என்கௌண்டர்கள்: பொதுப்புத்தியில் மாற்றம் வருமா?

0

 

– ரியாஸ்
ஆந்திரா மற்றும் தெலங்கானா காவல்துறையினரிடையே என்கௌண்டர் நடத்துவதில் போட்டி ஏதும் நடக்கிறதா என்ற நினைப்பை சமீபத்திய நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.தெலங்கானாவில் மூன்று நாட்களில் ஏழு நபர்கள் என்கௌண்டரில் கொல்லப்பட்டார்கள் என்றால் ஆந்திராவில் ஒரே நாளில் இருபரு நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏப்ரல் 5ல் ஜாஹிர் பத்ரான் மற்றும் அய்யூப் அஸ்லம் என்ற இரண்டு நபர்களை தெலங்கானா காவல்துறை சுட்டுக் கொன்றது. அக்டோபர் 2013ல் மத்திய பிரதேசத்தின் கான்ட்வா சிறைச்சாலையில் இருந்து சிமி இயக்கத்தை சேர்ந்த ஆறு நபர்கள் தப்பியோடியதாக மத்திய பிரதேச காவல்துறை தெரிவித்தது.இதில் அபூ பைசல் என்பவர் மட்டும் பின்னர் கைது செய்யப்பட்டார்.இந்த தப்பியோடிய சம்பவம் குறித்து அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
எஞ்சிய ஐந்து நபர்கள் குழுவை சேர்ந்தவர்கள்தான் இந்த இருவரும் என்று தெலங்கானா காவல்துறை அறிவித்தது. இவர்கள் இருவரையும் பிடிக்க முற்பட்டபோது அவர்கள் காவல்துறையை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்தது. காயமுற்ற மற்றொரு காவலர் பின்னர் இறந்தார்.
இந்த என்கௌண்டர் குறித்த சந்தேகங்கள் நிவர்த்தி ஆவதற்கு முன்னரே ஏப்ரல் 7 அன்று மற்றொரு என்கௌண்டர் நடத்தப்பட்டது. சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஐந்து கைதிகள் தப்பியோட முயற்சித்ததாகவும் அதனால் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் தெலங்கான காவல்துறை அறிவித்தது. இவர்கள் சிமி இயக்கத்தினர் என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் இவர்கள் தெஹ்ரீகே கல்பா இ இஸ்லாமி என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
கொல்லப்பட்டவர்களில் முஹம்மது விகாருதீன், முஹம்மது ஹனீஃப், அம்ஜத் அலீ, ரியாஸ் கான் ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள்.இஸார் கான் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.
வழக்கம்போல் காவல்துறையின் கூற்றில் சந்தேகங்கள். கொலை செய்யப்பட்ட விகாருதீன் இருக்கையில் கைவிலங்குடன் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவர் மீது ஒரு ஏ.கே.47 துப்பாக்கி அழகாக வைக்கப்பட்டிருந்தது.மற்றவர்களும் மற்ற இருக்கைகளில் இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருந்தனர்.இருக்கையில் கைவிலங்குடன் கட்டப்பட்டிருந்தவர் எப்படி காவல்துறையை நோக்கி சுட்டார்?இந்த சம்பவத்தில் காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் அவர்களின் புகைப்படங்கள் எதுவும் காட்டப்படவில்லை.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னரே அடுத்த அதிர்ச்சி ஆந்திராவில் இருந்து வந்தது.செம்மரம் கடத்திய ஏறத்தாழ 200 நபர்களை பிடிக்க சென்றபோது அவர்கள் காவல்துறையினரை கற்களாலும் கோடாரிகளாலும் தாக்கியதால் காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள சுட்டனராம்.விளைவு..இருபது நபர்கள் என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டனர். இதிலும் காயம் அடைந்த எந்த காவலரும் காட்டப்படவில்லை.
என்கௌண்டர்கள் குறித்து உச்சநீதி மன்றம் பல விதிமுறைகளை விதித்துள்ள போதும் அவை தொடர்கதையாகத்தான் உள்ளன. தீவிரவாதிகளை பிடிக்க சென்ற போது அவர்கள் தாக்கியதால் திருப்பி சுட்டோம், நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது தப்பியோட முயற்சித்ததால் சுட்டுக் கொன்றோம், கொள்ளைகாரர்கள் குறித்த தகவல்கள் கிடைத்து பிடிக்க சென்ற போது அவர்கள் தாக்கியதால் சுட்டோம்…என்று திரைக்கதை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. காட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும்.
இவை குறித்து பத்திரிகையாளர்களும் சமூக ஆர்வலர்களும் சந்தேகங்களை எழுப்பினாலும் காவல்துறை அதை கண்டுகொள்வதாக இல்லை. எத்தகைய குற்றவாளியாக இருந்தாலும் அவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் காவல்துறை மீதுதான் சந்தேகம் வலுக்கும். தெலங்கானா என்கௌண்டரில் கொல்லப்பட்டவர்கள் மீதான வழக்கு இறுதி கட்டத்தை எட்டி அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் இருந்ததாகவும் காவல்துறை தங்களின் இயலாமையை மறைக்கவே அவர்களை கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
என்கௌண்டர் வழக்குளில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டாலும் இந்த அவலம் முடிவுறுவதாக இல்லை. இத்தகைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருவதும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதுமே இந்த நிலைக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது.
இது ஒரு புறம் என்றால், என்கௌண்டர் குறித்த பொதுமக்களின் பார்வையும் அதிகரித்து வரும் என்கௌண்டர்களுக்கு காரணம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். என்கௌண்டர் குறித்த நேர்மறை பார்வையை கொடுப்பதில் திரைப்படங்கள் முன்னணியில் உள்ளன. ‘இவனுக்கு மூணு நேரம் சாப்பாடு போட்டு பாதுகாப்பு கொடுக்கணும். அதுக்குள்ள சட்டத்தில உள்ள ஓட்டைய பயன்படுத்தி வெளியே வந்திடுவான். இப்ப ஒரு தோட்டால வேலை முடிஞ்சுட்ல’ என்ற வசனத்திற்கு விசில் பரப்பதும் என்கௌண்டர் காட்சிகளுக்கு கரவோசம் எழுவதும் ஆச்சர்யமாக உள்ளன.
இதே போக்குதான் நிகழ்விலும் இருக்கிறது. என்கௌண்டர் நடைபெற்றால் அது கொலை செய்யப்பட்டவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான் என்ற சிந்தனைதான் பொதுமக்களிடம் உள்ளது. திரைப்படங்களில் எந்த வசனங்கள் பேசப்படுகின்றனவோ அதையே இவர்கள் பேசி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகின்றனர். கொலை செய்யப்பட்டவன் குற்றவாளியா நிரபராதியா என்பது குறித்தெல்லாம் இவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. கொலை செய்யப்பட்டவன் குற்றம் சாட்டப்பட்டவன்தான் அவன் நிரூபிக்கப்பட்ட குற்றவாளி இல்லை என்பதையும் இவர்கள் நினைப்பதில்லை.
அப்படியே நிரூபிக்கப்பட்ட குற்றவாளி என்றாலும் அவனை கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும். அதனை கையில் எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.
மக்களின் இந்த பொதுப்புத்தி மாறாத வரை என்கௌண்டர் மரணங்கள் தொடரத்தான் செய்யும்.

Comments are closed.