (2017) தெரிவிக்கிறது. இந்த அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் என்கௌண்டர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நடுத்தர வர்க்கம் வைத்ததா? உத்தர பிரதேசத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சென்கார் மற்றும் சுவாமி சின்மயானந்தா ஆகியோர் என்கௌண்டர் செய்யப்பட வேண்டும் என்று யாராவது கேட்டார்களா? பொள்ளாச்சி கொடூரங்களை இவர்கள் மறந்துவிட்டார்களா? கஷ்மீரில் எட்டு வயது சிறுமியை சீரழித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய கொடியை ஏந்தி போராட்டம் செய்தவர்கள் குறித்து இவர்கள் வாய் திறந்தார்களா? ஈஷா யோகா மையத்தில் இருந்து என் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்று ஜக்கிவாசுதேவிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்ற கோரிக்கை வைத்த பெற்றோரின் கூக்குரல்கள் இவர்களுக்கு கேட்கவில்லையா? ஹைதராபாத் சம்பவத்திற்கு முன்னர் அருகிலுள்ள ஆசிஃபாபாத் என்ற பகுதியில் நாடோடி சமூகத்தை சார்ந்த ஒரு பெண் மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அப்பெண்ணிற்காக யாரும் ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பொங்கவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாதியும் மதமும்தான் இவர்களின் ஆக்ரோஷத்தை தூண்டுகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
தெலுங்கானா சம்பவம் நிகழ்ந்த சில தினங்களுக்கு பிறகு, உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண், தனது வழக்கறிஞரை சந்திக்கச் செல்லும் போது குற்றத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். சில தினங்கள் போராட்டத்திற்கு பிறகு அப்பெண் மரணமடைந்தார். இதே உன்னாவ் நகரில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சென்கார் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பயணித்த கார் விபத்திற்கு உள்ளானதும் அதில் அப்பெண்ணின் உறவினர்கள் மரணமடைந்து அப்பெண் கடும் காயமடைந்த போதும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை என்கௌண்டர் செய்ய வேண்டும் என்று யாரும் கோரவில்லை.
எதிலும் லாபத்தை அடைய முயலும் சங்பரிவார்கள் இந்த பாலியல் வழக்கிலும் தங்களின் இலக்குகளை அடைய தீவிரமாக முயற்சித்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் நால்வரில் ஒருவர் முஸ்லிம். அவரின் பெயரையும் புகைப்படத்தையும் மட்டும் வெளியிட்டு உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் இவர்கள் மேற்கொண்டனர். சங்பரிவார் ஆதரவு இணையதளங்களும் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டன. குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இவர்கள் வசதியாக மறைத்தனர். கத்துவா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தியது போல் இதுவரை எந்த முஸ்லிமும் நடத்தவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
குற்றங்களுக்கு காவல்துறை உடனடி தண்டனைகளை வழங்க வேண்டும் என்றால் நீதித்துறையின் அவசியம் என்ன? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், ஆனால் அது உரிய விசாரணைக்கு பின்னரே நிகழ்த்தப்பட வேண்டும். குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்குவதற்கு இது ஒன்றும் இரண்டு மணிநேர திரைப்படம் அல்ல. எண்கௌண்டர்கள் உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கும் காவல்துறையினர் பட்டங்களையும் பதவிகளையும் பெறுவதற்கும் நிகழ்த்தப்படுகின்றன என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு என்கௌண்டர்களை நடத்தும் சில காவல்துறை அதிகாரிகள் இன்று அரசியல்வாதிகளை விட பணக்காரர்களாக இருப்பதையும் மறுக்க முடியாது. எனவே என்கௌண்டர்கள் நீதியை நிலைநாட்டுகின்றன, குற்றவாளிகளை தண்டிக்கின்றன என்ற பொய் மாயையில் இருந்து பொதுமக்கள் வெளிவர வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் ஏழைகளுமே என்கௌண்டர்களின் இலக்குகள் என்பதையும் இவர்கள் உணர வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குற்றவாளிகள் என்ற பொய் பிம்பமும் இதன் மூலம் நிறுவப்படுகிறது.
