என்கௌண்டர் கொலைகள்: தடுத்து நிறுத்துவது யார்?

0

 

 – ரியாஸ் 

அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள முக்கிய உரிமைகளுள் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. எந்த மனிதனின் உயிரையும் அநியாயமாக எடுப்பதை எந்த மதமும் ஆதரிப்பதில்லை. ஏன், மதங்களே வேண்டாம் என்பவர்கள் கூட இந்த கருத்தை எதிர்ப்பதில்லை. சுருக்கமாக சொல்வதென்றால், மனிதனாக பிறந்தவன் அடுத்தவனின் உயிரை மதிக்க வேண்டும். ஆனால், நமது நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் என்கௌண்டர் கொலைகள் மேலே நாம் கூறிய அனைத்தையும் தவிடு பொடியாக்கி வருகின்றன.

எவ்வளவு பெரிய குற்றத்தை செய்தவனாக இருந்தாலும் அவனை சட்டத்தின் முன் நிறுத்தி அதன்மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்காகத்தான் நாட்டில் சட்டங்கள் உள்ளன. ஆனால், இன்று குற்றம் நிரூபிக்கப்படாதவர்கள், நிரபராதிகள், குற்றத்துடன் சிறிதும் தொடர்பில்லாத அப்பாவிகள் என அனைவரும் என்கௌண்டர் எனப்படும் அரக்கனுக்கு பலியாக்கப்படுகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற மூன்று என்கௌண்டர்கள் அவை குறித்தான விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளன. தெலுங்கானாவில் இரண்டு ஆந்திராவில் ஒன்று என்று மூன்று நாட்கள் இடைவெளியில் நடைபெற்ற இந்த என்கௌண்டர்களில் 27 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரே நாளில் 25 நபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மக்களை மேலும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அடுத்த என்கௌண்டர் குறி எனது உறவினராக இருக்குமோ அல்லது நானாகவே இருப்பேனா என்ற எண்ணம்தான் இன்று மக்களிடம் உள்ளது.

தெலுங்கானாவில் ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற என்கௌண்டரில் முஹம்மது இஜாசுதீன் மற்றும் முகம்மது அஸ்லம் ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காவல்துறையினர் இவர்களை பிடிக்க முற்பட்டபோது இரண்டு காவலர்களை சுட்டுக் கொன்றனர். என்கௌண்டர் நடைபெற்ற அன்று மேலும் இரு காவலர்களை சுட்டுக் கொன்றனர் என்ற செய்தி வெளிவந்தது.

மத்திய பிரதேசத்தின் கண்ட்வா சிறைச்சாலையில் இருந்து ஐந்து சிமி இயக்கத்தினர் 2013ல் தப்பி வந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்போதே பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அந்த ஐவர் குழுவை சேர்ந்தவர்கள்தான் இந்த இருவரும் என்று காவல்துறை கூறியது. அத்துடன் நாட்டில் நடைபெற்ற சில குண்டுவெடிப்புகளும் இவர்களுடன் இணைக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்புகூட இவர்களுடன் இணைக்கப்பட்டது.

ஆனால், இவை குறித்த தெளிவான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவர்களுக்கும் சிமி இயக்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்று மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ஹ ரெட்டி தெரிவித்தார். இவர்கள் தீவிரவாதிகளா இல்லை கொள்ளையர்களா?

இந்த என்கௌண்டர் குறித்த உண்மை வெளியே வருவதற்கு முன், ஏப்ரல் 7 அன்று தெலுங்கானா காவல்துறை மற்றொரு என்கௌண்டரை நடத்தியது. வாரங்கல் சிறைச்சாலையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஐந்து விசாரணை கைதிகள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் காவல்துறை அவர்களை என்கௌண்டர் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஒரு என்கௌண்டர் நாடகத்தில் காவல்துறை நடத்தும் அனைத்து காட்சி அமைப்புகளும் இந்த சம்பவத்தில் பொருத்தமாக இருந்தன.

ஐந்து நபர்களுக்கு ஆயுதம் தரித்த காவலர்கள் பதினேழு பேர் பாதுகாப்பு, அப்படி இருந்தும் என்கௌண்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேள்விகள் எழு ஆரம்பித்தன மக்கள் மன்றத்தில். அன்று மாலை வெளிவந்த புகைப்படங்கள் சந்தேகத்தை இன்னும் அதிகரித்தன.

