என்கௌண்டர் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மீண்டும் பதவி

0

 

போலி என்கௌண்டர் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி நரேந்திர கே.அமினுக்கு குஜராத் அரசு மீண்டும் பதவி வழங்கியுள்ளது. சொஹ்ராபுதீன் ஷேக், அவர் மனைவி கௌஸர் பீ மற்றும் இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்குகளில் என்.கே.அமின் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

ஜூன் 6, 2007ல் சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் கௌஸர் பீ போலி என்கௌண்டர் வழக்குளில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் இருந்து 2013ல் ஜாமீனில் வெளியே வந்தவர், இஸ்ரத் ஜஹான் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2015ல் இந்த வழக்கிலும் அமினுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இஸ்ரத் ஜஹான் வழக்கில் கைது செய்யப்பட்ட எவரும் தற்போது சிறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜாமீனில் உள்ள அமினுக்கு மாநில குற்றப்பதிவு பிரிவில் டி.எஸ்.பி. பதவியை குஜராத் மாநில அரசு வழங்கியுள்ளது. என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்ட அமின், ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

ஜாமீனில் வெளியே வந்தவுடன், தனக்கு மூன்று புரமோஷன்களை அரசாங்கம் தர வேண்டும் என்று அமின் கோரிக்கை வைத்திருந்தார். இதேபோல் என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள ராஜஸ்தான் காவல்துறை அதிகாரி எம்.என்.தினேஷிற்கு அம்மாநில பா.ஜ.க. அரசு மூன்று புரமோஷன்களை வழங்கியதை அமின் சுட்டிக்காட்டினார்.

தற்போது பதவி வழங்கப்பட்டுள்ள அமினுக்கு குஜராத் அரசாங்கம் புரமோஷன் வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மத்தியில் மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதும் ஜாமீனில் வெளியே வருவதும் சகஜமாகி விட்டது.

Comments are closed.