என்கௌண்டர் வழக்குகள்:முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் விடுதலை

0

சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கௌண்டர் வழக்குகளில் இருந்து முன்னாள் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா மற்றும் தொழில் அதிபர் விமல் பத்னி ஆகியோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ராஜஸ்தானில் மார்பிள் தொழில் செய்து வரும் விமல் பத்னியிடம் சொஹ்ராபுதீன் 24 கோடி ரூபாய் கேட்டதாகவும் இந்த தகவலை குலாப்சந்த் கட்டாரியவிடம் விமல் தெரிவித்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டார் கட்டாரியா.குஜராத் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சொஹ்ராபுதீனை போலி என்கௌண்டரில் கொலை செய்ய திட்டமிட்டார் அமித் ஷா என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
சொஹ்ராபுதீனை கொலை செய்வதற்கு விமல் பத்னி மிகப்பெரும் தொகையை கொடுத்ததாக இரு காவலர்கள் பேசிக்கொண்டிருந்ததை தாங்கள் கேட்டதாக சிபிஐ தரப்பு சாட்சிகளான பிரஜாபதி மற்றும் ஆஸம் கான் ஆகிய இருவரும் சாட்சியம் தெரிவித்திருந்தனர்.ஆனால் இவர்களின் சாட்சியம் மற்றும் மற்றவர்களின் சாட்சியத்தையும் ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.அத்துடன் இந்த என்கௌண்டர் சம்பந்தமாக அமித் ஷாவும் கட்டாரியாவும் சந்தித்தார்கள் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் கூறி கட்டாரியாவை இந்த வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.பி.கோஸாவி விடுவித்தார்.
மேலும் தொழில் அதிபர் பத்னி மற்றும் கட்டாரியா இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறி விமல் பத்னியையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.
இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே அமித் ஷாவை டிசம்பர் 30 அன்று சிபிஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2005ல் குஜராத் காவல்துறையினரால் சொஹ்ராபுதீன் ஷேக் அவருடைய மனைவி கௌசருடன் கடத்தி செல்லப்பட்டார்.பின்னர் சொஹ்ராபுதீன் போலி என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டார்.இந்த என்கௌண்டரின் சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் டிசம்பர் 2006ல் மற்றொரு என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டார்.இந்த இரண்டு வழக்குகளையும் 2013ல் உச்சநீதி மன்றம் இணைத்தது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என்பது கவனிக்கதக்கது.

Comments are closed.