விகாருதீன் என்பவர்தான் முதலில் ஆயுதத்தை பறித்ததாக காவல்துறை கூறியது. ஆனால், அவர் வாகனத்தின் இருக்கையுடன் கைவிலங்கு பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்துள்ளார். மற்றவர்களும் இருக்கைகளில் இருந்த நிலையிலேயே சுடப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஆயுதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

காவல்துறையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சில நிமிடங்களில் ஐந்து நபர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டன. இவர்கள் சிமி இயக்கத்தினர் என்றும் மூன்று தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் முதலில் கூறப்பட்டது.

இவர்கள் தெஹ்ரீக்இகல்பாஇஇஸ்லாம் இயக்கத்தினர் என்றும் காவல்துறையினரை தாக்குவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய வேலை என்றும் காவல்துறையினர் கூற்றுக்கு வலுசேர்க்கும் செய்திகள் வெளியிடப்பட்டன. அப்படி எத்தனை காவலர்களை தாக்கினார்கள். அந்த வழக்குகளின் நிலை என்ன என்ற கேள்விகளை யாரும் எழுப்ப முன்வரவில்லை.

இவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தங்களின் பொய்களை மறைப்பதற்கே காவல்துறை இந்த என்கௌண்டரை நடத்தியதாகவும் இந்த வழக்குகளை குறித்து அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த என்கௌண்டரின் செய்திகள் அப்போதுதான் வெளியே வர ஆரம்பித்தன. அதற்குள்ளாக ஆந்திராவில் மற்றொரு என்கௌண்டர் நடைபெற்ற செய்தி வந்து இன்னும் அதிர்ச்சியை கூட்டியது. இருபது நபர்கள் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த செய்தி ஐந்து நபர்கள் கொல்லப்பட்ட தெலுங்கானா என்கௌண்டரை மறைத்தது. தெலுங்கானா என்கௌண்டர் குறித்து சில முன்னணி ஊடகங்கள் கூட செய்தி வெளியிடாதது ஆச்சர்யம்தான்.

ஆந்திரா என்கௌண்டர். அதே காட்சி அமைப்புகள்.. கதாபாத்திரங்கள் வேறு.. திரைக்கதையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் காவல்துறை திருப்பி சுட்டதாகவும் கூறினர். விளைவு.. இருபது தொழிலாளர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டன.

 ஆனால், இங்கும் எந்த காவலருக்கும் காயம் ஏற்படவில்லை. திருப்பதிக்கு அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெற்ற இந்த என்கௌண்டரில் திருவண்ணாமலை மாவடத்தை சேர்ந்த 12 நபர்களும் தர்மபுரியை சேர்ந்த ஏழு நபர்களும் சேலத்தை சேர்ந்த ஒருவரும் கொலை செய்யப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக இருபது நபர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? செம்மரக்கட்டைகளை பாதுகாப்பதற்காக மனிதர்களை சுட்டுக் கொல்வோம் என்றுதான் நாங்கள் ஏற்கெனவே கூறினோமே என்று மிதப்புடன் கூறின ஆந்திர அரசும் காவல்துறையும்.

இந்த அப்பாவி கூலித் தொழிலாளிகள் செம்மரங்களை வெட்டும்போது சுடப்படவில்லை. பேருந்தில் சென்றவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்ற காவல்துறை அவர்களை எங்கோ வைத்து சுட்டு சம்பவ இடத்தில் போட்டதை சாட்சிகளும் சம்பவங்களும் உறுதி செய்தன.

பேருந்தில் தன்னுடன் பயணம் செய்தவர்களை காவல்துறை அழைத்து சென்றதை சாட்சிகள் தற்போது பதிவு செய்துள்ளனர். இவர்களின் உடல்களில் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் காவல்துறை மீதான சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் செம்மரங்கள் ஏதும் இல்லையே என்ற கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை.