என்கௌண்டர்கள் குற்றங்களை குறைக்கும் என்ற தவறான நம்பிக்கையிலும் பொதுமக்கள் உள்ளனர். ஒவ்வொரு என்கௌண்டரை நடத்தும் போதும் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இத்தனை என்கௌண்டர்கள் நடந்த பின்னும் குற்றங்கள் ஏன் தொடர்கின்றன என்ற சாதாரண கேள்வியை யாரும் எழுப்பவும் இல்லை. குற்றவாளிகளை குறைப்பதற்கு பதிலாக ‘என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்ற புதிய ரக குற்றவாளிகளை என்கௌண்டர்கள் உருவாக்குகின்றன. பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அப்பாவிகளின் உயிர்களை எடுக்கும் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
என்கௌண்டர்களை நடத்துவதில் தெலுங்கானா காவல்துறை பெயர் பெற்றது. இந்த என்கௌண்டரை நடத்திய ஆணையர் வி.சி.சஜ்ஜானர் நடத்தும் மூன்றாவது என்கௌண்டர் இது. 2008ல் வாரன்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, இரண்டு இளம்பெண்கள் மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களை இவர் என்கௌண்டரில் கொலை செய்தார். இது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. 2016 ஆகஸ்ட் மாதம் நக்சல் எதிர்ப்பு பிரிவின் தலைவராக இவர் பணியாற்றிய போது மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த நயீம் என்பவரை என்கௌண்டரில் சுட்டுக் கொன்றார். உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையில் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் என்கௌண்டர்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதையும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (ஆதித்யநாத் ஆட்சியில் அளவில்லாத என்ªகௌண்டர்கள், புதிய விடியல், மார்ச் 16 – 31, 2018) கடந்த இரண்டு ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்ட 5,178 என்கௌண்டர்களில் 103 நபர்கள் கொல்லப்பட்டதாகவும் 1,859 பேர் காயமடைந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. என்கௌண்டர் அச்சத்தால் மாநிலத்தில் 17,745 பேர் தங்களின் ஜாமீனை அவர்களாகவே ரத்து செய்துள்ளனர் அல்லது வெளியில் உள்ளவர்கள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் சமீப மாதங்களில் கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாத்ரூம்களில் வழுக்கி விழும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலையா தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த போது 1997ல் மாநில முதல் அமைச்சர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘அதிகரித்து வரும் என்கௌண்டர்கள் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நமது சட்டங்களின் கீழ் மற்றொரு நபரின் உயிரை பறிக்கும் எந்த அதிகாரமும் நமது காவல்துறைக்கு வழங்கப்படவில்லை’’ என்று குறிப்பிட்டிருந்தார். 2010இல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஒரு குறிப்பில் உண்மையான அக்கறையுடன் தாங்கள் வழங்கிய பரிந்துரைகளை பல மாநிலங்கள் பின்பற்றவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட்டிருந்தது. என்கௌண்டர் கொலை வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இருந்த போதும் தண்டிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை மிக குறைவு என்பதுதான் வேதனையான உண்மை.
காவல்துறையின் இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை பொதுமக்கள் ஒருபோதும் அங்கீகரிக்கக் கூடாது. என்கௌண்டர்களை நியாயப்படுத்தும் பொதுமக்களின் செயல்பாடு காவல்துறைக்கு உத்வேகத்தை கொடுப்பதுடன் நாளை அவர்களின் இலக்காக நம்மையும் மாற்றும் என்பதை உணர வேண்டும்.
அப்படியென்றால் குற்றவாளிகளுக்கு தண்டனையே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புதிய புதிய சட்டங்கள் இத்தகைய தண்டனைகளுக்கான தீர்வாக அமையாது. இருக்கும் சட்டங்களை சரியாக முறையாக பயன்படுத்தினாலே குற்றங்களை தடுக்க முடியும். இத்தகைய பாலியல் குற்றங்களில் எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் விசாரணை முடிந்து தண்டனைகள் வழங்கப்பட்டதை முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியோ ருபைரோ நினைவூட்டுகிறார். அப்போது அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தவறாமல் வழக்குகளில் ஆஜராகியதையும் தேவையின்றி வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதில்லை என்பதையும் ஆனால் தற்போது எவ்வித காரணங்களும் இன்றி வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
2012ல் டெல்லியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து (நிர்பயா வழக்கு) சட்டங்களில் உள்ள இடைவெளிகளை ஆராய்வதற்காக நீதிபதி வர்மா கமிஷன் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை என்றாலும் சில முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தனது பரிந்துரைகளின் தொடக்கத்திலேயே அந்த கமிட்டி குறிப்பிட்டிருந்தது. பாலியல் பலாத்காரத்திற்கான விளக்கத்தை இன்னும் விரிவாக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச தண்டனையை பத்து வருடங்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரைத்தது. இருக்கும் சட்டங்களில் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதை உறுதி செய்வதுதான் பொது சமூகத்தின் கடமையாக இருக்க வேண்டுமே அல்லாமல் உடனடி தீர்வு என்ற பெயரில் சிலரின் வாழ்க்கையை முடிப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது, அது மேற்கொண்டு பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும்.

Comments are closed.