தொடரும் இத்தகைய என்கௌண்டர்களை தடுத்து நிறுத்துவது யார்? என்கௌண்டர் குறித்த பார்வையும் அதற்கான தண்டனையும் மாறாத வரை இதுபோன்ற அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் என்கௌண்டர்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. 20022003 காலக்கட்டத்தில் மொத்தம் 83 என்கௌண்டர் கொலைகள் நடந்துள்ளன. அதுவே 20112012 காலக்கட்டத்தில் 197ஆக உயர்ந்தது. 1993 முதல் மொத்தம் 2,560 என்கௌண்டர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறும் தேசிய மனித உரிமை ஆணையம் அவற்றில் 1,224 என்கௌண்டர்களை போலி என்கௌண்டர்கள் என்று கூறியுள்ளது.

நடத்தப்படும் அனைத்து என்கௌண்டர்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்பதை நாம் இங்கு மனதில் கொள்ள வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் என்கௌண்டர்கள் குறித்த எவ்வித புள்ளி விபரங்களும் கிடையாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

என்கௌண்டர் வழக்குகள் போலியானவை என்று நிரூபிக்கப்பட்டாலும் அதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தபிறகு, குஜராத் மாநிலத்தின் அனைத்து என்கௌண்டர் வழக்குகளும் நீர்த்துப் போயின.

இஸ்ரத் ஜஹான், சொஹ்ராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி என என்கௌண்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு ஜாமீனில் வருபவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் அழகு பார்க்கின்றன. இதனை காணும் காவல்துறையினர் என்கௌண்டர்களை நடத்தினால் தாங்களும் இவ்வாறு கௌரவிக்கப்படுவோம் என்ற சிந்தனையுடன் எவ்வித தயக்கமும் இன்றி என்கௌண்டரை நடத்துகின்றனர். என்கௌண்டர் நடத்தியவர்களுக்கு பதவி உயர்வுகளும் பரிசுகளும் வழங்கப்படுவது காவல்துறையினருக்கு உத்வேகத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல.

அதிகரித்து வரும் என்கௌண்டர்களை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், சென்ற ஆண்டு என்கௌண்டர் வழக்குகளில் சில வரையறைகளை வகுத்தது. ஆனால், அவை போதுமானவை அல்ல என்பதைதான் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. என்கௌண்டரில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். கட்டாயமாக்குவதுடன் நின்று விடாமல் அவற்றை முழுமையாக பின்பற்றவும் வேண்டும்.

வழக்கு விசாரணை முடிவும் வரை பதவி உயர்வுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். என்கௌண்டர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் பரிசுகளும் பதக்கங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

தெலுங்கானா என்கௌண்டரை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது. இதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் முஸ்லிம் இயக்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.

ஆந்திரா என்கௌண்டரில் அடையாளம் தெரியாத காவல்துறையினர் மீது அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவும் வெறும் கண்துடைப்புதான். அப்பாவிகளின் உயிர்கள் அநியாயமாக எடுக்கப்படுவதை மாநில அரசுகள் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் கட்டளைகள் பின்பற்றப்படாத நிலையில் நீதிமன்றமே அதில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அவ்வாறு செய்யாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால்தான் தலையிடுவோம் என்று கூறுவதும் ஏற்கக்கூடியது அல்ல. நீதிக்கான அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களையே நம்பியுள்ளனர்.

என்கௌண்டர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு அவை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. ‘என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்படுவதை காவல்துறையினர் பெருமையாக நினைக்கின்றனர். என்கௌண்டர்களை புனிதப்படுத்தும் திரைப்படங்கள் இவற்றிற்கு உரமூட்டுகின்றன. ‘தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்’ ‘கொடூர குற்றங்களை செய்தவர்களுக்கு எதற்காக அரசாங்க செலவில் சாப்பாடும் பாதுகாப்பும் கொடுக்க வேண்டும்?’ போன்ற வசனங்கள் மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளன.

இதனால்தான் என்கௌண்டர் காட்சிகளில் கரவோசம் எழுப்பும் மக்கள் நேரில் என்கௌண்டர் நடைபெறும்போது திரைப்பட வசனங்களை தங்களுக்கு சாதகமாக்கி அவற்றை ஆதரிக்கின்றனர். என்கௌண்டரில் கொலை செய்யப்படுபவன் ஒவ்வொருவனும் சாவதற்கு தகுதியானவன் என்ற எண்ணமே மக்கள் மனதில் உள்ளது. என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டவன் முஸ்லிம் என்றால் தீவிரவாதி, மலைவாழ் மக்கள் என்றால் மாவோயிஸ்ட், கூலித் தொழிலாளி என்றால் கடத்தல்காரன் என்ற பிம்பமும் மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளன.

தெலுங்கானாவில் கொலை செய்யப்பட்டவர்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் கிடையாது. ஆந்திராவில் கொல்லப்பட்டவர்கள் கூலி வேலை என்று கூறி அழைத்து செல்லப்பட்ட அப்பாவி கூலித் தொழிலாளிகள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் என்றாலும் அவர்களை கொலை செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது. காவல்துறை மற்றும் அவர்கள் ஆதரவு ஊடகங்கள் வடிக்கும் சித்திரங்களை அப்படியே மனதில் பதிய வைக்கும் போக்கு மாற வேண்டும்.

ஆந்திரா என்கௌண்டர் இன்னும் சில உண்மைகளையும் வெளியே கொண்டு வந்துள்ளது. மலைவாழ் மக்களின் மோசமான வாழ்க்கை நிலையும் அப்பகுதியின் பூர்வகுடிகளாக இருந்தும் அவர்களுக்கென்று சொந்தமாக நிலம் இல்லாததும் அவர்களின் வறுமையை பண முதலைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதும் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளன. அவர்களும் இந்நாட்டின் குடிமக்களே, மற்றவர்களை போன்று வாழ்வதற்கு அவர்களுக்கும் உரிமை உள்ளது என்பதை அரசாங்கமும் மக்களும் உணர வேண்டும்.

ஆந்திரா என்கௌண்டரை கண்டித்து தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது வரவேற்கத்தக்கது என்றாலும் இதனை ஒரு இனப்பிரச்சனையாக பார்க்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை. இதே என்கௌண்டர் எனும் அரக்கனுக்கு ஆந்திர மக்களும் இரையாகியுள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேப்போன்று தமிழக காவல்துறையும் என்கௌண்டர்களை நடத்தியுள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. பிரச்சனையை சரியான கோணத்தில் அணுகினால் மட்டுமே அதற்கான தீர்வு நமக்கு கிடைக்கும். மாறாக, இதனை ஒரு இனப்பிரச்சனையாக முன்வைப்பது பிரச்சனையை திசை திருப்புவதற்கே வாய்ப்பாக அமையும்.

அதே சமயம் ஆந்திர என்கௌண்டரை கண்டித்த பெரும்பான்மையினர் தெலுங்கானா என்கௌண்டர் குறித்து வாய் திறக்கவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று செய்யப்படும் பொய் பிரச்சாரத்திற்கு இவர்களும் பலியாகிவிட்டார்களோ என்ற சந்தேகங்களை இவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன. ஒரு இனத்தினரின் பிரச்சனைக்கு  அந்த இனத்தினர் மட்டுமே குரல் கொடுக்க வேண்டும், மற்றவர்கள் அதில் தலையிடக் கூடாது என்பதைத்தான் அதிகார வர்க்கம் விரும்புகிறது. இந்த வலையில் சமூக ஆர்வலர்களும் வீழ்ந்துவிட்டது துரதிஷ்டவசமானது.

ஆக, தனி மனிதனின் உயிர் வாழும் உரிமையை பறிக்கும் என்கௌண்டரை நாம் அனைவரும் ஒரே குரலில் உறுதியாக எதிர்த்தால் மட்டுமே அந்த அரக்கனை ஒழிக்க முடியும். இல்லையென்றால், காவல்துறை, இராணுவம், துணை இராணுவ படைகள் என அனைவரும் ஏகபோக உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் என்கௌண்டர் மரணங்களை தடுக்க முடியாது.

கொல்லப்படுவது சிறுபான்மையினரும் மலைவாழ் மக்களும் கூலித் தொழிலாளிகளும் தானே என்று வாய்மூடி மௌனமாக இருந்தால் நாளை இதே லிஸ்டில் யாருடைய பெயரும் சேர்க்கப்படலாம் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

(மே 2015 இதழில் வெளியான அட்டைப்பட கட்டுரை)

Comments are closed.